இடித்துரைக்கும் புலவர் கோவூர் கிழார்

இடித்துரைக்கும் புலவர் கோவூர் கிழார்

அங்கம் – 1, காட்சி – 1

இடம்: கோவூர் கிழாரின் வீடு

பங்குபெறுவோர்: கோவூர் கிழார், கோவூர் கிழாரின் மனைவி கோதை

பின்னணி: கோவூர் கிழாரும் அவர் மனைவியும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

கோவூர் கிழார்: கோதை! நான் சென்று நமது மன்னன் நலங்கிள்ளியைச் சந்தித்து வரலாம் என்று நினைக்கிறேன்.

கோதை: இப்பொழுதுதான் அறுவடை முடிந்திருக்கிறது. நீங்கள் சில நாட்கள் ஓய்வெடுக்காமல் இப்பொழுதே மன்னனைக் காண்பதற்குப் பூம்புகாருக்குப் போகவேண்டுமா?

கோவூர் கிழார்: நம் நிலத்தில் பணிபுரிவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் உழுதார்கள், விதை விதைத்தார்கள், களையெடுத்தார்கள், அறுவடை செய்தார்கள். நான் என்ன செய்தேன்? நான் ஏன் ஓய்வெடுக்க வேண்டும்? கரிகாலனின் மகன் வேற்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி இறந்தபின், அவன் மகன் நலங்கிள்ளி பூம்புகாரிலிருந்து ஆட்சி செய்கிறான். அவன் வீரம் மிகுந்தவன்; குறுகிய காலத்தில் பல வெற்றிகளைப் பெற்றவன். அவனைப் பார்த்து அவனைப் பாராட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் நான் சென்று நலங்கிள்ளியைப் பார்க்கப் போகிறேன்.

கோதை: நீங்கள் தனியாகப் போகபோகிறீர்களா?

கோவூர் கிழார்: இல்லை. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் (சாத்தனார்) என்ற என் நண்பர் உறையூரிலிருந்து கோவூருக்கு வந்திருக்கிறார். அவரும் நானும் சேர்ந்துதான் போகப்போகிறோம். மேலும், நாங்கள் நடந்து செல்லப்போவதில்லை. நம்முடைய தேரில்தான் போகப்போகிறோம். நீ என்னைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் விரைவில் திரும்பி வந்துவிடுவோம்.

அங்கம் – 1, காட்சி – 2

இடம்: கோவூர் கிழாரின் வீடு

பங்குபெறுவோர்: கோவூர் கிழார், சாத்தனார், கோதை

பின்னணி: சாத்தனார் வருகிறார். கோவூர் கிழாரும், சாத்தனாரும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

சாத்தனார்: வணக்கம். கோவூர் கிழார் அவர்களே!

கோவூர் கிழார்: வணக்கம். வாருங்கள் புலவர் சாத்தனார் அவர்களே! எங்கள் மன்னன் நலங்கிள்ளியைப் பற்றி என்ன நினைக்கீறீர்கள்?

சாத்தனார்: அவன் வீரத்திலும் கொடையிலும் சிறந்து விளங்குவதாகக் கேள்விப்பட்டேன்.

கோவூர் கிழார்: உங்கள் மன்னன், உறையூரில் இருக்கும் நெடுங்கிள்ளியின் ஆட்சி எப்படி நடைபெறுகிறது?

சாத்தனார்: அவ்வளவு சிறப்பாக இருப்பதாகக் கூற முடியாது.

கோவூர் கிழார்: அது சரி. என் மனைவி நமக்கு உணவு தயாரித்திருக்கிறாள். நாம் சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்.

சாத்தனார்: ஐயா, உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில், சேரன் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னனையும், பதினொரு குறுநில மன்னர்களையும் கரிகாலன் வென்றான். அதே இடத்தில் நடைபெற்ற மற்றொரு போரில், வேறு சிலரையும் வென்று அவன் தமிழகம் முழுவதையும் தன் ஆட்சிக்குக் கீழ்  கொண்டுவந்தான்.

கோவூர் கிழார்: ஐயா, அதெல்லாம் பழைய கதை.

சாத்தனார்: பழைய கதையிலிருந்து ஆரம்பித்தால்தானே இன்றைய கதைக்கு வர முடியும்.

கோவூர் கிழார்: சரி, தொடருங்கள்.

சாத்தனார்: கரிகாலன் இறந்த பிறகு, அவனுடைய ஆட்சிக்குக் கீழ் இருந்த தமிழ் நாட்டை இரண்டு நாடுகளாகப் பிரித்து, கரிகாலனின் மகன் வேற்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி என்பவன் பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தான். வேற்பஃறடக்கைக்குக் கிள்ளிவளவன், நலங்கிள்ளி மற்றும் மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தார்கள். மற்றொரு பகுதியைக் கரிகாலனின் மற்றொரு மகன் மணக்கிள்ளி என்பவன் உறையூரைத் தலைநகரமாகக்கொண்டு ஆட்சி புரிந்தான். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்ற ஒரு மகனும்  நற்சோணை என்ற ஒரு மகளும் இருந்தார்கள். நற்சோணை சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணம் புரிந்தாள்.

கோவூர் கிழார்: ஐயா, இந்த வரலாற்றுச் செய்திகளுக்கும் உங்கள் மன்னன் நெடுங்கிள்ளியின் ஆட்சி செம்மையாக இல்லாமல் இருப்பதற்கும் என்ன தொடர்பு?

சாத்தனார்: தொடர்பு இருக்கிறது; சொல்கிறேன். என்ன காரணத்தாலோ, வேற்பஃறடக்கைக்கும் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் போர் நடைபெற்றது. அந்தப் போரில் வேற்பஃறடக்கையும் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் இறந்தார்கள். தன் சகோதரியின் கணவனை வேற்பஃறடக்கை கொன்றதால், நெடுங்கிள்ளி வேற்பஃறடக்கையின் மகன் நலங்கிள்ளிமீது கோபம்கொண்டு, அவனைப் பகைவனாகக் கருதுகிறான். எங்கள் மன்னன் நெடுங்கிள்ளி உங்கள் மன்னன் நலங்கிள்ளியைப்போல் சிறந்த வீரனில்லை; போரைக் கண்டு அஞ்சுபவன். நெடுங்கிள்ளிக்கும் நலங்கிள்ளிக்கும் இடையே எப்பொழுதும் போர்தான். அதனால், எங்கள் நாட்டில் நல்லாட்சி நடைபெறவில்லை.

கோவூர் கிழார்: சரி, நாம் இருவரும் சென்று நலங்கிள்ளியையும் நெடுங்கிள்ளியையும் சந்த்தித்து, அவர்களிடையே அமைதியை உருவாக்குவோம்.

சாத்தனார்: நானும் அவ்வாறுதான் சிந்திக்கிறேன். நாம் நம்மால் இயன்றவரை முயற்சி செய்து அவர்களிடையே நடைபெறும் போர்களைத் தடுப்போம்.

கோவூர் கிழார்: கோதை, நாங்கள் சென்று வருகிறோம்.

கோதை: சென்று வாருங்கள். விரைவில் திரும்பி வாருங்கள்.

 (கோவூர் கிழாரும், சாத்தனாரும் நலங்கிள்ளியைச் சந்திப்பதற்காகக் கிளம்புகிறார்கள். கோதை அவர்களை வழி அனுப்புகிறாள்.)

அங்கம் – 2,  காட்சி-1

இடம்: நலங்கிள்ளியின் அரண்மனை

பங்குபெறுவோர்: கோவூர் கிழார், சாத்தனார், நலங்கிள்ளி

பின்னணி: கோவூர் கிழாரும் சாத்தனாரும் நலங்கிள்ளியோடு உரையாடுகிறார்கள்.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்கள்: 31,27

கோவூர் கிழார், சாத்தனார்: வணக்கம், மன்னா!

நலங்கிள்ளி: வாருங்கள் புலவர்களே! இரண்டு புலவர்களும் சேர்ந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் இருவரையும்  காண்பதில் பெருமகிழ்ச்சி.

கோவூர் கிழார்: மன்னா! தமிழர்களுடைய வாழ்க்கைக் குறிக்கோள்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றில் எப்படி அறம் முதன்மையானதாகக் கருதப்படுகிறதோ அதுபோல், சேர, சோழ , பாண்டிய மன்னர்களுள் நீ தான் முதன்மையானவன்.  நீ எப்பொழுதும் போர்ப்பாசறைகளிலேயே இருக்கிறாய். உன் வீரர்கள் எப்பொழுதும் போருக்குப் போவதையே விரும்புகிறார்கள். நீ உன் படையோடு தங்கள் நாட்டுக்கு வந்துவிடுவாயோ என்று நினைத்து வடநாட்டு மன்னர்கள் அச்சத்தோடு உறக்கமின்றி உள்ளனர்.

நலங்கிள்ளி: உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எனக்குப் போர்புரிவதில் விருப்பமில்லை. ஆனால், மற்றவர்கள் படையெடுத்து வந்து என்னையும் என் மக்களையும் தாக்கினால், அவர்களோடு போர்புரிய வேண்டியதாக உள்ளது.

சாத்தனார்: மன்னா! உன் பகைவர்கள் உனக்குப் பயந்து காட்டில் ஒளிந்து வாழ்கிறார்கள். உன் நாடு வளமானதாக உள்ளது. உன்னைப்போல் புகழ் பெற்றவர்கள் ஓட்டுநர் இன்றித் தானே இயங்கும் வானவூர்தியில் ஏறி விண்ணுலகம் செல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சிறந்த அறிஞர்களாலும்கூட உன்னை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு அடக்கமும் வலிமையும் உடயவன் நீ. இல்லையென்று வருந்தி வருவோர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அருள் செய்க! உன் செல்வம் உனக்குப் புகழ் தருவதாகுக!

நலங்கிள்ளி: நீங்கள் இருவரும் என்னை அதிகமாகப் புகழ்கிறீர்கள். உங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களுக்கு என் அன்பார்ந்த பரிசு. இவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். (கோவூர் கிழாருக்கும் சாத்தனாருக்கும் நலங்கிள்ளி பரிசு அளிக்கிறான்.)

கோவூர் கிழார், சாத்தனார்: நாங்கள் பரிசு பெறுவதற்காக வரவில்லை.

நலங்கிள்ளி: என்னிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்? தயங்காமல் கூறுங்கள்.

கோவூர் கிழார்: மன்னா! உனக்கும் உன் உறவினன் நெடுங்கிள்ளிக்கும் தொடர்ந்து போர் நடந்துவருகிறது. நீங்கள் இருவரும் போர் புரியாமல் இருந்தால், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம். நீங்கள் இருவரும் போர் புரியாமல் இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.

நலங்கிள்ளி: என் விருப்பமும் அதுதான். ஆனால், நெடுங்கிள்ளியின் வீரர்கள், என் நாட்டுக்குள் வந்து பசுக்களைக் கவர்ந்து செல்கிறார்கள். என் நாட்டுக்குள் வந்து மக்களைத் துன்புறுத்துகிறார்கள். இதுபோன்ற செயல்களை எப்படிப் பொறுத்துக்கொண்டு இருக்க முடியும். இப்பொழுது நெடுங்கிள்ளி ஆவூரில் இருக்கிறான். என் தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டிருக்கிறான். பல நாட்களாக முற்றுகை தொடர்கிறது. ஆனால், நெடுங்கிள்ளி போருக்கு வராமல் அரண்மனையில் ஒளிந்துகொண்டிருக்கிறான். நீங்கள் இருவரும் சென்று நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறி, அவனைப் போர் செய்யச் சொல்லுங்கள் அல்லது தோல்வியை ஏற்றுக்கொள்ளச்சொல்லுங்கள்.

கோவூர் கிழார், சாத்தனார்:உன் விருப்ப்படியே நாங்கள் ஆவூருக்குச் சென்று நெடுங்கிள்ளியைச் சந்தித்து, அவனுக்கு அறிவுரை கூறுகிறோம். நாங்கள் சென்று வருகிறோம், மன்னா.

அங்கம் – 3, கட்சி -1

இடம்: நெடுங்கிள்ளியின் ஆவூர் அரண்மனை

பங்குபெறுவோர்: கோவூர் கிழார், சாத்தனார், மாவளத்தான், படைவீரன்1 (மாவளத்தானின் படைவீரன்), படைவீரன்2 (நெடுங்கிள்ளியின் படைவீரன்)

பின்னணி: கோவூர் கிழாரும் சாத்தனாரும் நெடுங்கிள்ளியைச் சந்திக்கப் போகிறார்கள்.

படைவீரன் 1: ஐயா, நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?

கோவூர் கிழார்: நாங்கள் இருவரும் புலவர்கள். நெடுங்கிள்ளியைச் சந்திக்குமாறு நலங்கிள்ளி எங்களை அனுப்பினான். நெடுங்கிள்ளியைப் பார்க்க வேண்டும்.

படைவீரன்: இங்கேயே இருங்கள். நான் சென்று படைத்தளபதி மாவளத்தானிடம் உங்கள் வருகையைப் பற்றிக் கூறுகிறேன். அவர் அனுமதி இல்லாமல் எவரும் உள்ளே செல்ல முடியாது.

படைவீரன்1: (மாவளத்தானிடம் சென்று) ஐயா, மன்னன் நெடுங்கிள்ளியைப் பார்ப்பதற்காக இரண்டு புலவர்கள் வந்திருக்கிறார்கள்.

மாவளத்தான்: அவர்களை இங்கே வரச்சொல்.(கோவூர் கிழாரும் சாத்தனாரும் வருகிறார்கள்)

மாவளத்தான்: உங்கள் இருவரையும் என் தமையன் நலங்கிள்ளி அனுப்பியதாகக் கேள்விப்பட்டேன்.

கோவூர் கிழார்: ஆம். மன்னன் நலங்கிள்ளிதான் எங்களை அனுப்பினான். உன்னிடம் கொடுக்கச் சொல்லி இந்த ஓலையைக் கொடுத்தான். (ஓலையைக் கொடுக்கிறார்)

மாவளத்தான்: சரி, நீங்கள் உள்ளே போகலாம். ஆனால் எச்சரிக்கையாக இருங்கள். (நெடுங்கிள்ளியின் அரண்மனைக்குள் கோவூர் கிழாரும் சாத்தனாரும் செல்கிறார்கள்.)

படைவீரன்2: ஐயா நீங்கள் யார்?

கோவூர் கிழார்: நாங்கள் இருவரும் புலவர்கள். மன்னன் நெடுங்கிள்ளியைப் பார்த்து எங்கள் கவிதைகளைப் பாடிப் பரிசு பெற வந்திருக்கிறோம்.

படைவீரன்2: நீங்கள் இப்பொழுது மன்னனைப் பார்க்க முடியாது.

கோவூர் கிழார்: ஏன் முடியாது? உங்கள் மன்னன் புலவர்களைப் பார்க்க மாட்டானோ?

படைவீரன்2: உங்களுக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. காலையிலிருந்து நாங்கள் அனைவரும் மன்னனைத் தேடிக்கொண்டிருக்கிறோம். மன்னனைக் காணவில்லை. நீங்கள் இப்பொழுது சென்று பிறகு வாருங்கள். (கோவூர் கிழாரும் சாத்தனாரும் திரும்பிப் போகிறார்கள். போகும் வழியில் மாவளத்தான் இருக்கிறான்.)

மாவளத்தான்: மன்னன் நெடுங்கிள்ளியைப் பார்த்தீர்களா?

கோவூர் கிழார்: காலையிலிருந்து நெடுங்கிள்ளியை அரண்மனையில் காணவில்லையாம். அனைவரும் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.

மாவளத்தான்: அந்தக் கோழை, இங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் போலும்!

அங்கம் – 4, காட்சி – 1

இடம்: நலங்கிள்ளியின் அரண்மனை

பங்குபெறுவோர்: கோவூர் கிழார், கிள்ளி வளவன், மலையமானின் இரண்டு மகன்கள்

பின்னணி: சாத்தனார் ஆவூரிலிருந்து உறையூருக்குச் சென்றுவிட்டார். நெடுங்கிள்ளியோடு போர்புரிவதற்கான ஏற்பாடுகளை நலங்கிள்ளி செய்கிறான் என்று கேள்விப்பட்டு, கோவூர் கிழார் அவனைப் பார்த்துப் போரைத் தடுப்பதற்காக வருகிறார். அரண்மனைக்கு வந்தபொழுது, மலையமான் என்பவனின் இரு மகன்களைக் கிள்ளிவளவன் யானையின் காலிலிட்டுக் கொல்வதற்கு ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறான்.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: 46

கோவூர் கிழார்: இளவரசர் கிள்ளிவளவன் அவர்களே! யார் இந்தச் சிறுவர்கள்? அவர்களை ஏன் யானையின் காலிலிட்டுக்கொலை செய்ய நினைக்கிறாய்?

கிள்ளிவளவன்: இவர்கள் என் பகைவன் மலையமான் திருமுடிக்காரியின் ஆண் மக்கள். நான் மலையமான் திருமுடிக்காரியைப் போரில் தோற்கடித்தேன். இப்பொழுது அவன் குழந்தைகளைக் கொல்லப் போகிறேன்.

கோவூர் கிழார்: இவர்களுடைய தந்தைதானே உனக்குப் பகைவன். இவர்கள் மிகவும் சிறுவர்கள். இவர்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையே! இவர்களை ஏன் கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்?

கிள்ளிவளவன்: நான் ,இவர்களைக் கொலை செய்வதைத் தடுப்பதற்கு நீங்கள் யார்?

கோவூர் கிழார்: இளவரசே! என் பெயர் கோவூர் கிழார். நான் ஒரு புலவர். உன் தமையன் நலங்கிள்ளியின் நண்பன். நலங்கிள்ளி நெடுங்கிள்ளியோடு போர்புரியப்போவதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் போரைத் தடுக்கத்தான் நான் வந்தேன். வந்த வழியில் நீ இந்தச் சிறுவர்களைக் கொலை செய்ய முயற்சி செய்வதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இவர்களைக் கொலை செய்யாதே, இவர்களை விட்டுவிடு.

கிள்ளிவளவன்: நீங்கள் புலவர்தானே! “இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முள்மரம் இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும். அதனால்தான் இவர்களைக் கொலைசெய்யப்போகிறேன்.

கோவூர் கிழார்: இளவரசே! இவர்கள் முள்மரம் இல்லை. இவர்கள் முள்ளில்லாத சிறிய செடிகள்; ஒன்றும் அறியாத சிறுவர்கள். சற்று நேரம் முன்பு, இவர்கள் யானைகளைக் கண்டு அஞ்சி அழுதுகொண்டிருந்தார்கள். இப்பொழுது இவர்கள் இந்த மன்றத்தைப் பார்த்து வியப்பால் தங்கள் அழுகையை மறந்துவிட்டார்கள். இவர்களைக் கொலை செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள். நான் நலங்கிள்ளியை பார்க்கப் போகிறேன்.

கிள்ளிவளவன்: நலங்கிள்ளி இங்கு இல்லை. அவன் நெடுங்கிள்ளியோடு போர்புரிவதற்காகத் தன் படையோடு உறையூருக்குச் சென்றிருக்கிறான்.

கோவூர் கிழார்: சரி, அங்குச் சென்று அவனைச் சந்திக்கிறேன். இந்தச் சிறுவர்களைக் கொல்லாதே என்று மீண்டும் ஒருமுறை உன்னை வேண்டுகிறேன்.

அங்கம் – 5, காட்சி – 1

இடம்: நலங்கிள்ளியின் உறையூரில் உள்ள போர்ப்பாசறை

பங்குபெறுவோர்: கோவூர் கிழார், நலங்கிள்ளி

பின்னணி: நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளிக்கும் இடையே நடைபெறவிருக்கும் போரைக் கோவூர் கிழார் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: 45

படைவீரன்: (கோவுர் கிழாரை நோக்கி) ஐயா, நீங்கள் யார்? இது ஒரு போர்ப்பாசறை. நீங்கள் ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்?

கோவூர் கிழார்: நான் ஒரு புலவர். மன்னன் நலங்கிள்ளியைச் சந்தித்து, அவனுக்கும் அவன் உறவினன் நெடுங்கிள்ளிக்கும் இடையே நடைபெறவிருக்கும் போரைத் தடுத்து நிறுத்தலாம் என்று நினைத்து வந்திருக்கிறேன். நான் நலங்கிள்ளியைப் பார்க்க விரும்புகிறேன்.

படைவீரன்: ஐயா, நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய், நீங்கள் வந்திருப்பதாக மன்னிடம் கூறுகிறேன். அவர் உங்களைப் பார்க்க விரும்பினால், நீங்கள் உள்ளே போகலாம். (படைவீரன்  நலங்கிள்ளியிடம் சென்று புலவர் கோவூர் கிழார் வந்திருப்பதாகக் கூறுகிறான். மன்னன் அவரை அழைத்துவரச் சொல்கிறான்.)

படைவீரன்: (கோவூர் கிழாரை நோக்கி) ஐயா, மன்னர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்.(கோவூர் கிழார் பாசறைக்கு உள்ளே செல்கிறார்)

கோவூர் கிழார்: மன்னா, வணக்கம்.

நலங்கிள்ளி:  வாருங்கள் புலவரே! நீங்கள் இந்தப் போர்ப்பாசறைக்கு வந்த காரணம்?

கோவூர் கிழார்: மன்னா! இங்குப் போர் புரியும் நீயும் நெடுங்கிள்ளியும் சோழ மன்னர்கள்தான். இந்தப் போரில் நீங்கள் இருவரும் வெற்றிபெறுவது இயலாத ஒன்று. உங்கள் இருவரில் யார் தோற்றாலும் தோற்பது ஒரு சோழ மன்னன்தானே? உங்கள் செயல் உங்கள் குடிப்பெருமைக்கு உகந்தது அன்று. இந்தப் போர் நடந்தால், மற்ற மன்னர்களெல்லாம் உங்கள் இருவரையும் பார்த்து ஏளனமாகச் சிரிப்பார்கள். இதெல்லாம் உனக்குத் தெரியாதது இல்லை. மன்னா, இந்தப் போர் வேண்டாம்.

நலங்கிள்ளி:புலவரே! நீங்கள் சொல்வதெல்லாம் எனக்குப் புரிகிறது. இந்தப் போர் வேண்டாம் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால், நெடுங்கிள்ளியின் தொல்லை தாங்க முடியவில்லை. அவன் எனக்கும் என் நாட்டு மக்களுக்கும் தொல்லைகொடுக்காமல் இருப்பதாக உறுதிமொழி அளித்தால், இந்தப் போரை நிறுத்துகிறேன். அவ்வாறு உறுதிமொழி அளிக்காவிட்டால், அவன் வீரமுள்ளவனாக இருந்தால், என்னோடு போர் புரியட்டும். நீங்கள் நெடுங்கிள்ளியிடம் சென்று நான் கூறியதைக் கூறுங்கள்.

அங்கம் – 6, காட்சி – 1

இடம்: நெடுங்கிள்ளியின் அரண்மனை

பங்குபெறுவோர்:கோவூர் கிழார், நெடுங்கிள்ளி, புலவர் இளந்தத்தனார்

பின்னணி: போரைத் தடுத்து நிறுத்துவதற்காகக் கோவூர் கிழார் நெடுங்கிள்ளியின் அரண்மனைக்குச் செல்கிறார்.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்கள்: 44, 47

நெடுங்கிள்ளி: வாருங்கள் புலவரே! இந்த ஒற்றனைத் தூக்கிலிடப் போகிறோம்.  இவனைப் பற்றி நீங்கள் ஒரு கவிதை எழுதினால்,  அது மற்ற ஒற்றர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் பாடமாக இருக்கும்.

கோவூர் கிழார்: மன்னா! இவரைத் தூக்கிலிட வேண்டாம். இவர் ஒரு ஒற்றர் இல்லை. இவர் ஒரு புலவர். இவரை நான் நன்கு அறிவேன். வரையாது கொடுக்கும் வள்ளல்களை நினைத்து, காடுகளையும் மேடுகளையும் பாலை நிலங்களையும் கடந்துசென்று, தம்மால் இயன்றதைப் பாடி, அவர்களிடம் பரிசுபெற விரும்பும் புலவர்களில் இவரும் ஒருவர். இவரும் இவரைப் போன்றவர்களும் எவருக்கும் தீமை செய்ய மாட்டார்கள். இவரைக் கொலை செய்ய வேண்டாம்.

நெடுங்கிள்ளி: புலவரே! நீங்கள் சரியான நேரத்தில் வந்து, சரியான கருத்துகளைக் கூறி இவரைக் காப்பாற்றிவிட்டீர்கள். நீங்களும் பரிசுபெறத்தான் வந்தீர்களா?

கோவூர் கிழார்: மன்னா! நான் பரிசுபெறுவதற்காக வரவில்லை. இந்தப் போரைப் பற்றி உன்னிடம் பேசத்தான் வந்தேன். உன்னிடம் தனிமையில் பேச இயலுமா?

நெடுங்கிள்ளி: வாருங்கள், அரண்மனைக்குள்ளே போகலாம். (இருவரும் உள்ளே செல்கிறார்கள்.)

கோவூர் கிழார்: மன்னா! உறையூரை உன் உறவினன் நலங்கிள்ளி பல நாட்களாக முற்றுகையிட்டிருக்கிறான். உன் நாட்டில்,யானைகள் உணவு இல்லாமல் வருந்திப் பிளிறுகின்றன; குழந்தைகள் பாலில்லாமல்  அலறுகின்றன; குடிமக்கள் நீரும் உணவும் இல்லாமல் வருந்துகின்றார்கள். இனியும் நீ உன் அரண்மனைக்குள் ஒளிந்துகொண்டிருப்பது  ஒரு கொடிய செயல். நீ வீரமுள்ளவனாக இருந்தால், உன் கோட்டைக் கதவுகளைத் திறந்து நலங்கிள்ளியுடன் போரிடு. நீ அறவழியில் நடக்க விரும்பினால் இந்தக் கோட்டைக் கதவுகளைத் திறந்து, “இந்த நாடு உன்னுடையது ” என்று கூறி உன நாட்டை நலங்கிள்ளிக்குக் கொடு. நீ அறவழியிலும் செல்லாமல், வீரனாகவும் இல்லாமல் இங்கு ஒளிந்துகொண்டிருப்பது வெட்கத்துக்குரியது. நான் கூற வந்ததைக் கூறிவிட்டேன்; சென்று வருகிறேன்.

அங்கம் – 7, காட்சி – 1

இடம்: நலங்கிள்ளியின் நினைவாக நிறுவப்பட்ட மணிமண்டபம்

பங்குபெறுவோர்: கோவூர் கிழார், சாத்தனார், ஆலத்தூர் கிழார்

பின்னணி: உறையூரில் நடைபெற்ற போரில் நெடுங்கிள்ளி தோல்வியுற்றான். பின்னர் காரியாறு என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் அவன் இறந்தான். சில ஆண்டுகள் கழித்து, நலங்கிள்ளியும் இறந்தான். நலங்கிள்ளியின் நினைவாக பூம்புகாரில் ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டது. நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடிய புலவர்கள் கோவூர் கிழாரும், சாtத்தனாரும்,  ஆலத்தூர் கிழாரும் நலங்கிள்ளியை நினைவுகூர்கிறார்கள். வருத்தத்தின் மிகுதியால் கோவூர் கிழாரும் சாத்தனாரும் பேச இயலாத நிலையில் உள்ளனர். ஆலத்தூர் கிழார் மட்டுமே பேசுகிறார்.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: 225

ஆலத்தூர் கிழார்: நலங்கிள்ளி மிகப் பெரிய படையோடு பல வெற்றிகளைப்பெற்றான். அவன் வீரத்திலும் கொடையிலும் சிறந்து விளங்கினான். சோழன் நலங்கிள்ளி இறந்த பிறகு, அவன் நாடு கள்ளிச் செடிகள் வளர்ந்திருக்கும் களர் நிலமாகிய பாழிடத்தில் முள்ளுடைய பெரிய காடாகியது. முன்பெல்லாம், வேந்தர்களின் அரண்மனைகளில்  வலம்புரிச் சங்குகள் முழங்கினால், அவர்கள் தங்கள் வெற்றியைக் குறித்து முழங்குகிறார்கள் என்று நலங்கிள்ளி நினைப்பான் என்று அஞ்சி, தூக்கணங்குருவிக் கூடுகளைப்போல் அந்தச் சங்குகள் தொங்கவிடப்பட்டிருந்தன. இப்பொழுது உலகாளும் மன்னர்களின் அரண்மனை வாயில்களில், அவர்களைத் துயில் எழுப்புவதற்காக வலம்புரிச் சங்குகள் ஒலிக்கப்படுகின்றன. அவற்றைக் கேட்கும்பொழுதெல்லாம் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடிய புலவர்களாகிய நாங்கள் மூவரும் அவன்  மறைவைக் குறித்து வருந்துகிறோம். நலங்கிள்ளியின் பூதவுடல் அழிந்தாலும் அவனுடைய புகழுடம்புக்கு அழிவே இல்லை. வாழ்க நலங்கிள்ளியின் புகழ்!

Comments

Popular posts from this blog

புலவர் பெருஞ்சித்திரனார்

கொடை மடம் கொண்ட பேகன்

பாரியின் கதை