பாண்டியன் நெடுஞ்செழியன்
பாண்டியன் நெடுஞ்செழியன்
அங்கம் – 1, காட்சி – 1
இடம்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல்
இரும்பொறையின் அரண்மனை
பங்குபெறுவோர்: சேரமான்
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (சேரன்), அமைச்சர் ஆதன்,
படைத்தளபதி பொறையன்
பின்னணி: பல ஆண்டுகளுக்குமுன்,
நிலந்தரு திருவிற் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த கடல்கோளால் பாண்டிய நாடு
அந்த நாட்டின் ஒரு பகுதியை இழந்தது. தன் நாட்டின் ஒரு பகுதியைக் கடல் கொண்டதால், பாண்டிய
மன்னன், சேர நாட்டிலிருந்து நிலங்களைக் கைப்பற்றித் தன் நாட்டோடு இணைத்துக்கொண்டான்.
பாண்டிய மன்னனோடு
போரிட்டுத் தன் முன்னோர்கள் இழந்த தன் நாட்டின் பகுதியை சேரன் மீட்க
விரும்புகிறான்.
சேரன்: அமைச்சரே!
பல ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த கடல்கோளால், பாண்டிய நாட்டின் ஒரு பகுதி கடலுக்குள் சென்றது.
அமைச்சர் ஆதன்: அதைப்பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறேன், மன்னா.
சேரன்: அப்பொழுது
பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பவன், தான் இழந்த நிலத்திற்கு
ஈடாக நம் நாட்டின்மீது படையெடுத்து, நம் நாட்டின் ஒரு பகுதியைத் தன் நாட்டோடு இணைத்துக்கொண்டான்.
அமைச்சர் ஆதன்: ஆம் மன்னா!
அது பல ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. அதற்கு இப்பொழுது நாம் என்ன செய்ய
முடியும்?
சேரன்: பாண்டியனோடு
போரிட்டு நாம் இழந்த பகுதியை மீட்க வேண்டும்.
அமைச்சர் ஆதன்: மன்னா! தங்களுக்குத்
தெரியாதது ஒன்றுமில்லை. பாண்டிய மன்னனுடைய படை மிகவும் வலிமை உடையது. பாண்டிய மன்னனைப்
போரில் வெல்வது அவ்வளவு எளிதில்லை.
சேரன்: தளபதி அவர்களே!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நம்மால் பாண்டியனை வெல்ல முடியாதா?
பொறையன்: மன்னா! அமைச்சர்
சொல்வது உண்மை. நம்மைவிடப் பாண்டியன் படைவலிமை மிகுந்தவன். அவனை வெல்வது அவ்வளவு எளிதில்லை.
சேரன்: இப்பொழுது
பாண்டிய நாட்டில் ஆட்சியில் இருப்பவன், ஓர் இளைஞன். அவன் இப்பொழுதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறான்.
அவனை வெல்வதற்கு இதுவே தக்க தருணம் என்று நான் நினைக்கிறேன்.
அமைச்சர் ஆதன்: மன்னா! அவன்
இளைஞனாக இருந்தாலும், அவனுடைய படை மிகுந்த வலிமை உடையது. நாம் சோழ மன்னனோடு சேர்ந்து போரிட்டால் பாண்டியனை
வெல்லலாம் என்பது என் கருத்து.
பொறையன்: மன்னா! சோழ
நாட்டில் சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் நடந்ததற்குப்
பிறகு, அவர்களின் படைவீரர்கள் சிலர் பூம்புகாரிலும் சிலர் உறையூரிலும் இருக்கிறார்கள்.
ஆகவே, இப்போழுது, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியிடம் உறையூரில் உள்ள படை அவ்வளவு
வலிமை உடையதாகத் தெரியவில்லை.
சேரன்: தளபதி பொறையன்
அவர்களே! நம்மால் பாண்டியனை வெல்ல முடியாது என்கிறீர்களா? சோழனோடு சேர்ந்தாலும் அவனை
வெல்ல முடியாதா?
பொறையன்: பாண்டியனை
வெல்வதற்கு ஒரு வழி இருக்கிறது.
சேரன்: அது என்ன?
விளக்காமாகக் கூறுங்கள்.
பொறையன்: மன்னா! திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய ஐந்து குறுநிலமன்னர்களும்
படைவலிமை மிக்கவர்கள். அவர்களுக்கும் பாண்டியனுக்கும் பகை என்று ஒற்றர்களின் மூலம்
கேள்விப்பட்டேன். அவர்கள் ஐவரும்கூடிப் பாண்டியனோடு போர்புரியும் நோக்கத்தில்
இருக்கிறார்கள். நாம் சோழனோடும் அந்த ஐவரோடும் சேர்ந்து பாண்டியனை எதிர்த்துப்
போரிட்டால், அவனைக் கட்டாயம் வெல்லலாம்.
சேரன்: தளபதி அவர்களே!
நீங்கள் சொல்வது சிறந்த கருத்தாகத் தோன்றுகிறது. நீங்கள் சென்று அந்த ஐந்து குறுநில
மன்னர்களையும் சந்தித்து, நம்மோடும் சோழனோடும் சேர்ந்து பாண்டியனை எதிர்த்துப் போரிடுவதற்கு
நான் அழைத்ததாகக் கூறுங்கள். அமைச்சர் அவர்களே! நீங்கள் சென்று சோழ மன்னனைச் சந்தித்துப்
பாண்டியனோடு போரிடுவதைப் பற்றிக் கூறி, அவனையும் நம்மோடு சேர்ந்து போரிடுவதற்கு நான்
அழைத்ததாகக் கூறுங்கள்.
அமைச்சர் ஆதன்: சரி, மன்னா!
நான் இன்றே செல்கிறேன்.
பொறையன்: மன்னா! நானும்
இன்றே புறப்படுகிறேன்.
அங்கம் –
1, காட்சி – 2
இடம்: சேரனின் அரண்மனை
பங்குபெறுவோர்: சேரன், அமைச்சர்
ஆதன், தளபதி பொறையன்
பின்னணி: சோழனைச் சந்தித்த
பிறகு அமைச்சர் திரும்பிவருகிறார். குறுநில மன்னர் ஐவரையும் சந்தித்த பிறகு தளபதி பொறையன்
திரும்பி வருகிறார்.
சேரன்: வாருங்கள்,
அமைச்சர் அவர்களே! சோழனைச் சந்தித்தீர்களா? அவன் என்ன சொன்னான்?
அமைச்சர் ஆதன்: மன்னா! சோழ
மன்னன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைச் சந்தித்தேன். அவன் நம்மோடு சேர்ந்து பாண்டியனை
எதிர்த்துப் போரிட ஆவலாக உள்ளான்.
சேரன்: பொறையன்! நீங்கள்
போன காரியம் என்ன ஆயிற்று?
பொறையன்: அந்த ஐந்து
குறுநில மன்னர்களும் நம்மோடு சேர்ந்து பாண்டியனை எதிர்த்துப் போரிட விரும்புகிறார்கள்.
சேரன்: மகிழ்ச்சி.
பொறையன்! இந்தப் போர் உங்கள் தலைமையில் நடைபெறப் போகிறது. வரும் முழு நிலா அன்று அனைவரையும்
மதுரைக்குத் தங்கள் படையோடு வரச்சொல்லிச் செய்தி அனுப்புங்கள். அன்று நாம் பாண்டியனின்
அரண்மனையை முற்றுகை இடுவோம்; போரைத் தொடங்குவோம்; வெற்றி பெறுவோம்!
அங்கம் –
2, காட்சி – 1
இடம்: பாண்டியன் தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியன் (பாண்டியன்) அரண்மனைப் பூங்கா
பங்குபெறுவோர்: பாண்டியன்,
எழிலி, ஒற்றன்
பின்னணி: பாண்டியனும்
அவன் காதலி எழிலியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது ஒற்றன் ஒருவன் அங்கு வருகிறான்.
பாண்டியன்: எழிலி! உன்னைப்
பார்த்துப் பல நாட்களாயின. நீ நலமா?
எழிலி: நான் நலமாகத்தான்
இருக்கிறேன். ஆனால், நீங்கள் மன்னராக முடிசூடிக்கொண்டபின் எப்பொழுதும் அரசுப்பணிகளிலேயே
காலத்தைச் செலவழிக்கிறீர்கள். முன்புபோல், உங்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறதே! எப்பொழுதாவது,
உங்களைப் பார்த்து ஒரு சில வார்த்தைகள் பேசினால்கூட உங்கள் அம்மா, ”அவனுடன் உனக்கு
என்ன பேச்சு? ஏன் அவன் நேரத்தை வீணாக்குகிறாய்?
போய் உன் வேலையைப் பார்.” என்று என்னைக் கோபித்துகொள்கிறார்.
பாண்டியன்: நீ சொல்வது
எனக்குப் புரிகிறது. நாம் இருவரும் காதலிக்கிறோம் என்பது அம்மாவுக்குத் தெரியாது. அவர்
உன்னை ஒரு பணிப்பெண்ணாகத்தான் பார்க்கிறார். நான் விரைவில் அம்மாவிடம் நம் காதலைப்
பற்றிக் கூறி, உன்னைத் திருமணம் செய்துகொள்வேன். அது உறுதி. நீ எப்பொழுதும் ஒரு பாட்டுப்
பாடுவாயே, அதைப் பாடு. உன் பாட்டைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்.
எழிலி: என் பாட்டைக்
கேட்கக்கூட உங்களுக்கு நேரமிருக்கிறதா? அதோ, யாரோ ஒருவர் வருகிறார். முதலில் அவரிடம்
பேசி, அவரை அனுப்புங்கள். பிறகு நான் பாடுகிறேன்.
பாண்டியன்: ஒற்றரே! என்ன
இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கிறீர்கள்!
ஒற்றன்: மன்னா, நீங்கள்
இருவரும் தனிமையில் இருக்கும் நேரத்தில் வந்து உங்களுக்குத் தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்கவும்.
ஓர் அதிர்ச்சிகரமான செய்தி. அதை உங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றுதான் விரைந்து வந்தேன்.
பாண்டியன்: சரி, செய்தியைக்
கூறுங்கள்.
ஒற்றன்: மன்னா! சேரனும்
சோழனும் வேறு சில குறுநில மன்னர்களும் சேர்ந்து நம்மை எதிர்த்துப் போரிட வரப்போவதாகக்
கேள்விப்பட்டேன். வரும் முழு நிலா அன்று நமது அரண்மனையை முற்றுகை இடப்போவதாகக் கேள்விப்பட்டேன்.
முழு நிலாவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன.
பாண்டியன்: நீங்கள் உடனே
சென்று, அமைச்சர் ஆதனையும், படைத்தளபதி பொறையனையும் அரண்மனைக்கு வந்து என்னைச் சந்திக்கச்
சொல்லுங்கள்.
ஒற்றன்: நான் இப்பொழுதே
சென்று அவர்களை வரச்சொல்கிறேன்.
பாண்டியன்: எழிலி, நான்
இப்பொழுதே அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நாம் விரைவில் சந்திப்போம். நான் சொன்னது
நடக்கும். நீ மனம் தளராதே!
அங்கம் –
3, காட்சி – 1
இடம்: பாண்டியனின்
அரண்மனை
பங்குபெறுவோர்: பாண்டியன்,
பாண்டியனின் தாயார், எழிலி, படைத்தளபதி மாறன், அமைச்சர் பெருவழுதி, அவர்களோடு பணிபுரியும்
சிலர்
பின்னணி: சேரனும், சோழனும்
குறுநில மன்னர் ஐவரும் அவர்கள் படையோடு வந்து பாண்டியனின் அரண்மனையை முற்றுகை இடுகிறார்கள்.
பாண்டியன் போருக்குப் புறப்படுவதற்குமுன் வீரர்களை ஊக்குவிக்கிறான்; சூளுரைக்கிறான்.
தொடர்புடைய
புறநானூற்றுப் பாடல்: 72
பாண்டியன்: படைத்தளபதி
அவர்களே, வீரர்களே! என்னுடைய வலிமையைக் கண்டு அஞ்சாது, என்னைப் பற்றி இழிவாகப் பேசும் இந்தப் பகைவர்களை நான்
அழிப்பேன்; அவர்களையும் அவர்களுடைய முரசுகளையும் கைக்கொள்வேன். நான்
இந்தப் போரில் வெற்றிபெறாவிட்டால், என் நாட்டு மக்கள்
”கொடுங்கோலன்” என்று என்னைத் தூற்றட்டும்.
மற்றும், மிகுந்த
சிறப்பும் உயர்ந்த கேள்வியுமுடைய மாங்குடி மருதன் போன்ற புலவர்கள் என்னைப் பாடாது
என் நாட்டைவிட்டு நீங்கட்டும். என்னால் ஈகை செய்ய இயலாத அளவுக்கு நான் வறுமையை
அடைவேனாகுக.
அனைவரும்: வெற்றி நமதே!
வெற்றி நமதே!
பாண்டியன்: விழுப்புண்படாத
நாட்களெல்லாம் வீண்நாட்கள் என்று கருதும் வீரர்களே! இந்தப் பகைவர்களின் முற்றுகையைத்
தகர்ப்போம்; அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்வோம். நமது படைத்தளபதி அஞ்சா நெஞ்சன் மாறன்
வெற்றியை நோக்கி உங்களை வழிநடத்துவார். வெற்றி பெறுவோம்! வாகை சூடுவோம்!
பாண்டியன்: (தாயாரை வணங்குகிறான்)
அம்மா! நான் போருக்குச் சென்றுவருகிறேன். என்னை வாழ்த்துங்கள்!
பாண்டியனின் தாயார்: மகனே! நீ பாண்டியர்
பரம்பரையில் தோன்றியவன். நீ பாய்ந்துவரும் புலியைக்கண்டு அஞ்சாதவன்; மார்பில் தைத்த
அம்பைக் கையில் எடுத்துப் பகைவர்களின் களிற்றின்மேல் எறிபவன் நீ. புலிக்கும் வில்லுக்கும்
அஞ்சாத உனக்குப் புலியையும் வில்லையும் தங்கள் கொடிகளில் கொண்ட இவர்களை வெல்வது எளிது.
சென்று வா மகனே! வென்று வா!
எழிலி: (மறைவான இடத்தில்
இருந்து, எழினி நீர் வடியும் கண்களால் பாண்டியனை வாழ்த்தி வழியனுப்புகிறாள். பாண்டியனும்
அவளோடு தன் கண்களால் உறவாடி, விடைபெறுகிறான்.)
அங்கம் –
4, காட்சி – 1
இடம்: போர்க்களம்
பங்குபெறுவோர்: பாண்டியன்,
சோழன், சேரன், குறுநில மன்னர்கள் ஐவர்
பின்னணி: பாண்டியன்
போர் புரிவதைக் கண்டு சோழனும் சேரனும் வியக்கிறார்கள்.
தொடர்புடைய
புறநானூற்றுப் பாடல்: 77
சோழன்: அவனைப் பார்த்தால் இப்பொழுதுதான் சலங்கையைக் கழற்றிவிட்டு கழல்கள்
அணிந்திருப்பதைப்போல் தோன்றுகிறான். சிறிய வளையல்களைக் கழற்றிய கைகளில் வில்லைப்பற்றிக்கொண்டு நெடுந்தேரின்
முன் தளத்தில் அழகாக நிற்கின்றானே,
அவன் யார்?
திதியன்: அவன் இன்னும் சிறுவர்கள் அணியும்
தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்றுதான்
சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! அவன் யார்?
எருமையூரன்: வரிசை வரிசையாக வெகுண்டு வந்த
புதுப்புது வீரர்களைக் கண்டு அவன் வியக்கவும் இல்லை; அவர்களை இழிவு படுத்தவும் இல்லை. அவர்களை இறுகப் பிடித்து, அவர்களது உடலைக் கவிழ்த்து நிலத்தில் படுமாறு வீழ்த்தி
அழித்ததை நினைத்து அவன் மகிழவும் இல்லை;
தன் செயலை
நினைத்துப் பெருமிதமும் அடையவில்லையே! அவனைப் பார்த்தால் விந்தையாக இருக்கிறதே!
யார் அந்த வீரன்?
சேரன்: அவன்தான் பாண்டியன் நெடுஞ்செழியன்.
நான் அவன் ஒன்றும் அறியாத இளைஞன் என்று
நினைத்தேன். அவன் இத்துணை வீரமாகப் போரிடுவான் என்று நினைக்கவில்லை. அவன்
மட்டுமல்ல. அவன் வீரர்களும் போரிடுவதில் ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
நீங்கள் அனைவரும் உங்கள் வீரர்களை
எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்.
அங்கம் –
5, காட்சி – 1
இடம்: பாண்டியனின்
அரசவை
பங்குபெறுவோர்: புலவர்கள்
குடபுலவியனார், இடக்குன்றூர் கிழார், கல்லாடனார், மாங்குடி மருதன்
பின்னணி: மதுரையை முற்றுகை
இட்ட எழுவரையும் அவர்களின் படையையும் பாண்டியன் தலையாலங்கானம் வரை துரத்திச் சென்று
தலையாலங்கானத்தில் போர் புரிந்தான். பாண்டியன் வெற்றி பெற்றான். புலவர்கள் அவனைப் பலவாறாகப்
புகழ்கிறார்கள்.
தொடர்புடைய
புறநானூற்றுப் பாடல்கள்: 19,23,26,76,78,371
இடைக்குன்றூர் கிழார்: மன்னா!
உன்னுடைய செல்வம் மிகுந்த நாட்டையும்,
உன்னுடைய ஆற்றலையும் அறியாமல், ”கூடிப் போர்
செய்வோம்” என்று உன்னிடத்தில் வந்த எழுவரின் வலிமை
அடங்குமாறு நீ ஒருவனாக நின்று, போர்க்களத்தில் அவர்களை அழித்தாய். அதுபோல் எவரும்
எழுவரைத் தனியொருவனாக இருந்து வெற்றி பெற்றதாக இதற்கு முன் நான்
கேள்விப்பட்டதில்லை. தலையாலங்கானத்தில் நீ பெற்ற வெற்றி மிகப் பெரிய வெற்றி.
மன்னா! நீ நீடூழி வாழ்க!
குடபுலவியனார்: தலையாலங்கானத்தில்
நடைபெற்ற போரில், பலரைத் தனியன்
ஒருவனாக இருந்து எழுவரைக் கொன்ற உனக்குக் கூற்றுவன் ஒப்பானவானா என்று ஆராயத்தக்க
அளவிற்கு உன் வெற்றி இருந்தது. அந்தப் போர்க்களத்தில் எழுவரின் வலிமையையும் நீ
அழித்தாய். உன் அழிக்கும் ஆற்றலைக் கண்டுக் கூற்றுவன் நாணுகிறான்.
இடைக்குன்றூர் கிழார்: குகையிலிருந்த
புலி இரை தேடுவதற்காகச் சோம்பல் முறித்து வெளியே வருவதுபோல் நீ போருக்கு வந்தாய்.
உன்னை மதிக்காமல், ”நாங்கள்
சிறந்தவர்கள்; பெரியவர்கள்.
நம்மோடு போர் புரிய வந்திருப்பவன் இளைஞன்;
இவனைப் போரில்
வென்றால் நாம் கொள்ளை கொள்ளக் கூடிய பொருட்கள் இங்குப் பெருமளவில் உள்ளன” என்று ஏளனத்தோடு கிளர்ந்து எழுந்து அணியணியாக வந்த
பகைவர்கள் புறமுதுகு காட்டி ஓட, அவர்களைத்
தலையாலங்கானத்தில் கொல்ல விரும்பாமல்,
நீ அவர்களைத் தொடர்ந்து சென்று, அவர்களின்
சொந்தமான ஊர்களிலேயே அவர்களைக் கொன்றாய்.
கல்லாடனார்: உன்னுடைய யானைகள் நீரை உண்டதால் பகைவர்களின் நீர்த்துறைகள் கலங்கின.
உன் வீரர்கள் பகைவர்களின் காவற்காடுகளை
அழித்தார்கள்; பகைவர்களின் நாட்டுக்குத் தீ வைத்தார்கள். நாள்தோறும்
தம்மிடம் வந்து இன்னும் இது போன்ற செயல்களை நீ செய்வாயோ என்று உன் பகைவர்கள்
அஞ்சுகிறார்கள்.
மாங்குடி
மருதன்: மன்னா! உன்னை
எதிர்த்து நின்ற வேந்தர்களை அழித்து அவர்களது புகழ் பொருந்திய முரசுகளை நீ
கைப்பற்றினாய். அவ்வரசர்களின் முடியணிந்த தலைகளை அடுப்பாகவும், அவர்களின் குருதியை உலை நீராகவும், வீரவளை அணிந்த அவர்களின் கைகளைத் துடுப்பாகவும் கொண்டு
துழாவிச் சமைக்கப்பட்ட உணவால் போர்க்களத்தில் வேள்வி செய்தாய். உன் வீரத்தை
எப்படிப் புகழ்வது என்று நான் அறியேன். நீ நீடூழி வாழ்க!
கல்லாடனார்: தலையாலங்கானத்துப் போரில் சிதைந்து
கிடந்த பிணங்களைப் பேய்மகளிர் தின்று மகிழ்ந்து உன்னை வாழ்த்தினார்கள் என்று
பொருநன் ஒருவன் கூறியதாகக் கேள்விப்பட்டேன்.
பாண்டியன்: பகைவர்கள் வந்து நம்மைத்
தாக்கும்பொழுது, அவர்களை எதிர்த்துப் போரிட்டு நாம்மையும் நம் நாட்டையும்
காப்பாற்ற வேண்டியது என் கடமை. நான் என் கடமையைத்தான் செய்தேன். அதற்காக நீங்கள் என்னைப்
புகழத் தேவையில்லை. உங்கள் அன்பிற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. உங்கள்
அனைவருக்கும் என் பரிசு. (பாண்டியன் புலவர்களுக்குப் பரிசளிக்கிறான்)
அங்கம் – 6, காட்சி – 1
இடம்:
பாண்டியனின் அரண்மனை
பங்குபெறுவோர்:
பாண்டியன், பாண்டியனின் தாயார்
பின்னணி: தன்
தாயாரின் எதிர்ப்பையும் கடந்து, பாண்டியன் எழிலியை மணந்துகொள்கிறான்.
பாண்டியன்:
அம்மா! நான் எழிலையைத் திருமணம் செய்துகொள்ள
விரும்புகிறேன்.
பாண்டியனின்
தாயார்: எழிலியைத் திருமணம் செய்துகொள்ளப்
போகிறாயா? அவள் நம் அரண்மனையில் ஒரு பணிப்பெண். உனக்குப் பெண் கொடுக்க மன்னர்கள் பலர்
காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பாண்டியன்: அவளும் ஒரு மன்னனின் மகள்தான். என் தந்தையோடு அவள் தந்தை போரிட்டார்;
போரில் தோல்வியுற்றார். அதனால், எழிலையும் அவள் தாயாரையும் என் தந்தை நம் அரண்மனைக்குக்
கொண்டுவந்து பணிப்பெண்களாக்கினார். இது அனைவரும் அறிந்த செய்தி. எல்லாவற்றிற்கும் மேலாக,
நான் அவளைக் காதிலிக்கிறேன். அவளும் என்னைக் காதலிக்கிறாள். அவளைத் திருமணம் செய்துகொள்வதாக
நான் அவளுக்கு வாக்களித்துள்ளேன்.
பாண்டியனின்
தாயார்: உன் செயல் சரியானதாக எனக்குத்
தெரியவில்லை. நீ இந்த நாட்டு மன்னன். உன் விருப்பப்படியே செய்.
(தமிழ்
முறைப்படி பாண்டியனுக்கும் எழிலிக்கும் திருமணம் நடைபெறுகிறது.)
அங்கம் – 6, காட்சி – 2
இடம்:
பாண்டியனின் அரண்மனை
பங்குபெறுவோர்:
பாண்டியன், எழிலி
பின்னணி: திருமணத்திற்குப்
பிறகு முதுவெள்ளிலை மற்றும் கொற்கை ஆகிய ஊர்களுக்குச் சென்று, அங்கு சில நாட்கள் தங்கியிருந்து
அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய பிறகு பாண்டியன் மதுரைக்குத் திரும்பி வருகிறான்.
எழிலி: மன்னா! விரைவில் திரும்பிவருவதாகாக் கூறிவிட்டு, இத்தனை நாட்கள்
முதுவெள்ளிலையிலும் கொற்கையிலும் தங்கிவிட்டீர்களே! உங்களைப் பிரிந்து நான் எவ்வளவு
வருத்தப்பட்டேன் தெரியுமா?
பாண்டியன்: எழிலி! நீ சொல்வது எனக்குப் புரிகிறது. உன்னைப் பிரிந்து இருந்தது
எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது.
எழிலி:
அதோ பாருங்கள்! அந்தக் குளத்தில் இரண்டு அன்றில் பறவைகள் உள்ளன.
அவை எப்பொழுதும் பிரியாமல் ஒன்றாகவே இருக்கின்றன. அவற்றைப்போல் நாம் இருவரும் பிரியாமல்
வாழ வேண்டும் என்பது என் விருப்பம்.
பாண்டியன்: அதுதான் என் விருப்பமும். என்ன செய்வது? மன்னனாக இருந்தால்
மக்களின் நல்வாழ்வுக்காக உழைப்பது கடமை அல்லவா?
எழிலி: கணவனாக இருந்தால் மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது கடமை
அல்லவா? இனிமேல் நீங்கள் எங்கும் போக மாட்டீர்கள் அல்லவா?
பாண்டியன்: இன்னும் ஒரு மாதம் உன்னோடுதான் இருக்கப்போகிறேன். பிறகு சாலியூரில்
போர் நடக்கப்போகிறது.
எழிலி: மீண்டும் ஒரு போரா? இந்தப் போருக்கு முடிவே இல்லையா? நீங்கள் ஒவ்வொரு முறையும் போருக்குப் போகும்பொழுது,
உங்களைப் பிரிந்து நான் எவ்வளவு வேதனை படுகிறேன் தெரியுமா? நீங்கள் உங்கள் விருப்பப்படி
எப்பொழுதும் எவரோடாவது போர் புரிந்துகொண்டே இருங்கள். நான் இனிமேல் ஒன்றும் சொல்லப் போவதில்லை. (எழிலி
அழுகிறாள்)
பாண்டியன்: உன் ஊடலுக்குக் காரணம் புரிகிறது. சாலியூரில் நடைபெறப்போகும்
போர் கார்காலத்தில் முடிந்துவிடும். கார்காலம் முடிவதற்குள் நான் திரும்பிவந்துவிடுவேன். சரி, சரி. ஊடியது போதும். ஊடுதல் காமத்திற்கு இன்பம். அதற்கின்பம் என்ன என்று
உனக்குத் தெரியுமல்லவா?
அங்கம் – 6, காட்சி – 3
இடம்:
பாண்டியனின் அரண்மனையில் உள்ள அந்தப்புரம்
பங்குபெறுவோர்:
எழிலி, பணிப்பெண்கள் ஐவர்
பின்னணி:
சாலியூரில் நடைபெறும் போருக்குப் பாண்டியன் சென்றிருக்கிறான்.
வாடைக்காலம் தொடங்கிவிட்டது. கார்காலத்தில் திரும்பிவந்துவிடுவேன் என்று கூறிச் சென்ற
பாண்டியன் இன்னும் வரவில்லை. கணவனின் பிரிவைப் பொறுத்துகொள்ள எழிலி முயற்சி செய்கிறாள்.
தொடர்புடைய
சங்க இலக்கியப் பாடல்: நெடுநல்வாடை
பணிபெண்
1: அம்மா, எழுந்திருங்கள். எழுந்து வாருங்கள்.
நாங்கள் உங்களுக்கு ஒப்பனை செய்கிறோம்.
மணிப்பெண்
2: ஆம் அம்மா வாருங்கள். இந்த முத்துமாலையை அணிந்துகொள்ளுங்கள்.
எண்ணெய் தடவாததால், உங்கள் தலைமுடி வறண்டு கிடக்கிறது; நெற்றியில் புரளுகிறது. நீங்கள்
அணிந்திருக்கும் சிறிய தாளுருவியை நீக்கிவிட்டு, இந்த அழகிய காதணியை அணிந்துகொள்ளுங்கள்.
பணிப்பெண்
3: நீங்கள் அணிந்திருக்கும் சங்குவளையல்களையும்
காப்புக்கயிற்றையும் களைந்துவிட்டு, இந்தப் பொன்னாலான வளையல்களை அணிந்துகொள்ளுங்கள்.
மாசு படிந்த பருத்திப் புடைவையை நீக்கிவிட்டு, பூவேலைப்பாடுகளோடு கூடிய இந்தப் பட்டுப்புடைவையை
அணிந்துகொள்ளுங்கள்.
பணிப்பெண் 4: இந்த ஒப்பனைகளெல்லாம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் கணவர் இப்பொழுதே வந்துவிடுவார். நீங்கள் முன்புபோல் ஒப்பனை செய்துகொண்டு அழகாக
இருப்பதைக் கண்டு மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். உங்களை அப்படியே அள்ளி அணைத்துக்கொள்வார்.
எழிலி: (வெட்கத்தோடு) நீங்கள் அனைவரும் என்னை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக
இவற்றையெல்லாம் கூறுகிறீர்கள். கார்காலத்தில் திரும்பிவருகிறேன் என்று சொல்லிச்சென்ற
மன்னர், வாடைக்காலம் வந்த பிறகும் வரவில்லை. அவர் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்
நான் தவிக்கிறேன். அவர் வந்துகொண்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டவுடன் நீங்கள்
கூறும் ஒப்பனைகள் அனைத்தையும் செய்துகொள்கிறேன்.
பணிப்பெண்
2: நேற்று நாங்கள் அனைவரும் சென்று, “மன்னர்
விரைவில் வெற்றியோடு திரும்பி வரவேவேண்டும்” என்று கொற்றவையை வணங்கி வந்தோம். மன்னர்
விரைவில் வந்துவிடுவார்.
எழிலி: நீங்கள் அனைவரும் இதைத்தான் பலநாட்களாகக் கூறுகிறீர்கள். இந்த
வாடைக்காலம் எனக்கு மிக நீண்டதாகத் தோன்றுகிறது. (அவளுடைய கண்ணிமைகளில் நிரம்பி வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, எழிலி வருந்துகிறாள்.)
பணிப்பெண்
5: அம்மா! நான் ஒரு வேலையாக அந்தப்புரத்தைவிட்டு,
அரண்மனைக்குள் சென்றேன். அங்கு ஒரே ஆரவாரம். சாலியூரிலிருந்து நமது படைவீரர்கள் திரும்பிவந்துகொண்டிருக்கிறார்கள்.
மன்னர் தேரில் வந்துகொண்டிருக்கிறார் என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அரண்மனைக்கு
வந்துவிடுவார் என்றும் கேள்விப்பட்டே.ன்.
எழிலி: மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னாய். இந்த வாடைக்காலம் எனக்கு
நீண்டதாக இருந்தாலும் மன்னருக்கு நல்லதாக அமைந்தது. இது ஒரு நெடுநல்வாடை. வளையல்களையும்,
மற்ற அணிகலன்களையும், பட்டுப்புடைவையும், கொண்டுவாருங்கள். எனக்கு விரைவாக ஒப்பனை செய்யுங்கள்.
மன்னர் வரும்போழுது, நான் அவரை வரவேற்க வேண்டும்.
(பணிப்பெண்கள்
எழிலிக்கு ஒப்பனை செய்கிறார்கள்)
அங்கம் – 7, காட்சி – 1
இடம்: மதுரை நகரம்
பங்குபெறுவோர்: புலவர் மாங்குடி மருதன், புலவர் பொருந்தில் இளங்கீரனார்
பின்னணி: மாங்குடி மருதனைப் பார்ப்பதற்குப் புலவர் பொருந்தில் இளங்கீரனார்
மதுரைக்கு வருகிறார். இருவரும் மதுரையைச் சுற்றிப் பார்க்கிறார்கள்.
தொடர்புடைய சங்க இலக்கியப் பாடல்: மதுரைக் காஞ்சி
மாங்குடி: வாருங்கள் இளங்கீரனாரே! உங்களைச் சந்தித்துப் பல நாட்களாயின.
நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?
இளங்கீரனார்: ஐயா, நான் நலமாக உள்ளேன். நீங்கள் நலமா? உங்களையும் பார்த்துவிட்டு,
அப்படியே மதுரை நகரத்தையும் சுற்றிப் பார்க்கலாம் என்று வந்தேன்.
மாங்குடி மருதனார்: இதுவரை நீங்கள் மதுரையைப் பார்த்ததில்லையா?
இளங்கீரனார்: இல்லை. நான் சேர நாட்டிலேயே இதுவரை என் வாழ்நாட்களைக் கழித்தேன்.
மதுரை நகரத்தையும் உங்கள் மன்னன் நெடுஞ்செழியனையும் அனைவரும் புகழ்கிறார்கள். அதனால்,
மதுரையையும் மதுரை மன்னனையும் பார்க்கலாம் என்று வந்தேன். எனக்கு மதுரையைப் பற்றி அதிகம்
தெரியாததால், உங்களோடு சென்று, மதுரையையும் மன்னனையும் பார்க்கலாம் என்று நினைத்தேன்.
மாங்குடி மருதனார்: மகிழ்ச்சி. முதலில் நீங்கள் உணவு அருந்துங்கள். பிறகு சற்று
இளைப்பாறுங்கள். அதன் பின்னர் நாம் மதுரைக்குச் செல்வோம். இன்று பகலும் இரவும் மதுரையைச்
சுற்றிப் பார்ப்போம். நாளை காலை மன்னனைப் பார்க்கலாம். (இருவரும் மதுரையைப் பார்ப்பதற்குப்
புறப்படுகிறார்கள்.)
இளங்கீரனார்: ஐயா, நான் வரும் வழியில் நீர் வளமும் நில வளமும் நிறைந்த மருத
நிலம் இருந்தது; மான்களும், பயிர்களும், மலர்களும் நிறைந்த முல்லை நிலம் இருந்தது;
நெல்லும், வெண்கடுகும், இஞ்சியும் மஞ்சளும் நிறைந்த குறிஞ்சி நிலத்தையும் அங்கு வாழும்
மக்களின் ஆரவாரங்களையும் பார்த்தேன். பாலை நிலத்தில் கையில் வில்லோடு காவல் காப்பவர்களைப்
பார்த்தேன்; ஏற்றுமதியும் இறக்குமதியும் இடைவிடாமல் நடைபெறும் கடற்கரையையுடைய நெய்தல்
நிலத்தைப் பார்த்தேன். அவை அனைத்தும் கன்கொள்ளாக் காட்சியாக இருந்தன.
மாங்குடி மருதனார்: ஆம். பாண்டிய நாடில் மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை மற்றும்
நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களும் உள்ளன. மதுரை நகரம் இந்த ஐவகை நிலங்களுக்கும் நடுவே உள்ளது.
இத்தகைய சிறப்புடைய வளம் மிகுந்த நாட்டிற்கு நடுவில் பொய்கைகளும் பூந்தோட்டங்களும்
சூழ்ந்த வைகை நதியின் கரையில் மதுரை நகரம் உள்ளது.
இளங்கீரனார்: ஐயா! இந்த நகரம் மிகவும் அழகாக உள்ளது.
மாங்குடி மருதனார்: இந்த அழகிய நகரத்தில், ஆழமான அகழியும். விண்ணைத் தொடுமளவுக்கு
உயர்ந்த மதிலும் உள்ளன. அந்த மதிலில் உள்ள வாயில் வழியாக மக்களின் போகுவரத்து இடையறாது
நீரோடும் வைகையைப்போல் இருக்கும். வாருங்கள், அந்த மதிலைக் கடந்து உள்ளே செல்லலாம்.
இளங்கீரனார்: இங்கு மிகுந்த ஆரவாரமாக உள்ளதே!
மாங்குடி மருதனார்: இங்கு நாளங்காடியும் அல்லங்காடியும் உள்ளன. பலவகையான மக்கள்
நடமாட்டமும் ஆரவாரமும் அதிகமாக இருக்கும்.
இளங்கீரனார்: நாளங்காடி, அல்லங்காடி ஆகியவற்றைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.
அவற்றைப் பற்றிக் கூறுங்கள்.
மாங்குடி மருதனார்: நாளங்காடி என்றால் பகலில் நடைபெறும் கடைகள். அங்குப் பலவிதமான கடைகள் இருக்கும். அவற்றில் பலவண்ணக்
கொடிகள் அசைந்துகொண்டிருக்கும். அந்தக் கடைத்தெருவில்
பலமொழிகள் பேசும் மக்களின் ஆரவாரம் எழும். ஒருபக்கம் முரசை முழக்கி மக்களுக்குத் திருவிழாவை
அறிவிக்கும் ஒலியும், மற்றொரு பக்கம் இசைக்கருவிகள் முழங்கக்கேட்டுக் களித்து ஆடுபவர்களின்
ஆரவாரமும் இருக்கும். நால்வகைப் படைகளின் நடமாட்டம் இருக்கும். நாளங்காடியில் வணிகர்கள்
மேன்மேலும் பொருள்களைக் கொண்டுவரக் கொண்டுவரப் பொருள்கள் குறையாமல் இருக்கும்.
இளங்கீரனார்: அதோ அங்குச் சில கட்டடங்கள் தெரிகின்றனவே? அவை
என்ன?
மாங்குடி மருதனார்: அங்குச் சிவபெருமானுக்கும் மற்ற
தெய்வங்களுக்கும் மக்கள் பலிகொடுக்கும் இடங்களும், புத்தப் பள்ளிகளும் சமணப் பள்ளிகளும்,
அந்தணர்கள் வாழும் இடமும், அறங்கூறவையமும், நாற்பெருங்குழுவும், பெருமைக்குரிய அமைச்சர்களின்
இல்லங்களும் உள்ளன.
இளங்கீரனார்: இப்பொழுது இருட்ட ஆரம்பித்துவிட்டது. அந்திக்கடைகளுக்குப் போகலாமா?
அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிக் கூறுங்கள்.
மாங்குடி மருதனார்: அந்திக்கடைகளில்
வணிகர்கள் அணிகலன்கள், பூக்கள், சாந்துவகைகள், துணிகள், பலவகையான உணவுப் பொருட்கள்
ஆகியவற்றை விற்பனை செய்வார்கள். பிறநாட்டு வணிகர்கள் இங்குச் செய்த அணிகலன்களை வாங்கும்
இடங்களில் மிகுந்த ஆரவாரம் இருக்கும்.
இளங்கீரனார்: வணிகர்களைத்
தவிர மற்றவர்கள் அந்தி நேரங்களில் என்ன செய்வார்கள்?
மாங்குடி மருதனார்: முதல் யாமத்தில்
மகளிர் தம் துணைவரைக் கூடும் பொருட்டுத் தங்களைப் பல வகைகளிலும் அலங்கரித்துக்கொண்டு
தம் கணவரின் வருகைக்காகக் காத்திருப்பர். தம் கணவர் வந்தவுடன், அவர்கள் இனிய குரலில்
பாடுவார்கள்; அவர்களைத் தழுவிகொள்வார்கள். பரத்தையர் செல்வமுள்ள இளைஞர்களைத் தேடிச்
செல்வர்.
இளங்கீரனார்: முதல் யாமத்தில்
வேறு என்ன நடக்கும்?
மாங்குடி மருதனார்: ஓணத் திருவிழா
நடைபெறும் நாட்களில், முதல் யாமத்தில், யானைகளைப் போரிடச் செய்து, அந்தப் போர் நடக்கும்பொழுது
வீரர்கள் கள்ளுண்டு களிப்பர். அந்த ஓண நன்னாளில், மகளிர் நீராடி, இறைவனை வழிபடுவர்;
பூசாரிகள் வெறியாட்டம் நடத்துவர். முருகனை வழிபட்டு, மகளிர் குரவைக் கூத்து ஆடுவர்.
குடியிருப்புகள்தோறும் கதையும், ஆடலும் பாடலுமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்பொழுது
ஆரவாரம் மிகுதியாக இருக்கும்.
இளங்கீரனார்: இரண்டாம் யாமத்தில்
என்ன நடைபெறும்?
மாங்குடி மருதனார்: வணிகர்கள்
தங்கள் கடைகளை மூடுவர். ஓசைகள் அடங்கும்; மக்கள் உறங்கப் போவர்.
இளங்கீரனார்: மூன்றாம் யாமத்தில்?
மாங்குடி மருதனார்: கள்வர்களைத்
தேடிக் கண்டுபிடித்து, அவர்களைத் தடுத்து நிறுத்தும் வலிமையும் அதற்கேற்ற அறிவும் பெற்ற
ஊர்க்காவலர்கள், தெருக்களில் உலாவிக் காவல் புரிவதால் மக்கள் அச்சமின்றி உறக்கம் கொள்வர்.
இளங்கீரனார்: நான்காம் யாமத்தில்?
மாங்குடி மருதனார்: சேவற்கோழி விடியற்காலத்தை அறிந்து கூவும். அந்தணர் வேதத்தைப்
பாடுவர். யாழ் வாசிப்பவர்கள் மருதப் பண்ணை இசைப்பர். பல்வேறு பண்டங்களை விற்பவர்கள் தங்கள் கடைகளைக் கூட்டி மெழுகுவர்.
மகளிர், பொழுது புலர்ந்து விடியற் காலம் வந்ததை உணர்ந்து,
தாம் செய்ய வேண்டிய வேலைகளை நினைத்து எழுந்து வந்து, இல்லங்களின் கதவுகளைத் திறப்பர்.
நாழிகைக் கணக்கர்கள் நாழிகை அறிவிப்பர். சிலர் அரசனின் புகழைக் கூறுவர்.
அங்கம் –
8, காட்சி – 1
இடம்: பாண்டியனின்
அரசவை
பங்குபெறுவோர்: பாண்டியன்,
எழிலி, புலவர் மாங்குடி மருதனார், பொருந்தில் இளங்கீரனார்
பின்னணி: பாண்டியன் உறக்கத்திலிருந்து
எழுந்து, ஆடை அலங்காரங்களுடன் அரசவையில் அமர்ந்திருக்கிறான்.
தொடர்புடைய
சங்க இலக்கியப் பாடல்: மதுரைக் காஞ்சி
மாங்குடி மருதனார்: மன்னா! வீரர்களுக்கும்,
பாணர்களுக்கும், பாணினிகளுக்கும், தேர்களையும்
யானைகளையும் நீ குறையாது வழங்குகிறாய்; விருந்தளிக்கிறாய்! உன் முன்னோர்களாகிய பல்யாகசாலை
முதுகுடுமிப் பெருவழுதியைப்போல், நிலந்தரு
திருவிற் பாண்டியனைப்போல் புகழ்பெற்று நீ நீடூழி வாழ்க! உன் பகைவர்கள் அனைவரையும்
நீ அழித்துவிட்டாய். நீ போரிட்டது போதும். சிறந்த
அணிகலன்களை அணிந்த மகளிர், பொன்னால் செய்த வட்டில்களில் கொண்டுவந்து கொடுக்கும் மணமுள்ள மதுவை நாளும் பருகி, ஊழ் உனக்குக் கொடுத்துள்ள வாழ்நாட்கள்
முழுதும் நீ மகிழ்ச்சியாக வாழ்வாயாக!
எழிலி: (பாண்டியனின்
காதருகில்) பார்த்தீர்களா! இதைத்தான் நான் நெடுங்காலமாகக் கூறிக்கொண்டிருக்கிறேன்.
(எழிலி சொல்வதைக் கேட்டு, அதை ஆமோதிப்பதைப்போல்
புன்முறுவலோடு
பாண்டியன் தலையை அசைக்கிறான்.)
Comments
Post a Comment