கொடை மடம் கொண்ட பேகன்
கொடை மடம் கொண்ட பேகன்
(கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகனைப் பற்றிப் புறநானூற்றில்
உள்ள பாடல்களோடு கற்பனையும் கலந்து எழுதப்பட்ட ஒரு குறுநாடகம்)
முனைவர் இர. பிரபாகரன்
காட்சி –
1
இடம்: காடு
பங்குபெறுவோர்: பேகன், தேர்ப்பாகன்
பின்னணி: சங்க காலத்தில்,
பெருங்கல் நாடு என்று அழைக்கப்பட்ட பழனிமலையைச்
சார்ந்த பகுதியை ஆண்ட, வேளிர் குலத்தைச்
சார்ந்த குறுநில மன்னன் வையாவிக் கோப்பெரும்பேகன்
என்பவன், வயநாட்டு மன்னனைப்
போரில் வென்று, காட்டு வழியாகத் தேரில் தன் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். வரும் பொழுது, பெய்யப்போகும் பெருமழைக்கு
அறிகுறியாக மின்னல்களோடு
கூடிய இடி முழக்கங்கள் பேரொலி எழுப்பி ஆரவாரிக்கின்றன. மழை வரப்போகிறது என்பதை உணர்ந்த மயில் ஒன்று அகவுகிறது (கூவுகிறது); தோகையை விரித்து நடனம் ஆடுகிறது. அதைக்கண்ட பேகன் அந்த மயில் குளிரில் நடுங்குகிறது
என்று நினைக்கிறான்; அதன்மீது
இரக்கம் கொள்கிறான்;
அதைக் காப்பாற்ற
வேண்டும் என்று நினைக்கிறான்.
பேகன்: (தேர்ப்பாகனை நோக்கி) தேரை நிறுத்துங்கள்!
பாகன்: மன்னா, மழை வருவதற்கு அரண்மனைக்குச்
செல்லலாம் என்று தேரை விரைவாக ஓட்டி வந்தேன்.
பேகன்: சற்று நேரம் நிறுத்துங்கள். (மன்னன் தேரில் இருந்து மயிலின் அருகே சென்று, தான் அணிந்திருந்த
மேலாடையை மயிலுக்குப்
போர்த்திவிட்டுத் தேரில் ஏறி அரண்மனைக்குச் செல்கிறான்)
காட்சி –
2
இடம்: பேகனின் அரண்மனை
பங்குபெறுவோர்: பேகன், பேகனின் மனைவி கண்ணகி, தேர்ப்பாகன்,
சில புலவர்கள்
பின்னணி: பேகன் அரண்மனைக்கு
வந்து சேர்ந்தான்.
போரில் வெற்றி பெற்றதற்காக கண்ணகியும், மற்றவர்களும்
அவனை முறைப்படி
வாழ்த்தி வரவேற்கிறார்கள்.
தேர்ப்பாகன்: நாங்கள் வரும் வழியில் மயில் ஒன்று குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. அதைக் கண்ட நமது மன்னர் தன்னுடைய
மேலாடையை மயிலுக்குப்
போர்வையாக அணிவித்தார்.
கண்ணகி: (பணிப்பெண்
ஒருத்தியை அனுப்பி,
மன்னருக்குக்கு ஒரு மேலாடை கொண்டுவரச்சொல்கிறாள். பணிப்பெண்
கொண்டு வருகிறாள்.).
இந்தக் குளிர்காலத்தில்,
மேலே துணியில்லாமல்
வந்திருக்கிறீர்களே! இதை அணிந்துகொள்ளுங்கள். (போர்வையைப் பேகனுக்கு அணிவிக்கிறாள்)
தேர்ப்பாகன்: நமது மன்னன் ஒரு கருணைக்கடல்!
புலவர்களுக்கும் பாணர்களுக்கும்
குதிரைகளும் தேர்களும்
அளிப்பது மட்டுமல்லாமல்
மயிலுக்குக்கூட அவர் தம் கருணையைக் காட்டுகிறார். வாழ்க நமது மன்னன்!
புலவர்: கடலுக்கு
எல்லை உண்டு. நமது மன்னனின் கருணைக்கு
எல்லையே இல்லை. வாழ்க நம் மன்னன்!
மற்றொரு புலவர்: கருணை மட்டுமல்ல; வீரத்திலும்
சிறந்தவன் நமது மன்னன். வீரத்திலும் கருணையிலும்
சிறந்த நம் மன்னன் வாழ்க! வெற்றிகள் பலபெற்ற நம் மன்னன் வாழ்க!
காட்சி –
3
இடம்: பேகனின் அரண்மனை
பங்குபெறுவோர்: பேகன், படைத் தளபதி, பேகனின் மனைவி கண்ணகி
பின்னணி: வயநாட்டு மன்னன் போரில் தோல்வியுற்று இறந்த பிறகு, பேகனின் வீரர்கள் அந்த நாட்டு வீரர்கள் சிலரையும்,
மன்னனின் மகளையும்
கைது செய்தார்கள்.
கைது செய்தவர்களைப்
பேகனின் அரசவைக்கு
அழைத்து வருகிறார்கள்.
பேகன்: தளபதி அவர்களே!
எத்தனை பேரைக் கைது செய்தீர்கள்.
தளபதி: ஏறத்தாழ நூறு வீரர்களைக் கைது செய்தோம்,
மன்னா.
பேகன்: அந்த மன்னன் மகள் கயல்விழியைக் கைது செய்தீர்களா?
தளபதி: ஆம், மன்னா. அவளையும் கைது செய்து கொண்டுவந்திருக்கிறோம்.
பேகன்: எங்கே அவள்? அவளை அழைத்து வாருங்கள்
இங்கே!
(தளபதி கயல்விழியை
அழைத்துவந்து மன்னன் முன் நிறுத்துகிறான்.)
பேகன்: (கயல்விழி கண்ணீரும்
கம்பலையுமாக நிற்கிறாள்.
பேகன் அவள் அருகே சென்று, அவள் கன்னங்களில் வழியும் கண்ணீரைத்
துடைக்க முயற்சி செய்கிறான்; அவள் முகத்தைத்
திருப்பிக்கொள்கிறாள்.)
இவள் கை விலங்குகளை
நீக்குங்கள். இவளை அந்தப்புரத்துக்கு அழைத்துச்
செல்லுங்கள். பணிப்பெண்களிடம்,
இவளைக் குளிப்பாட்டி,
இவளுக்கு உணவளிக்கச்
சொல்லுங்கள். இவளுக்குப்
புத்தாடை உடுத்தி,
ஒப்பனை செய்து இன்றிரவு என் பள்ளியறைக்கு
அழைத்துவரச் சொல்லுங்கள்!
(தளபதி கயல்விழியை
அழைத்துக்கொண்டு போகிறார்.
எல்லாக் கைதிகளும்
அரசவையிலிருந்து செல்கிறார்கள்.)
கண்ணகி: மன்னா! அந்த இளம்பெண்ணை ஏன் கைது செய்துவரச் சொன்னீர்கள்?
அவள் ஏன் உங்கள் பள்ளியறைக்கு வரவேண்டும்?
பேகன்: அவள் போரில் தோற்றவனின் மகள். அவ ள் இனி எனக்கு உரியவள்.
கண்ணகி: அவள் தந்தை போரில் தோற்றதால், அவள் எப்படி உங்களுக்கு உரியவளாக
முடியும்?
பேகன்: ”உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும்
வேந்தன் பொருள்.”
என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? அதற்கு என்ன பொருள் தெரியுமா? எவருக்கும்
உரிமையில்லாத பொருளும்,
சுங்க வரியினால்
வந்த பொருளும்,
தோற்றவன் செலுத்தும்
கப்பமும் ஒரு மன்னனின் பொருள். அந்தப் பெண்ணின் தாய் இறந்துவிட்டாள்;
தந்தை போரில் இறந்தான். ஆகவே, அவளை எவரும் உரிமை கொண்டாட முடியாது. அதனால் அவள் எனக்கு உரியவள். அவள் தந்தை உயிரோடு இருந்தால்
எனக்குக் கப்பம் கட்ட வேண்டும். அந்தப் பெண் அவள் தந்தை எனக்குக் கொடுக்கும் கப்பம். ஆகவே, அவள் எனக்குத்தான்
சொந்தம். நான் அவளை என்ன வேண்டுமானாலும்
செய்யலாம்.
கண்ணகி: நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே! அவள் ஒரு பொருள் அல்ல. அவள் ஒரு பெண். அவளுக்கு உணர்வுகள் உண்டு; கனவுகள் உண்டு. அவள் தன் தாயையும் தந்தையையும்
இழந்து தவிக்கிறாள்.
அவளுக்கு நாம் கருணை காட்ட வேண்டாமா? மயிலுக்குக் கருணைகாட்டத் தெரிந்த உங்களுக்கு,
அந்தப் பெண்மீது கருணை காட்ட வேண்டும் என்று தோன்றவில்லையா?
பேகன்: அவளுக்குக் கருணையா?
அவள் அழகைப் பற்றி நான் சில மாதங்களுக்குமுன் ஒற்றர்கள்
வழியாக அறிந்தேன்.
அவளை மணம் செய்துகொள்ள விரும்பினேன். அவளை எனக்குத் திருமணம் செய்துகொடுக்குமாறு தூதுவர்கள் மூலம் அவள் தந்தையைக் கேட்டேன்.
ஒருமுறை அல்ல; இருமுறை அல்ல; மூன்றுமுறை
தூதுவர்களை அனுப்பிக்
கேட்டேன். ஒவ்வொருமுறையும்
அவள் தந்தை அவளை எனக்குத் திருமணம்
செய்துகொடுக்க மறுத்தான்.
நான் பொறுமை இழந்தேன்; போரிட்டேன்; போரில் வெற்றி பெற்றேன். இனிமேல் அவள் எனக்குச் சொந்தமானவள்தான்.
நீ இதில் தலையிடாதே!
கண்ணகி: என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். என் மனத்தில்
இருப்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது.
அவள் ஒரு இளம்பெண்.
அவளுக்குப் பதினான்கு
வயதுகூட இருக்காது
என்று நினைக்கிறேன்.
உங்கள் வயதுக்கு
நீங்கள் அவளுக்குத்
தந்தை போன்றவர்.
நமக்குக் குழந்தைகள்
இல்லை. நாம் அவளை
நம் பெண்ணாகக்
கருதி, அவளை வளர்த்து, அவள் எவரை விரும்புகிறாளோ அவருக்குத் திருமணம்
செய்துகொடுக்கலாமே!
பேகன்: அவள் நம் பெண் அல்ல. அவள்மீது
நான் அளவற்ற காதல் கொண்டுள்ளேன்.
கண்ணகி: நீங்கள் அவள்மீது கொண்டுள்ளது காதல் இல்லை; அது காமம். நீங்கள் அவளைத் திருமணம் செய்துகொள்வதையோ, அவளோடு தவறான முறையில் நடந்து கொள்வதையோ
நான் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டேன்.
பேகன்: எனக்கு உன் அனுமதி தேவையில்லை. நான் அவளைக் கூடி மகிழ்வது
உனக்குப் பிடிக்கவில்லை
என்றால், உனக்கு இந்த அரண்மனையில் இனி இடமில்லை. இதுதான் என்னுடைய
முடிவு. என்னிடம்
வாதாடாதே.
(கண்ணகி அங்கிருந்து
போகிறாள்)
காட்சி - 4
இடம்: பேகன் அரண்மனையின்
அந்தப்புரம்
பங்குபெறுவோர்: கண்ணகி, கயல்விழி
பின்னணி: பேகனின் அரண்மனையில் இருந்து கயல்விழி தப்பித்துச் செல்வதற்குக் கண்ணகி
உதவி செய்கிறாள்.
கண்ணகி: கயல்விழி! அழாதே! நான் மன்னனின் மனைவி. என் கணவனிடமிருந்து நான் உன்னைக் காப்பாற்றப் போகிறேன்.
உனக்கு எவராவது உறவினர்கள் இருக்கிறார்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
கயல்விழி: உங்கள் உதவிக்கு
நன்றி. எனக்கு உறவினர்கள் எவரும் இல்லை. நான் கீழையூர் மன்னனின்
மகன் ஆதன் என்பவனைக் காதலிக்கிறேன். என்னை அவனுக்குத் திருமணம் செய்துகொடுக்க
என் தந்தை விரும்பினார். இப்பொழுது அவர் இல்லையே!
கண்ணகி: அழாதே. உன்னை விடுதலை செய்யுமாறு மன்னனை வற்புறுத்தினேன். மன்னன் என்மீது கோபம்கொண்டு என்னை இந்த அரண்மனையிலிருந்து வெளியேறச்
சொல்லிவிட்டார். நான் இன்று மாலை, இந்த நாட்டின் எல்லையில் இருக்கும்
ஒரு சிற்றூருக்குப்
போகப்போகிறேன். இனிமேல் அங்கேதான் இருக்கப் போகிறேன்.
நீயும் என்னோடு வா. சுரங்கப் பாதை வழியாக இங்கிருந்து நாம் தப்பித்துச் செல்வோம். அந்தச் சுரங்கப் பாதை முடியுமிடத்தில், ஒரு தேர் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கும். நான் போகவேண்டிய
இடத்திற்குப் போகிறேன்.
அந்தத் தேர்ப்பாகன்
உன்னைக் கீழையூரூக்கு
அழைத்துச் செல்வான்.
இந்த மூட்டையில்,
சில நகைகளும்
பொற்காசுகளும் உள்ளன. அவற்றை உன் செலவுக்கு
வைத்துக்கொள். ஆதனைக் கண்டுபிடித்து அவனைத் திருமணம்
செய்துகொள்.
கயல்விழி: பல ஆண்டுகளுக்கு
முன்னரே என் தாய் இறந்துவிட்டாள். எனக்கு நீங்கள்தான் இனிமேல் தாய்.
கண்ணகி: எனக்கு மகளில்லை;
இனிமேல் நீதான் எனக்கு மகள்! (இருவரும்
கட்டிப்பிடித்துக்கொண்டு தங்கள் அன்பைப் பகிர்ந்துகொள்கிறார்கள்). இன்று மாலை நாம் இருவரும்
இங்கிருந்து சென்றுவிடலாம்.
காட்சி –
5
இடம்: மன்னனின்
பள்ளியறை
பங்குபெறுவோர்: பேகன், பணிப்பெண்கள், பணியாள், தளபதி
பின்னணி: பேகன் மிகுந்த எதிர்பார்ப்போடு பள்ளியறைக்குச்
செல்கிறான்.
பேகன்: (பள்ளியறையில் கயல்விழியைக்
காணவில்லை. அதனால் ஏமாற்றம் அடைந்த மன்னன் கையைத்தட்டிப் பணிப்பெண்களை அழைக்கிறான்.) யார் அங்கே!
பணிப்பெண்: மன்னா! கூப்பீட்டீர்களா!
பேகன்: எங்கே அந்தப் பெண் கயல்விழி?
பணிப்பெண்: ஐயா, இன்று மாலை வரை இங்குதான்
இருந்தாள். அவளுக்குப்
புத்தாடை உடுத்தி,
ஒப்பனை செய்யலாம்
என்று இங்கு வந்து பார்த்தபொழுது, அவளைக் காணவில்லை.
பேகன்: (அங்கிருந்து அரசவைக்குப்
போகிறான். பணியாளை நோக்கி)
தளபதியை அழைத்துவாருங்கள்.
தளபதி: மன்னா! அழைத்தீர்களா?
பேகன்: அந்தப் பெண் கயல்விழி
அந்தப்புரத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டாள்.
ஆட்களைவிட்டு அவளைத் தேடச் சொல்லுங்கள். அவளைத் தேடிக் கண்டுபிடித்து இங்கு இழுத்து வாருங்கள். நாளை மாலைக்குள் அவள் இங்கு வரவேண்டும். இது என் கட்டளை!
தளபதி: உத்தரவு மன்னா. இப்பொழுதே நமது வீரர்களை
அனுப்புகிறேன். நாளை காலைக்குள் அவளைக்கொண்டுவந்து உங்கள் காலடியில் விழச்செய்கிறேன்.
காட்சி –
6
இடம்: காட்டு வழி
பங்குபெறுவோர்: பரிசு பெற்ற பாணன் ஒருவன், அவன் மனைவி, வள்ளல்களைத் தேடிச் செல்லும் வறுமையில் இருக்கும்
பாணன் ஒருவன், அவன் மனைவி
பின்னணி: வறுமையில் இருக்கும்
பாணன் ஒருவன் எவரிடம் சென்றால் பரிசு பெறலாம் என்று வள்ளல்களைத்
தேடிச் செல்கிறான்.
வழியில், ஒரு பாணனும் அவன் மனைவியும்
இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள்
தொடர்புடைய
புறநானூற்றுப் பாடல்: பாடல் 141
வறுமையில் உள்ள பாணன்: (இளைப்பாறிக்கொண்டிருக்கும் பாணனைப் பார்த்து) ஐயா!
உங்களைப் பார்த்தால் பாணன் போல் இருக்கிறதே! நீங்கள் உயர்ந்த பொன்னாலான தாமரை மலரை அணிந்திருக்கிறீர்கள்; உங்கள் மனைவி சிறப்பாகச் செய்யப்பட்ட மாலையோடு விளங்குகிறார். விரைவாகச் செல்லும் குதிரைகளை உங்கள் தேரிலிருந்து அவிழ்த்துவிட்டுவிட்டு,
நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருப்பதைப் போல் இந்த வழியில் இளைப்பாறுகிறீர்களே! நீங்கள் யார்?’
இளைப்பாறிக்கொண்டிருக்கும்
பாணன்:
பேகன்
என்ற
மன்னனைக்
காணச்
சென்றோம்.
அவனைக்
காண்பதற்குமுன் நாங்களும் உன்னைவிட வறியர்களாகத்தான் இருந்தோம். இப்பொழுது,
அவ்வறுமை நீங்கி இந்த நிலையில் உள்ளோம்.
எப்பொழுதும் உடுத்தவோ அல்லது போர்த்தவோ பயன்படுத்தாது என்று தெரிந்தும் தன் போர்வையை மயிலுக்கு அளித்த எங்கள் பேகன்
யானைகளும் குதிரைகளும் உடையவன். அவன் மறுமையில் வரக்கூடிய நன்மைகளை எதிர்பார்க்காமல் எவ்வளவு ஆயினும் பிறர்க்கு அளிப்பது நன்று என்று எண்ணுபவன். அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது.
வறுமையில் உள்ள பாணன்: இந்த வழியே சென்றால் மன்னன் பேகனைக் காண முடியுமா?
இளைப்பாறிக்கொண்டிருக்கும்
பாணன்:
ஆம்.
இதே
வழியில்
செல்லுங்கள்.
சென்று
அவனைக்
காணுங்கள்.
அவன்
கண்டிப்பாக
உங்களுக்கும்
உங்கள்
மனைவிக்கும்
எங்களுக்குக்
கொடுத்ததுபோல்
பரிசளிப்பான்.
காட்சி - 7
இடம்: பேகனின் அரண்மனை
பங்கு பெறுவோர்: பரிசு பெற வந்த பாணன், மற்றுமொரு பாணன், பேகன், அமைச்சர், தளபதி, வேறு சிலர்
பின்னணி: வறுமையில் உள்ள பாணன், இளைப்பாறிக்கொண்டிருந்த பாணன் கூறியதுபோல் பேகனிடம் பரிசு பெற வருகிறான். அவன் வரும் வழியில் பேகனின் மனைவியைப் பார்த்தான். அவள் வருத்தத்தோடு அழுதுகொண்டிருந்தாள்.
பாணன்: மலைவளமும் நீர் வளமும் மிகுந்த நாட்டுக்கு மன்னா! உன்னை வணங்குகிறேன்! மன்னா நீ வாழ்க!
பேகன்: பாணரே! நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
பாணன்: மன்னா! நாங்கள் சோழ நட்டிலிருந்து வருகிறோம். பல நாட்களாகக் காடு மேடுகளை எல்லாம் கடந்து வந்தோம். நாங்கள்
வரும் வழியில் உன்னிடமிருந்து பரிசு பெற்ற ஒரு
பாணனையும் அவன் மனைவியையும் பார்த்தோம்.
இங்கு வருமாறு அவர்கள் எங்களை ஆற்றுப்படுத்தினார்கள், நாங்கள் வரும் வழியில், துன்பத்தோடு வடிக்கும் கண்ணீரை நிறுத்த முடியாமல், தன் மார்பகங்கள் விம்மிக் கண்ணீரால் நனையுமாறு புல்லாங்குழல் வருந்துவதுபோல் மிகவும் அழுதுகொண்டிருந்த ஒருபெண்மணியையும்
பார்த்தோம். உன்னுடைய நாட்டில் மக்களெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று
கேள்விப்பட்டோம். ஆனால், அவள் மிகுந்த வருத்தத்தோடு அழுதுகொண்டிருப்பதைப்
பார்த்தோம். அவள் இரங்கத் தக்கவள். அவள் யார்?
பேகன்:
(அமைச்சரை
நோக்கி)
அமைச்சரே!
வறுமையில்
இருக்கும்
இந்தப்
பாணனுக்குப்
பொன்னும்
பொருளும்
கொடுங்கள்.
(அந்தப்
பாணனுக்கு
அமைச்சர்
அரிசு கொடுக்கிறார். வறுமையிலிருக்கும்
பாணன்
நன்றி
கூறி,
மன்னனை
வணங்கிச்
செல்கிறான்.)
மற்றுமொரு
பாணன்:
மன்னா!
நீ
வாழ்க!
உன்னைத்
தேடி
வரும்
வழியில்
நாங்களும்
அந்தப்
பெண்ணைப்
பார்த்தோம்.
நாங்கள்
சிறிய யாழை இசைத்து உன் மழைவளம் மிகுந்த காட்டை செவ்வழிப் பண்ணில் பாடினோம். அப்பாட்டைக் கேட்டவுடன், மை தீட்டிய கண்களுடைய அந்தப் பெண் கலங்கி, விட்டுவிட்டு உகுத்த கண்ணீர்த்துளிகள் அவள் அணிகலன்களை நனைத்தன. அவள் வருந்தி அழுதாள். ”அம்மா! நாங்கள் பேகனைப் புகழ்ந்து பாடுவதைக் கேட்டு நீ அழுகிறாயே! நீ அவனுக்கு
உறவினளோ?” என்று வணங்கிக் கேட்டோம். அவள் தன் கை விரல்களால் கண்ணீரைத் துடைத்து, ‘நான் அவனுடைய உறவினள் அல்லள்; இப்போழுது,
என் போன்ற ஒருத்தியின் அழகை விரும்பி, புகழ் மிக்க பேகன், எந்நாளும் நல்லூருக்கு வருவதாகக் கூறுகிறார்கள்’ என்று கூறினாள். அவளுக்கு நீ அருள் செய்ய வேண்டும்.
பேகன்: அவள் யார் என்று எனக்குத் தெரியும், அவள் எதற்காக அழுகிறாள் என்றும் எனக்குத் தெரியும்.
நீங்கள் வெகு தொலைவிலிருந்து வந்திருக்கிறீர்கள். களைப்பாக இருப்பீர்கள். இதோ
உங்கள் பரிசு. நீங்கள் அரண்மனையில் உணவு அருந்திவிட்டு, இளைப்பாறிவிட்டுச்
செல்லுங்கள். (மன்னன் பரிசு கொடுக்கிறான்)
காட்சி – 8
இடம்: ஊர்ப் பொதுவிடம் (மன்றம்)
பங்கு பெறுவோர்: புலவர் பரணர், புலவர் அரிசில் கிழார், வேறு இரண்டு புலவர்கள் (புலவர் 1, புலவர் 2)
பின்னணி: புலவர்கள் கூடிப் பேகனைப் பற்றிப் பேசுகிறார்கள்
தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: பாடல் 142
புலவர் 1: நண்பர்களே, மன்னன் பேகன் குளிரால் நடுங்கிக்கொண்டிருந்த மயிலுக்குப் போர்வை அளித்தான் என்று கேள்விப்பட்டேன். மயிலுக்கு ஏன் போர்வை கொடுத்தான் என்றுதான் எனக்குப் புரிவில்லை. மழை வரப்போகிறது என்பதை உணர்ந்தவுடன், அகவுவது மயில்களின் இயல்பு. இது கூடவா, ஒரு மன்னனுக்குத் தெரியாது? என்னைப் பொறுத்தவரை, அவனுடைய செயல் அவனுடைய மடமையைத்தான்குறிக்கிறது.
புலவர் பரணர்: குளத்திலும், வயல்வெளிகளில் பொழிந்தும், தேவையான இடத்தில் பெய்யாது, களர் நிலத்தும் அளவின்றி நீரை அளிக்கும் மழையினது இயல்பைப் போன்றது பேகனின் கொடைத்தன்மை. அவன் காரணமின்றி, ஆராயாது யாவர்க்கும் பொருள் கொடுத்தலால் கொடைமடம் கொண்டவன் என்று நீங்கள் கருதலாம். ஆனால், மதங்கொண்ட யானைகளும் வீரக் கழலணிந்த கால்களும் உடைய பேகன் பிறர் படை வந்து தாக்கியபொழுதும் அறநெறியினின்று தவற மாட்டான். ஆகவே, அவன் கொடைமடம் கொண்டவனாக இருந்தாலும் படைமடம் கொண்டவன் அல்லன்.
புலவர் 2: நானும் அதைக் கேள்விப்பட்டேன். அவன் கருணையை நினைத்து நானும் வியந்தேன். அவன் செயல் கொடைமடம் என்றுதான் நானும் நினைக்கிறேன். நான் இன்னும் ஒரு செய்தியும் கேள்விப்பட்டேன். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டால், அவன் மற்றுமொரு மடமையும் உடையவன் என்று நீங்கள் உணர்வீர்கள்.
புலவர் பரணர், அரிசில்
கிழார்: புலவரே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
புலவர் 2: அயல் நாட்டு மன்னன் ஒருவனின் மகளின் அழகால் மயங்கி, பேகன் அவளை மணந்துகொள்ள விரும்பினான். அந்தப் பெண்ணின் தந்தை, அவளைப் பேகனுக்கு மணமுடிக்க மறுத்தான். அதனால் கோபமடைந்து, அந்த அயல் நாட்டு மன்னனோடு பேகன் போரிட்டான். போரில் அந்த மன்னன் தோல்வியுற்று இறந்தான். அந்த மன்னனின் மகளோடு பேகன் தவறான
முறையில் உறவு கொள்ள விரும்பினான். பேகனின் மனைவி கண்ணகி பேகனின் செயலைத் தடுத்தாள். பேகன் தன் மனைவிமீது கோபமுற்று, அவளை அரண்மனையிலிருந்து வெளியேறச் சொன்னான். பேகனுக்குத் தெரியாமல், கண்ணகி அந்தப் பெண்ணோடு அரண்மனையைவிட்டு வெளியேறினாள். இப்பொழுது, கண்ணகி, இந்த நாட்டின் எல்லையில் உள்ள சிற்றூரில் மிகுந்த வருத்தத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
புலவர் பரணர், அரிசில்
கிழார்: நீங்கள் சொல்வது உண்மையா? உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?
புலவர் 2: இரண்டு பாணர்கள் கண்ணகியைப் பார்த்திருக்கிறார்கள். அவளைப் பற்றிப் பேகனிடம் அவர்கள் கூறும்பொழுது நான் அங்கிருந்தேன்.
பரணர்: என்னால் நம்ப முடியவில்லை. நான் இப்பொழுதே சென்று பேகனுக்கு அறிவுரை கூறி, அவனை, அவன் மனைவியோடு சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தப் போகிறேன்,
அரிசில் கிழார்: நானும் வருகிறேன். நாம் இருவரும் அவனுக்கு அறிவுரை கூறி அவனையும் அவன் மனைவியையும் சேர்த்துவைப்போம்.
காட்சி – 9
இடம்: பேகனின் அரசவை
பங்குபெறுவோர்: பரணர், அரிசில் கிழார், மன்னன், அமைச்சர், வேறு சிலர்
பின்னணி: பரணரும் அரிசில் கிழாரும் பேகனுக்கு அறிவுரை கூறுவதற்காக அவனுடைய அரண்மனைக்கு வந்திருக்கிறார்கள்.
தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்கள்: பாடல்கள் 145, 146
பேகன்: வாருங்கள் புலவர்களே! நீங்கள் இருவரும் சேர்ந்து வந்திருப்பதைக் கண்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பரணர்: மயில் ஒன்று குளிரில் நடுங்குகிறது என்று எண்ணி அம்மயிலுக்குப் போர்வை அளித்தவனே! குறையாத புகழும் மதமுள்ள யானைகளும் செருக்குடைய குதிரைகளும் உடைய பேகனே! நான் பசியினால் வரவில்லை; எனக்குச் சுற்றத்தாரால் வரும் சுமையும் இல்லை. நான் பொன்னும் பொருளும் பரிசாகப் பெறுவதற்காக இங்கு வரவில்லை. ‘அறம் செய்க; அருளை விரும்புபவனே’ என்று பாடி நான் உன்னிடம் பரிசாகக் கேட்பது என்னவென்றால், ‘நீ இன்று இரவே, உன்னுடைய சிறந்த தேரில் ஏறிப்போய் துயரத்துடன் வாழும் உன் மனைவி கண்ணகியின் துன்பத்தைக் களைவாயாக.’
என்பதுதான்.
அரிசில் கிழார்: (யாழைக் கையில் எடுத்து, மாலை நேரத்துக்குரிய செவ்வழிப் பண்ணில், பேகனைப் புகழ்ந்து ஒரு
பாட்டைப் பாடுகிறார்.)
பேகன்: பெரும்புலவர் பரணரே! உங்கள் அறிவுரைக்கு நன்றி. புலவர் பெருமகனார் அரிசில்
கிழார் அவர்களே! செவ்வழிப் பண்ணில் நீங்கள் பாடிய பாட்டு மிகச் சிறபாக இருந்தது.
உங்கள் இருவருக்கும் நான் பரிசளிக்க விரும்புகிறேன். (அமைச்சர் பரிசுகளைக்
கொண்டுவருகிறார்)
பரணர்: நான் பரிசு பெறுவதற்காக இங்கு வரவில்லை. அன்பும் அறமும் உடைய இல்வாழ்க்கைதான் பண்பும் பயனுள்ள இல்வாழ்க்கை. நீ உன் மனைவியோடு
சேர்ந்து வாழ்ந்தால் அதையே நான் நீ எனக்குத் தந்த பரிசாகக் கருதுவேன். (பரிசை
வாங்க மறுக்கிறார்)
அரிசில் கிழார்: எனக்கும் நீ அளிக்கும் பரிசுகள் வேண்டாம். நீ எனக்கு அளிக்கும் அரிய அணிகலன்களும் செல்வமும் அப்படியே இருக்கட்டும். அவற்றை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. அன்பில்லாத
வாழ்க்கை பாலைநிலத்தில் பட்ட மரம் தளிர்த்ததைப் போன்றது. மன்னா! நீ அருள் செய்யாததால் உன் மனைவி மிகுந்த துயரத்தால் மனம் வருந்தி உடல் தளர்ந்து காணப்படுகிறாள். உன்னைப் பிரிந்திருப்பதால், அவள் தன் கூந்தலில் பூச் சூடவில்லை. அவளுடைய நீண்ட கூந்தலில் நறுமணமுள்ள புகையூட்டி, குளிர்ந்த மணமுள்ள மாலை அணியுமாறு விரைந்தோடும் குதிரைகளை உன் நெடிய தேரில் பூட்டுவாயாக! அதுவே நான் விரும்பும் பரிசு.
பேகன்: புலவர் பெருமக்களே! நீங்கள் இருவரும் என் மீதும், என்
மனைவியின்மீதும் கொண்டுள்ள அன்பு என் மனத்தை நெகிழ்விக்கிறது. நீங்கள் சொன்னதைப்
பற்றி நான் சிந்திக்கிறேன்.
காட்சி – 10
இடம்: காட்டு வழி
பங்குபெறுவோர்: மன்னன் பேகன், வேடன்
பின்னணி: தன் மனைவியைப் பற்றிப் பாணர்களும் புலவர்களும் கூறியதைக் கேட்ட பேகன், மனம் கலங்கி, நிம்மதியின்றி, ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். தனிமையில் இருந்தால் மன நிம்மதி கிடைக்கும் என்று நினைத்து, அவன் தனியாகத் தேரில் காட்டு வழியாகச் சென்று
கொண்டிருக்கிறான். அவன் தேரில் சென்றுகொண்டிருந்தபொழுது, ஒரு வேடன் ஒரு
இளம் மான்கன்றை வேட்டையாட முயற்சி செய்துகொண்டிருக்கிறான்.
பேகன்: (வேடனை நோக்கி) நீ என்ன செய்கிறாய்? ஏன் அந்த இளம் மான்கன்றை வேட்டையாடுகிறாய்? அந்த மான்கன்று இரங்கத் தக்கது! அது பிறந்து சில நாட்கள்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அதைக் கொல்லாதே!
வேடன்: ஐயா! நீங்கள் யார்? நான் ஒரு வேடன். விலங்குகளை வேட்டையாடுவதுதான் என் தொழில், இந்த மான்கன்றைப் பிடித்துக்
கொண்டுபோய், கறியாக்கி நானும் என் குடும்பத்தினரும் உண்ணப்போகிறோம். அதை நீங்கள் ஏன் என்னைத் தடுக்கிறீர்கள்?
பேகன்: மான்கன்றைத்தான் உண்ண வேண்டுமா? உண்ணுவதற்கு உனக்கு வேறு ஒன்றுமில்லையா?
வேடன்: இளம் மான்கன்றுதான் மிகவும் சுவையாக இருக்கும். அதனால்தான் அதை நான் வேட்டையாடுகிறேன். என்னைத் தடுப்பதற்கு நீங்கள் யார்?
பேகன்: நான் இந்த நாட்டு மன்னன். உனக்கு உணவு வேண்டுமானால் அரண்மனைக்கு வா. அங்கு சுவையான உணவு கிடைக்கும்.
(பேகனும் வேடனும் பேசிக்கொண்டிருந்த பொழுது அந்த மான்கன்று தப்பி ஓடிவிட்டது)
வேடன்: மன்னா, என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் யார் என்று தெரியாமல் நான் ஏதோதோ பேசிவிட்டேன்.
பேகன்: சரி, இனிமேல் இதுபோல் இளம் மான்கன்றுகளை வேட்டையாடாதே!
காட்சி – 11
இடம்: கண்ணகி இருக்கும் வீடு
பங்குபெறுவோர்: பேகன், கண்ணகி
பின்னணி: இளம் மான்கன்றை வேட்டையாடிய வேடனுக்கும் கயல்விழியுடன் உறவுகொள்ள விரும்பிய தனக்கும் வேற்றுமையில்லை என்பதை உணர்ந்த பேகன், கண்ணகியைச் சந்தித்து அவளை மீண்டும் அரண்மனைக்கு அழைத்துவருவதற்காக அவள் வீட்டிற்குச்
செல்கிறான்.
பேகன்: கண்ணகி! நான் என் தவறை உணர்ந்தேன். மயிலுக்குப் போர்வை அளித்த எனக்குக்
கயல்விழிக்குக் கருணை காட்டத் தெரியவில்லை. அவள் எனக்கு மகள் போன்றவள் என்பதை உணர மறந்தேன். காமம் என் அறிவை மயக்கியது. இனிமேல் அதுபோல் எந்தத் தவறையும் செய்ய மாட்டேன். என்னை மன்னித்துவிடு. என் தவறுக்குக் கழுவாயாக, கயல்விழியைக் கண்டுபிடித்து அவளிடமும் மன்னிப்புக் கேட்கப் போகிறேன். அவள் விரும்புபவனுக்கு அவளைத் திருமணம் செய்துகொடுக்கப் போகிறேன்.
கண்ணகி: நானும் உங்களிடம் தவறாகப் பேசிவிட்டேன். நீங்களும் என்னை மன்னித்துவிடுங்கள். கயல்விழிக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவள் கீழையூர்
நாட்டு இளவரசனைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறாள்.
பேகன்: நான் வயநாட்டின்மீது படையெடுத்திருக்கக் கூடாது. நான் அங்கு போரிட்டதால், கயல்விழியின் தந்தையும் நூற்றுக்கணக்கான வீரர்களும் இறந்தார்கள். அங்கு இறந்த அனைவரின் ஞாபகச் சின்னமாக வயநாட்டில் ஒரு மணிமண்டபம் கட்டப்போகிறேன். வயநாட்டை
ஆட்சி செய்வதற்கான உரிமையைக் கயல்விழிக்குக் கொடுக்கப் போகிறேன். இனி எவரிடமும் போர்தொடுக்கப் போவதில்லை. இனி எந்நாளும் அன்போடு அறத்தோடும் ஆட்சி நடத்தப் போகிறேன். கண்ணகி!
உன் அன்புக்கும் அறிவுக்கும் நான் இனிமேல் என்றென்றும் அடிமை. “பெண்ணின் பெருந்தக்க
யாவுள?” என்று வள்ளுவர் கூறுவது முற்றிலும் உண்மை! (பேகன் கண்ணகியை அன்போடு அணைத்துக்கொள்கிறான். இருவரும் அரண்மனைக்குச் செல்கிறார்கள்)
Comments
Post a Comment