புலவர் பெருஞ்சித்திரனார்

 

புலவர் பெருஞ்சித்திரனார்

(புறநானூற்றூப் பாடல்களைத் தழுவி எழுதப்பட்ட சிறு நாடகம்)

 

 

 

 

முனைவர் இர. பிரபாகரன்


 

 

அங்கம் – 1, காட்சி – 1

இடம்: பெருஞ்சித்திரனாரின் சிறு குடிசை வீடு

பங்குபெறுவோர்: புலவர் பெருஞ்சித்திரனார், அவரது மனைவி யாழினி, அவர் தாயார் வள்ளி, அவர் மகன் சிலம்பன்.

பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சியிடம் சென்று பரிசு பெற்று வருவதற்காகப் பெருஞ்சித்திரனார் புறப்படுகிறார். அவரை வழியனுப்புவதற்காக, அவருடைய மனைவி தன் மகன் சிலம்பனைச் சுமந்துகொண்டு முன்றிலில் நிற்கிறாள். சிலம்பன் பசியினால் அழுகிறான். யாழினியிடம் இருந்து பால் குடிப்பதற்காக அவள் முந்தானையை நீக்க முயற்சி செய்கிறான். அவள் தடுக்கிறாள். அவன் அழுகிறான்.  பெருஞ்சித்திரனாரின் தாய் வள்ளி நடக்க முடியாமல், கோலின் உதவியோடு நடந்துவந்து முன்றிலில் நிற்கிறாள்.

பெருஞ்சித்திரனார்: யாழினி!  நான் அதியமான் நெடுமான் அஞ்சியிடம் சென்று, அண்மையில் அவன் பெற்ற சில வெற்றிகளைப் பற்றியும், ஓளவைக்கு நெல்லிக்கனி கொடுத்ததைப் பற்றியும் புகழ்ந்து பாடிப் பரிசுபெற்று வருகிறேன். அம்மாவையும் செல்வன் சிலம்பனையும் கவனித்துக்கொள், உன் உடல்நலத்தையும் கவனித்துக்கொள். நான் விரைவில் வந்துவிடுவேன்.

தாயார் வள்ளி: அதியமான் ஒளவைக்குக் கொடுத்த நெல்லிக்கனியைப் பற்றி எல்லோரும் புகழ்ந்து பேசுகிறார்கள்.  அந்த நெல்லிக்கனியை உண்டதால், ஒளவை ஒருநாளும் சாகமாட்டாள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அந்த அதியமானிடம் இருந்து, உண்டவுடன் இறப்பைத் தருகின்ற நெல்லிக்கனி இருந்தால் வாங்கிக்கொண்டு வா. என் கால்கள் நடக்க மறுக்கின்றன; கண்கள் பார்க்க மறுக்கின்றன; காதுகள் கேட்க மறுக்கின்றன.  நான் இனியும் வாழ விரும்பவில்லை. ஆனால், சாகவும் முடியவில்லை. நான் சாவதற்கு உதவியாக ஒரு நெல்லிக்கனி இருந்தால் அதைக் கண்டிப்பாக வாங்கிக்கொண்டு வா.

பெருஞ்சித்திரனார்: அம்மா, நீங்கள் விரைவில் உடல்நலம் பெற்று சிலம்பனோடு ஓடிப்பிடித்து விளையாடப் போகிறீர்கள். மனம் தளராமல் இன்னல்களைப் பொறுத்துக்கொண்டு இருங்கள். நன்மையே நடக்கும்.

யாழினி: அம்மாவையும் சிலம்பனையும் நான் கவனித்துக்கொள்கிறேன். நீங்கள் தனியாகப் போகிறீர்களே என்பதை நினைத்தால்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. உங்கள் இளவல் வேலனையும் அழைத்துச் செல்லுங்கள். அவர் உங்களுக்கு உதவியாக இருப்பார்.

பெருஞ்சித்திரனார்: அவனால் எந்தப் பயனும் இல்லை. ஆனால், நீ சொல்கிறாயே என்பதற்காக வேலனையும் அழைத்துச் செல்கிறேன்.


 

அங்கம் – 2, காட்சி – 1

இடம்: அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை

பங்குபெறுவோர்: பெருஞ்சித்திரனார், வேலன், வாயிற்காவலன், அதியமான் நெடுமான் அஞ்சி, பரிசு கொண்டு வருபவர்

பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசு பெறுவதற்காகப் பெருஞ்சித்திரனார் வந்திருக்கிறார்.

தொடர்புடைய புறநானூறுப் பாடல்: பாடல் 208

வாயிற்காவலன்: ஐயா, நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?

பெருஞ்சித்திரனார்: என் பெயர் பெருஞ்சித்திரனார். நான் கவி பாடும் புலவன். நான் அதியமானின் நெருங்கிய நண்பன். நான் அவனைப் பார்க்க வந்திருக்கிறேன்.  ”பெருஞ்சித்திரனார் வந்திருக்கிறார்” என்று அதியமானிடம் போய்ச் சொல். நீ சொன்னவுடன், அவன் என்னைப் பார்க்க ஓடிவருவான்.

வாயிற்காவலன்:  ஐயா, நான் இப்பொழுதே போய்ச் சொல்கிறேன். (வாயிற்காவலன் அதியமானைப் பார்க்கப் போகிறான்.)

அதியமான்: என்ன வேண்டும்?

வாயிற்காவலன்: வணங்குகிறேன் மன்னா! தங்களைப் பார்க்கப் புலவர் ஒருவர் வந்திருக்கிறார்.

அதியமான்: புலவர் பரிசு பெறுவதற்காக வந்திருப்பார். இப்பொழுது நான் அவரைப் பார்க்க முடியாது. பரிசு கொடுத்தனுப்புகிறேன். சில நாட்கள் கழித்து அவர் வந்தால் அவர் என்னைச் சந்திக்கலாம் என்று சொல்.

வாயிற்காவலன்: அப்படியே செய்கிறேன் மன்னா.  (வாயிற்காவலன் பெருஞ்சித்திரனாரிடம் திரும்பி வருகிறான். )

வாயிற்காவலன்: ஐயா, மன்னர் இப்பொழுது உங்களைச் சந்திக்க முடியாது என்று சொல்லச்சொன்னார். சில நாட்கள் கழித்து நீங்கள் வந்தால் உங்களைச் சந்திப்பதாகக் கூறினார். ஆனால், மன்னர் உங்களுக்குப் பரிசை ஒருவரிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவர் இப்பொழுது வருவார். சற்று நேரம் காத்திருங்கள்.

பெருஞ்சித்திரனார்: நான் குன்றுகளையும் மலைகளையும் கடந்து அதியமானைப் பார்க்க வந்திருக்கிறேன். என்னைக் காணாமல் அவன் அளித்த பொருளை ஏற்றுக்கொள்வதற்கு நான் ஊதியம் மட்டுமே கருதும் வாணிகப் பரிசிலன் இல்லை. என்னை விரும்பி, என் புலமை, கல்வி முதலியவற்றின் அளவை அறிந்து, தினை அளவே பரிசளித்தாலும் நான் அதை இனியதாகக் கருதுவேன். என்னைப் பார்க்காமல் அவன் அளிக்கும் இந்தப் பரிசு எனக்கு வேண்டாம். இந்தப் பரிசை நான் ஏற்க மறுக்கிறேன் என்று உங்கள் மன்னனிடம் போய்க் கூறு. (பெருஞ்சித்திரனார் அங்கிருந்து புறப்படுகிறார்)

வேலன்: அண்ணா, இப்பொழுது இந்தப் பரிசை வாங்கிகொண்டு, பிறகு ஒரு நாள்  மீண்டும் வந்து மன்னரைப் பார்த்தால், மன்னர் மறுபடியும் பரிசளிப்பார் அல்லவா? இப்பொழுது கிடைக்கும் பரிசைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குப்போனால், அண்ணியும் அம்மாவும் மகிழ்ச்சி அடைவர்கள்.

பெருஞ்சித்திரனார்: நான் இங்கு பரிசு பெறுவதற்காக மட்டும் வரவில்லை. அவனைப் புகழ்ந்து நான் எழுதிய கவிதையை அவனிடம் படித்துக்காட்ட வந்தேன். அவன் என்னை, ” வருக, வருக” என்று வரவேற்று, என் கவிதையைக் கேட்டு, அகமும் முகமும் மலர்ந்து பரிசளிப்பான் என்று எதிர்பார்த்து வந்தேன். என்னைப் பார்க்காமல், என் கவிதையைக் கேட்காமல், பரிசளிப்பது முறையன்று. அதைப் பெறுவது நமது மானத்துக்கு இழுக்கு. வா , இங்கிருந்து போகலாம். ( பெருஞ்சித்திரனாரும் வேலனும் அங்கிருந்து புறப்பட்டுப் போகிறார்கள்.)

வேலன்: இப்பொழுது எங்கே போகப்பொகிறீர்கள்?

பெருஞ்சித்திரனார்: வெளிமான் என்று ஒரு வள்ளல் இருக்கிறான். அவன் அன்பிலும் பண்பிலும் சிறந்தவன். என்னை நன்றாக அறிந்தவன். புலவர்களின் தகுதியறிந்து பரிசளிக்கக்கூடியவன்.  வா, அவனைப் போய்ப்பார்க்கலாம்.


 

அங்கம் – 2, காட்சி – 2

இடம்: அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை

பங்குபெறுவோர்: அதியமான், வாயிற்காவலன்

பின்னணி: பரிசை ஏற்றுக்கொள்ளாமல் புலவர் சென்றதைக் கேள்விப்பட்ட அதியமான் மிகவும் வியப்படைந்தான். அந்தப் புலவர் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறான்.

அதியமான்: (தனக்குத் தானே பேசிக்கொள்கிறான்) புலவர் பரிசை ஏற்க மறுத்தாரா? அந்தப் புலவரின் செயல் வியப்பாக இருக்கிறதே! இனிப்பான பொருள் எங்கிருந்தாலும் அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் எறும்பு போல, எங்குச் சென்றால் பரிசு பெறலாம் என்று பரிசுக்காக ஏங்குவதுதானே புலவர் தொழில். என் பரிசை ஏற்க மறுத்த அந்தப் புலவர் யார்? அதைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒருவேளை வாயிற்காவலனுக்கு அவர் யார் என்று தெரியலாம். அவனைக் கேட்டுப் பார்க்கலாம்.

(வாயிற்காவலனை நோக்கி) நேற்று ஒரு புலவர் என்னைப் பார்க்க வந்தார் அல்லவா? அவர் யார்? அவர் பெயர் என்ன தெரியுமா?

வாயிற்காவலன்: மன்னா, அவர் பெயர் எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை. அவர் பெரும்புலவர் என்று தன்னைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசிக்கொண்டார்.  தங்களை நன்கு தெரியும் என்றார். அவர் பெயர் பெரு என்று ஆரம்பித்ததாக ஞாபகம்.

அதியமான்: அவருடைய தோற்றம் எப்படி இருந்தது என்று கூற முடியுமா?

வாயிற்காவலன்: நல்ல உயரம், மெலிந்த உடல், தாடி, மீசை, சரியாகத் தலை வாரவில்லை, உரத்த குரல், தன்னைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசினார். குன்றுகளையும் மலைகளையும் கடந்து வந்ததாகக் கூறினார். அவ்வளவுதான் எனக்கு ஞாபகம்.

அதியமான்: போதும். நீ சொன்னதில் இருந்து அவர் யார் என்று கண்டுபிடித்துவிட்டேன். அவர் மீண்டும் வருவதாகக் கூறினாரா?

வாயிற்காவலன்: அப்படி எதுவும் சொல்லவில்லை. அவர் நடந்துகொண்டதைப் பார்த்தால் இனி அவர் வரமாட்டார் என்று தோன்றுகிறது.

அதியமான்: (தனக்குத்தானே கூறிக்கொள்கிறான்) வந்தவர் பெருஞ்சித்திரனார்தான். பாவம்; அவர் மிகுந்த வறுமையில் இருக்கிறார். நான் அவரைப் பார்த்திருக்க வேண்டும். அவரைப் பார்க்காமல் நான் அவருக்குப் பரிசு அளித்ததை அவர் தன்னுடைய மானத்துக்கு இழுக்கு என்று எண்ணி என்மீது கோபத்தோடு இங்கிருந்து போய்விட்டார். நான் தவறு செய்துவிட்டேன்.


 

அங்கம் – 3, காட்சி – 1

இடம்: வெளிமானின் அரண்மனை

பங்குபெறுவோர்: பெருஞ்சித்திரனார், வெளிமானின் பணியாள்

பின்னணி: பெருஞ்சித்திரனாரும் வேலனும் வெளிமானைப் பார்க்கப் போகிறார்கள். அவர்கள் சென்ற நேரம் அவன் இறக்கும் தருவாயில் இருக்கிறான்.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்கள்: 237, 238

வேலன்:  அண்ணா, உங்களுக்கு வெளிமானொடு நல்ல பழக்கமுண்டா?

 

பெருஞ்சித்திரனார்: நான் வெளிமானை நன்கு அறிவேன்.  நான் ஒருமுறை வெளிமானின் வாயிலை அணுகிப் பசியுடன் பாடிய காலத்தில், “நீ நெடுங்காலம் வாழ்க என்று வெளிமானை வாழ்த்தினேன். அப்பொழுது அவன் கோடைகாலத்துக்கேற்ற நிழல்போல, எனக்கு உதவினான்.  அவன் யாரிடத்தும் பொய் கூறாத அறிவுடையவன்; கொடையிற் சிறந்த வள்ளல்.  அவன் கண்டிப்பாக என் பாடலைக் கேட்டு மகிழ்ந்து, நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே பொன்னும் பொருளும் அளிப்பான். நாம் விரைவில் நம் ஊருக்குப் போய் யாழினியையும், சிலம்பனையும் நம் தாயையும் பார்க்கலாம். அதோ, வாயிற்காவலன் வருகிறான்.

 

வாயிற்காவலன்: ஐயா, நீங்கள் யார்?

பெருஞ்சித்திரனார்: நான் ஒரு கவிஞன். என் பெயர் பெருஞ்சித்திரனார். நான் வெளிமானை நன்கு அறிவேன். அவனைப் பார்ப்பதற்காக நான் வந்திருக்கிறேன் என்று நீ போய் அவனிடம் கூறு.

வாயிற்காவலன்: ஐயா, மன்னர் மிகவும் உடல்நலமில்லாமல் இருக்கிறார். அவர் இறக்கும் தருவாயில் இருக்கிறார். நான் சென்று, நீங்கள் வந்திருப்பதாகக் கூறுகிறேன். ஆனால், நீங்கள் மன்னரை இப்பொழுது பார்க்கமுடியாது என்று நினைக்கிறேன். (வாயிற்காவலன் செல்கிறான்)

வாயிற்காவலன்: (இளவெளிமானிடம்) மன்னரைப் பார்ப்பதற்குப் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் வந்திருக்கிறார்.

வெளிமான்: (பேசமுடியாத நிலையில், நெஞ்சு வலியோடு, இருமிக்கொண்டு) பெருஞ்சித்திரனார் வந்திருக்கிறாரா? அவர் பெரும் புலவர். அவரை நான் நன்கு அறிவேன். அவரைப் பார்த்து, அவர் பாடலைக் கேட்டு, அவருக்குப் பரிசளிக்க முடியாத நிலையில் உள்ளேனே!

இளவெளிமான்: (வெளிமானைப் பார்த்து) அண்ணா, நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இப்பொழுது அவரைப் பார்க்க வேண்டாம்.

வெளிமான்: (இளவெளிமானிடம்) நீ அவருக்குப் பரிசு கொடு.(அவ்வாறு சொல்லியவுடன், வெளிமான் இறந்து போகிறான்)

வாயிற்காவலன்:(பெருஞ்சித்திரனாரிடம்) ஐயா, நீங்கள் வந்திருப்பதாக மன்னரிடம் கூறினேன். உங்களுக்குப் பரிசு கொடுக்குமாறு அவர் இளவல் இளவெளிமானிடம் கூறிவிட்டு இறந்துபோய்விட்டார். ஆனால், இப்பொழுது இளவெளிமான் வரமாட்டார்.

பெருஞ்சித்திரனார்: (வெளிமானின் அரண்மனையிலிருந்து செல்கிறார். செல்லும் வழியில் வேலனிடம் கூறுகிறார்). பரிசு கிடைக்கும் என்று நினைத்து வந்தேன். இரக்கமற்ற கூற்றுவன் வெளிமானைக் கொன்றுவிட்டான். சோற்றுப் பானையில் சோற்றை எதிர்பார்த்துக் கையை உள்ளேவிட்டபொழுது, அங்குச் சோற்றுக்குப் பதிலாக நெருப்பு இருந்ததுபோல் என் நிலை ஆகியது. 

வேலன்: அண்ணா, வருத்தம் அடையாதீர்கள்.

பெருஞ்சித்திரனார்: கூற்றுவனின் கொடிய செயலால் என் தலைவன் இறந்தான்.  ஐயகோ! அதை அறியாமல் நான் அவனைக் காண வந்தேன். என் சுற்றத்தார் என்ன ஆவர்?  மழைபொழியும் இரவில், கவிழ்ந்த மரக்கலத்திலிருந்து கடலில் விழுந்த கண்ணில்லாத ஊமையன் பெருந்துயரம் அடைந்ததுபோல் ஆனேன். இனி என்ன செய்வது? உயிர் வாழ்வதைவிட இறப்பதே தகுந்த செயலாகத் தோன்றுகிறது.

வேலன்: அண்ணா அவ்வாறு கூறாதீர்கள். நீங்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். இளவெளிமான் உங்களுக்குப் கண்டிப்பாகப் பரிசளிப்பார்.


 

அங்கம் – 3, காட்சி 2

இடம்: வெளிமான் அரண்மனை

பங்குபெறுவோர்: வாயிற்காவலன், பெருஞ்சித்திரனார், வேலன்

பின்னணி: வெளிமான் இறந்ததற்காக இளவெளிமானுக்குத் தன் வருத்தத்தைத் தெரிவிப்பதற்காக மறுநாள் பெருஞ்சித்திரனார் வெளிமானின் அரண்மனைக்குச் செல்கிறார். வேலனும் உடன் போகிறான்.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: 207

வாயிற்காவலன்: ஐயா, நீங்கள் வந்தால் உங்களுக்கு இந்தப் பரிசை அளிக்குமாறு மன்னரின் இளவல் இளவெளிமான் கூறினார். இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

பெருஞ்சித்திரனார்: என்னைக் காணாமல், என் தகுதியை அறியாமல், ஓர் இரவலனுக்கு அளிப்பதைப்போல் இளவெளிமான் எனக்கு மிகச் சிறிதளவு பரிசு அளித்திருக்கிறான். நான் அதைப் பெற்றுக்கொள்ள மாட்டேன்.

வேலன்: அண்ணா, இப்பொழுது என்ன செய்வது?

பெருஞ்சித்திரனார்: வேலன்! இரைக்காக ஒரு புலி ஒரு யானையைத் தாக்கினால், அந்த யானை தப்பிப் போனால், யானைக்குப் பதிலாக, அந்தப் புலி  எலியைப் பிடிக்க விரும்பாது.  அலைகள் மிகுந்த கடலில் விரைந்து சென்று சேரும் ஆற்று நீர்போல், நாமும் பிற மன்னர்களிடம் விரைந்து சென்று, மிகுந்த பரிசிலைப் பெற்று வருவோம். வேலா, மனம் தளராதே. நமக்குப் பரிசளிக்க மன்னர்கள் காத்திருக்கிறார்கள். வா போகலாம்!


 

அங்கம் – 4, காட்சி – 1

இடம்: பெருஞ்சித்திரனார் வீடு

பங்குபெறூவோர்: பெருஞ்சித்திரனார் மனைவி யாழினி

பின்னணி: அதியமானிடம் சென்று பரிசுபெற்று விரைவில் வருகிறேன் என்று சொல்லிச் சென்ற பெருஞ்சித்திரனார் இன்னும் வரவில்லை. அவருடைய மனைவியும், மகனும் தாயும் மிகுந்த வறுமையால் வாடுகிறார்கள். அவர்களுக்கு உண்ண உணவில்லை.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: 160

பெருஞ்சித்திரனாரின் தாய்: யாழினி! அடுப்பங்கரையில் ஏதோ ஓசை கேட்கிறதே. அது என்ன ஓசை?

யாழினி: சிலம்பனுக்குப் பசி. அவன் என்னிடம் பால் குடிக்க முயற்சி செய்தான். அவனுக்குக் கொடுக்க என் மார்பகங்களில் பால் இல்லை. பசி தாங்க முடியாமல், அடுப்பங்கரைக்குச் சென்று, எந்தப் பானையிலாவது சோறு இருக்குமா என்று ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறான். எந்தப் பானையிலும் சோறில்லை. நீங்கள் கேட்கும் ஓசை அடுப்பங்கரையில் சிலம்பன் செய்யும் ஓசைதான்.

 பெருஞ்சித்திரனாரின் தாய்: கொல்லையில் கொஞ்சம் கீரை முளைத்திருக்கிறது. என்னால் நடக்க முடியவில்லை. முடிந்தால் நானே கொல்லைக்குப் போய் அந்தக் கீரையைப் பறித்துக்கொண்டு வருவேன்.  நீ போய் அதைப் பறித்து ஒரு குழம்பு வை; சிலம்பனுக்கு உண்ணுவதற்கு எதாவது கொடு. அவனுக்கு ஆறுதலாக எதாவது சொல்.

யாழினி: மாமி! நீங்கள் போக வேண்டாம். நான் போய்க் கீரையைப் பறித்துக் குழம்பு வைக்கிறேன். ஆனால், குழம்பில் போடுவதற்கு உப்பில்லை. உப்பில்லாமல் வைக்கிறேன். அதியமானைப் பார்த்துப் பரிசு வாங்கி வருகிறேன் என்று சொல்லிச் சென்றவர் இன்னும் வரவில்லை. நமக்கு எப்பொழுது நல்ல காலம் பிறக்குமோ! மற்றவர்களைப்போல் நாம் எப்பொழுது வாழப்போகிறோமோ!

 பெருஞ்சித்திரனாரின் தாய்: அவன் விரைவில் வந்துவிடுவான். சரி, சரி. நீ போய் வேலையைப் பார்; சிலம்பனைக் கவனி.

யாழினி: (சிலம்பனிடம் சென்று) வா, இங்கே வா. அழாதே. அங்கே பார். புலி வருகிறது. அழுதால் புலி வந்து உன்னைப் பிடித்துக்கொண்டு போய்விடும். (சிலம்பன் தொடர்ந்து அழுகிறான்). அங்கே பார்! அந்தத் திங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் சமைத்து உனக்குச் சோறு கொடுக்கிறேன். அந்தத் திங்களைப் பார்த்துக்கொண்டு நீ உண்ணலாம். (சிலம்பன் தொடர்ந்து அழுகிறான்). சரி, உன் தந்தையை நினைத்து, அவரைக் காணவில்லையே என்று அழுகிறாயா? அழாதே! அவர் நாளைக்கு வந்துவிடுவார். (சிலம்பன் அழுவதை நிறுத்துகிறான்.)


 

அங்கம் – 5, காட்சி – 1

இடம்: குறுநில மன்னன் குமணனின் அரண்மனை

பங்குபெறுவோர்: குமணன், பெருஞ்சித்திரனார், வேலன்

பின்னணி: இளவெளிமான் அளித்த பரிசை ஏற்க மறுத்த பெருஞ்சித்திரனார், குமணனிடம் பரிசுபெறுவதற்காகச் செல்கிறார்.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்கள்: 158, 159

குமணன்: வாருங்கள், புலவர் பெருஞ்சித்திரனார் அவர்களே! உங்களைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆயின.

பெருஞ்சித்திரனார்: மன்னா! பாரி, காரி, ஓரி, அதியமான், பேகன், ஆய் அண்டிரன், நள்ளி ஆகிய கடையெழு வள்ளல்கள் எழுவரும் இறந்துவிட்டார்கள். அவர்களுக்குப் பிறகு, பாடிவரும் பாணரும் மற்றவரும் படும் துன்பத்தைத் தீர்ப்பவன் நீ என்பதால் உன்னை நினைத்து நான் இங்கே விரைந்து வந்தேன். குறையாத வருவாயையுடைய முதிரமலைக்குத் தலைவ! புகழ் மேம்பட்ட வண்மையுடன் பகைவரை வென்று உன் வேல் உயர்வதாக!

குமணன்: உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

பெருஞ்சித்திரனார்: மன்னா! நான் மன்னர்களைப் பாடிப் பரிசு பெற்று வருகிறேன் என்று என் மனைவியிடம் கூறி, என் இல்லத்தைவிட்டுப் புறப்பட்டு ஓராண்டு காலம் ஆகிவிட்டது. நான் பரிசுகளோடு வருவேன் என்று என் சுற்றத்தார் காத்திருக்கிறார்கள்.  எனது வறுமை துரத்த, உனது புகழ் என்னைக் கொண்டுவந்தது. உனது கொடைத்திறத்தைப் பற்றிய சில செய்திகளை நான் பாடல்களாகத் தொடுத்ததை அன்போடு கேட்பாயாக. (பெருஞ்சித்திரனார் குமணனைப் புகழ்ந்து பாடுகிறார்)

குமணன்: உங்கள் பாடல் அருமையாக உள்ளது.   

பெருஞ்சித்திரனார்: மன்னா! நீ அளிக்கும் செல்வத்தைக் கண்டு என் மனைவி வியக்கும் வண்ணம் மலைபோன்ற பெரிய யானை மீது ஏறிப் பெருமையுடன் செல்ல விரும்புகிறேன். ஆனால், நீ அன்போடு எதை அளித்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன். (குமணன் பெருமளவில் பொன்னும் பொருளும், யானைகளையும் பெருஞ்சித்திரனாருக்குப் பரிசாக அளிக்கிறான்)

அங்கம் – 6, காட்சி – 1

இடம்: பெருஞ்சித்திரனார் தன் இல்லத்தை நோக்கிச் செல்கிறார்.

பங்கு பெறுவோர்: பெருஞ்சித்திரனார், வேலன்

பின்னணி: தன் இல்லத்துக்குப் போகும் வழியில், பெருஞ்சித்திரனார் இளவெளிமான் அரண்மனைக்கு அருகே உள்ள அவனுடைய காவல் மரத்தில் ஒரு யானையைக் கட்டிவிட்டு, அது அவனுக்கு அவர் அளித்த பரிசு என்று கூறிவிட்டுத் தன் ஊருக்குச் செல்கிறார்.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்:162

பெருஞ்சித்திரனார்: இளவெளிமான்! நீ வறுமையில் உள்ளவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் வள்ளல் இல்லை. வறுமையில் இருப்பவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் மன்னர்களும் வள்ளல்களும்  இல்லாமலும் இல்லை. வறுமையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்  என்பதையும் அவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் வள்ளல்களும் இருக்கிறார்கள் என்பதையும் நீ அறிந்து கொள்வாயாக. உன் ஊரில் உள்ள காவல் மரத்துக்கு எவ்விதமான கேடும் செய்யக்கூடாது என்பதையும் அதில் எதையும் கட்டக் கூடாது என்பதையும் நான் அறிவேன். ஆனால், இப்பொழுது நான் உன்னுடைய காவல் மரத்தில் ஒரு பெரிய யானை ஒன்றைக் கட்டப் போகிறேன்.  அந்தப்  பெரிய யானை நான் உனக்கு அளிக்கும் பரிசு. நான் செல்கிறேன்.


 

அங்கம் – 7, காட்சி – 1

இடம்: பெருஞ்சித்திரனார் இல்லம் இருக்கும் தெரு

பங்குபெறுவோர்: பெருஞ்சித்திரனார், வேலன், யாழினி, சிலம்பன், பெருஞ்சித்திரனாரின் தாயார், சுற்றத்தார் சிலர்

பின்னணி: குமணனிடம் பரிசுபெற்று, இரண்டு பெரிய யானைகளில் பெருஞ்சித்திரனாரும் வேலனும் வருகிறார்கள்.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்:163

சுற்றத்தார்: பெருஞ்சித்திரனார் யானையில் வருகிறார். அவர் இளவல் வேலனும் யானையில் வருகிகிறான். அவர்கள் கொண்டுவரும் பொருட்களை யானைகள் சுமக்க முடியாமல் சுமந்துவருகின்றன. வியப்பாக இருக்கிறதே!

யாழினி: மாமி, அவர் வந்துவிட்டார். சிலம்பா, அதோ பார், உன் அப்பா யானையில் வருகிறார்.

பெருஞ்சித்திரனார்: (யானையில் இருந்து இறங்குகிறார்) யாழினி! இந்தப் பொருள்கள் அனைத்தும் முதிரமலைத் தலைவன் குமணன் கொடுத்தவை. இவற்றை, நீ விரும்புபவர்களுக்குக் கொடு; உன்னை விரும்புபவர்களுக்குக் கொடு; நம் பசி நீங்குவதற்காக நமக்குக் கடன் கொடுத்தவர்களுக்குக் கொடு; யாருக்கு வேண்டுமானாலும் கொடு; என்னைக் கலந்து ஆலோசிக்காமல் எல்லோருக்கும் கொடு.

அனைவரும்: பெருஞ்த்திரனார் வாழ்க! முதிரமலை மன்னன் குமணன் வாழ்க! வள்ளல் குமணன் வாழ்க!

Comments

Popular posts from this blog

பாரியின் கதை

கொடை மடம் கொண்ட பேகன்

கோப்பெருஞ்சோழன்