ஒளவையாரும் அதியமானும்
ஒளவையாரும் அதியமானும்
அங்கம் –
1, காட்சி – 1
இடம்: அதியமான் நெடுமான்
அஞ்சியின் அரண்மனை
பங்குபெறுவோர்: ஒளவையார், வாயிற்காவலன்,
அதியமான்
பின்னணி: அதியமானிடம்
பரிசு பெறுவதற்காக ஒளவையார் வந்திருக்கிறார்.
வாயிற்காவலன்: (ஒளவையாரை நோக்கி) அம்மா! நீங்கள் யார்?
ஒளவையார்: என் பெயர் ஒளவையார். நான் அதியமானைப் பார்க்க வந்திருக்கிறேன்.
வாயிற்காவலன்: அம்மா, இங்கேயே இருங்கள். நான் சென்று நீங்கள் வந்திருப்பதாக
மன்னரிடம் சொல்கிறேன். (வாயிற்காவலன் அதியமானிடம் செல்கிறான்.)
வாயிற்காவலன்: (அதியமானை நோக்கி) மன்னா! வணக்கம். தங்களைப் பார்க்க ஒளவையார்
என்ற ஒரு பெண்பாற் புலவர் வந்திருக்கிறார். அவர் தங்களைக் காண்பதற்கு மிகவும் ஆவலாக
உள்ளார். அவரை உள்ளே வரச் சொல்லட்டுமா?
அதியமான்: வேண்டாம். அவரை அழைத்து வந்து நமது அரண்மனையில் இருக்கச் சொல்.
அவருக்குத் தேவையான எல்லா வசதிகளுக்கும் ஏற்பாடு செய். நான் அவரைப் பிறகு சந்திக்கிறேன்
என்று அவரிடம் கூறு.
வாயிற்காவலன்: அப்படியே செய்கிறேன், மன்னா.
வாயிற்காவலன்: அம்மா! மன்னர் உங்களை அரண்மனையில் தங்கி இருக்கச் சொன்னார். (ஒளவையாரை அரண்மனைக்குள்ளே அழைத்துச் செல்கிறான்.
)
அங்கம் – 1 , காட்சி – 2
இடம்: அதியமானின் அரண்மனை
பங்குபெறுவோர்: வாயிற்காவலன், ஒளவையார்
பின்னணி: ஒளவையார் அதியமானின் அரண்மனையில் பல நாட்கள்
தங்கி இருக்கிறார். ஆனால், அதியமான் அவரைச் சந்திக்கவில்லை. அதனால், கோபத்தோடு அரண்மனையைவிட்டு
ஒளவையார் வெளியேறுகிறார்.
தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: 206
வாயிற்காவலன்: அம்மா! நீங்கள் எங்கே செல்கிறீர்கள். மன்னர் உங்களை இந்த அரண்மனையிலேயே
தங்கியிருக்கச் சொன்னார்.
ஒளவையார்: (வாயிற்காவலனை நோக்கி) கடந்த பல நாட்களாக அதியமானைப் பார்த்துப்
பரிசு பெறுவதற்காக நாள்தோறும் பலர் வருகிறார்கள்; அவர்கள் அனைவரும் பரிசுபெற்றுச் செல்கிறார்கள்.
நான் மட்டும் இந்த அரண்மனைக்குள் ஒரு கைதியைப்போல் அடைபட்டுக் கிடக்கிறேன். உங்கள்
மன்னர் என்னை வந்து பார்க்கவும் இல்லை; எனக்குப் பரிசளிக்கவும் இல்லை.
வாயிற்காவலன்: அம்மா, மன்னர் உங்களை விரைவில் சந்திப்பார். நீங்கள் எங்கும்
போக வேண்டாம். நீங்கள் இங்கிருந்து சென்றுவிட்டால் மன்னர் என்னைக் கோபித்துக் கொள்வார்.
ஒளவையார்: உங்கள் மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி தன்னை
அறியாதவனா? அல்லது, என்னை அறியாதவனா?
அறிவும்
புகழும் உடையவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதனால் உலகம் வெற்றிடமாகிவிடவில்லை.
என்னை மதிக்காத உங்கள் மன்னனைக் காண்பதற்காக நான் இனியும் காத்திருக்கப்
போவதில்லை. என் யாழையும், மூட்டை
முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு நான் செல்கிறேன். மரம் வெட்டும் தச்சனின் திறமை
வாய்ந்த சிறுவர்கள் கோடரியுடன் எங்குச்
சென்றாலும் பிழைத்துக்கொள்வர்கள். அதுபோல், நான் எங்கே சென்றாலும் அங்கே எனக்குப்
பரிசு கிடைக்காமல் போகாது. (ஒளவையார்
அங்கிருந்து செல்கிறார்)
அதியமான்:
(அதியமான் வாயிலுக்கு வந்து, வாயிற்காவலனை
நோக்கி) ஒளவையார் என்று ஒரு புலவர் இங்கு இருந்தாரே. அவர் எங்கே சென்றார் என்று தெரியுமா?
வாயிற்காவலன்: இப்பொழுதுதான் இந்தப் பக்கமாகச் சென்றார். அதிக தூரம் சென்றிருக்க
மாட்டார். நான் சென்று அழைத்து வரட்டுமா?
அதியமான்: வேண்டாம். நானே தேரில் சென்று அவரை அழைத்துவருகிறேன். (அதியமான்
புறப்படுகிறான்.)
அங்கம் – 1, காட்சி – 3
இடம்: அதியமான் நெடுமான்
அஞ்சியின் அரண்மனை
பங்குபெறுவோர்: ஒளவையார், அதியமான்
பின்னணி: அதியமான் ஒளவையாரைச்
சந்தித்து அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான்.
அதியமான்: அம்மா, நீங்கள் என்னோடு வாருங்கள், அரண்மனைக்குச் செல்லலாம்.
ஒளவையார்: நான் உன் அரண்மனைக்கு வரவிரும்பவில்லை. நான் பல நாட்கள் அங்கு
தங்கியிருந்தேன். ஆனால், நீ என்னைச் சந்திக்கவில்லை. என்னைப் பார்க்க விரும்பாத உன்
அரண்மனைக்கு நான் ஏன் வரவேண்டும்?
அதியமான்: அம்மா, நீங்கள் என் அரண்மனைக்கு வந்தது எனக்குத் தெரியும்.
முதல் நாளே நான் உங்களுக்குப் பரிசு கொடுத்திருப்பேன். பரிசு கொடுத்தால், நீங்கள் பரிசை
வாங்கிக்கொண்டு வேறு எங்காவது போயிருப்பீர்கள். நீங்கள் எப்பொழுதும் என்னோடு இருக்க
வேண்டும் என்பதுதான் என் விருப்பம். நான் உங்கள் அழகையும், அறிவையும், சொல்லாற்றலையும்
கண்டு வியக்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். தயவு செய்து என்னோடு அரண்மனைக்கு வாருங்கள்,
என் அரண்மனையிலேயே இருங்கள்.
ஒளவையார்: சரி, வருகிறேன், ஆனால், நான் அங்கு அதிக நாட்கள் தங்க மாட்டேன்.
அதியமான்: சரி. வாருங்கள் போகலாம். (இருவரும் அரண்மனைக்குச் செல்கிறார்கள்)
அதியமான்: ஒளவையார் அவர்களே! உங்களிடம் ஒரு கேள்வி. வயதான பெண்மணியைத்தான்
ஒளவை என்று குறிப்பிடுவார்கள். நீங்கள் இளமையான தோற்றத்தோடுதான் இருக்கிறீர்கள். உங்களுக்கு
ஒளவை என்ற பெயர் எப்படி வந்தது?
ஒளவையார்: நான் மிகவும் சிறுமியாக இருந்தபொழுது, என்னுடைய தாயாரின் தாயார்
ஒருவர் இருந்தார். அவர் வயதானவராக இருந்ததால், அவரை அனைவரும் ஒளவை என்று அழைப்பது வழக்கம்.
அவர் கூனிக்குறுகி, தள்ளாடித்தள்ளாடி நடப்பார்; பற்கள் இல்லாததால், வாய் குழறிப் பேசுவார்.
நான் விளையாட்டுக்காக, அவரைப்போல் நடந்து காட்டினேன்; பேசிக்காட்டினேன். நான் அவரைப்போல்
நடிப்பதைப் பார்த்து என் உறவினர்கள் என்னை ஒளவை என்று அழைக்கத் தொடங்கினார்கள். அந்தப்
பெயரே நிலைத்துவிட்டது.
அதியமான்: உங்கள் உண்மையான பெயர் என்ன?
ஓளவையார்: நான் மிகவும் சிறுமியாக இருந்ததிலிருந்தே என்னை எல்லோரும் ஒளவை
என்று அழைத்ததால், என் உண்மையான பெயர் என்ன என்று எனக்கு ஞாபகம் இல்லை.
அதியமான்: அரண்மனைக்கு வந்துவிட்டோம். இனிமேல் இதுதான் உங்கள் வீடு; இது
உங்கள் அரண்மனை.
அங்கம் – 1, காட்சி – 4
இடம்: அதியமானின் அரண்மனை
பங்குபெறுவோர்: அதியமான், ஒளவையார்
பின்னணி: அங்கும் இங்கும் நடந்துகொண்டு, அதியமான்
ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான்.
தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: 90
ஒளவையார்: மன்னா! உன்னைப் பார்த்தால், ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல்
தோன்றுகிறதே!
அதியமான்: ஆம். சில பகைவர்கள் என்னை எதிர்த்துப் போரிடுவதற்குத் திட்டமிடுவதாக
ஒற்றர் மூலம் தெரிந்துகொண்டேன். அதைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
ஒளவையார்: நீ ஏன் போருக்குத் தயங்குகிறாய்? உன்னை எவராலும் வெல்ல முடியாது.
புலி தாக்கினால், மான்களின் கூட்டம் எதிர்த்து நிற்குமா? கதிரவன் சினந்து எழுந்தால்
இருள் சூழ்ந்து இருக்குமா? பெருமிதத்தோடு பாரவண்டியை இழுத்துச் செல்லும் காளைக்குப்
போக முடியாத வழியும் உண்டா? நீ போர்க்களம் புகுந்தால் உன்னை எதிர்த்து ஆரவாரம் செய்யக்கூடிய
பகைவரும் உளரா?
அதியமான்: போரைக் கண்டு நான் அஞ்சவில்லை. இந்தப் பகைவர்களை வெல்வது எளிது.
தேவையற்ற இந்தப் போரினால் இறக்கப்போகும் வீரர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும்
நினைத்து வருந்துகிறேன். இந்தப் போரைத் தடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.
ஒளவையார்: போரை நிறுத்த விரும்பினால், உன் அமைச்சரைத் தூதுவராக அனுப்பி,
போரைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாமே!
அதியமான்: என் அமைச்சர் அத்தகைய ஆற்றல் உடையவர் இல்லை. அவரைத் தூதுவராக
அனுப்பினால், போரைத் தடுக்க முடியாது. ஆனால், வேறொருவர் இருக்கிறார். அவரை அனுப்பினால்,
கண்டிப்பாகப் போரை நிறுத்த முடியும் என்று நினைக்கிறேன்.
ஒளவையார்: யார் அந்தத் தூதுவர்?
அதியமான்: அது நீங்கள் தான்.
ஒளவையார்: நானா? போரைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? தூதுவராக நான்
போவதா?
அதியமான்: உங்களைப்போல் அறிவும், புலமையும் உடையவர்கள் வேறு எவரும் இல்லை.
உங்களைப் போல் சொல்லாற்றல் உடையவர்களை நான் கண்டதில்லை. நீங்கள் சொல்லும் சொற்களை வெல்லும்
சொற்களை எவராலும் கூற முடியாது. தூதுவராக நீங்கள் சென்றால், கண்டிப்பாக இந்தத் தேவையற்ற
போரைத் தவிர்க்க முடியும்.
ஒளவையார்: எனக்கு என்மீது இருக்கும் நம்பிக்கையைவிட, நீ என்மீது அதிக நம்பிக்கை
வைத்திருக்கிறாய். போரைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கு என்னால் என்ன செய்ய
முடியுமோ அதைச் செய்கிறேன்.
அங்கம் – 2, காட்சி – 1
இடம்: பகைமன்னனின் அரண்மனை
பங்குபெறுவோர்: பகைமன்னன், பகைமன்னனின் படைத்தளபதி, பகைமன்னனின் அமைச்சர்,
படைவீரன் ஒருவன்
பின்னணி: பகைமன்னனைச் சந்திப்பதற்கு ஒளவையார் செல்கிறார். அங்குப் பகைமன்னர்கள்
சிலர் கூடி இருக்கிறார்கள்
தொடர்புடைய புறநானூறுப் பாடல்கள்: 87, 88, 89, 104
படைவீரன்: (ஒளவையாரை நோக்கி) அம்மா! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்.
ஒளவையார்: என் பெயர் ஒளவையார். உங்கள் மன்னனைக் காண விரும்புகிறேன்.
படைவீரன்: அம்மா! நான் மன்னரிடம் சென்று நீங்கள் வந்திருப்பதாகச் சொல்கிறேன்.
(படைவீரன் சென்று மன்னனிடம் ஒளவையாரின் வருகையைப் பற்றிக் கூறுகிறான். மன்னன் ஒளவையாரை
அழைத்துவரச் சொல்கிறான்.)
பகைமன்னன்: நீங்கள் யார்? உங்களைப் பார்த்தால் நாட்டியமாடும் விறலிபோல்
தோன்றுகிறதே! நீங்கள் ஒரு விறலியா? பரிசுபெற வந்திருக்கிறீர்களா?
ஒளவையார்: மன்னா! நான் ஒரு விறலி இல்லை. நான் அதியமானிடம் இருந்து வந்திருக்கிறேன்.
நான் அதியமானின் அவைக்களப் புலவர்.
பகைமன்னன்: நீங்கள் வந்த காரணம்?
ஒளவையார்: மன்னா! நீங்கள் அனைவரும் சேர்ந்து அதியமானோடு போரிடுவதற்குத்
திட்டமிடுவதாகக் கேள்விப்பட்டேன். அதியமான் உங்களோடு போர்புரிய விரும்பவில்லை.
பகைமன்னன்: அதியமான் வலிமை இல்லாதவனா? எங்களோடு போர்புரிவதற்கு அதியமானுக்கு
அச்சமா?
ஒளவையார்: அதியமான் மிகுந்த உடல் வலிமையும் மன வலிமையும் உடையவன். ஒரு
நாளில் எட்டுத் தேர்கள் செய்யும் தச்சன் ஒருவன், ஒரு திங்கள் காலம் கருத்தோடு செய்த
தேர்க்காலைப் போன்ற திண்மை உடையவன் அதியமான். அவன் போரைக் கண்டு அஞ்சாதவன்.
பகைமன்னன்: அதியமான் ஒருவன் மட்டும் வலிமையுடையவனாக இருந்தால் போதுமா? அவனுடைய
படைவீரர்கள் வீரமில்லாதவர்களாக இருப்பதால்தான் அவன் எங்களோடு போர் செய்யத் தயங்குகிறான்
போலும்.
ஒளவையார்: மன்னா! அடிக்கும்
கோலுக்கு அஞ்சாத பாம்புபோல் வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் எங்கள்
நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல் காற்று
மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு, ‘அது
போர்ப்பறையின் முழக்கம்!’ என்று பொங்கி
எழும் என் அரசன் அதியமானும் இருக்கிறான். மன்னா! அதியமான் வலிமை மிகுந்த வீரன்
மட்டுமல்லாமல், எதற்கும் அஞ்சாத வீரர்களுக்குத் தலைவன். அவனை எதிர்த்துப்
போரிட்டால் நீங்கள் தோற்பது உறுதி; சிந்தித்துச்
செயல்படுங்கள்.
பகைமன்னன்: சிந்தித்துதான்
முடிவெடுத்திருக்கிறோம். எங்களிடமும் வீரர்கள் இருக்கிறார்கள். வெகு விரைவில்
அதியமானைத் தகடூரில் போரில் சந்திப்போம்.
ஒளவையார்: நீங்கள், அதியமான்
இளையவன் என்று எண்ணி, அவன் இருக்கும்
ஊரிலேயே அவனை வெல்லலாம் என்று நினைக்கிறீர்கள். சிறிதளவு நீர் இருந்தாலும், அந்த நீரில் முதலை யானையை எளிதாக வென்றுவிடும். அதுபோல், அதியமானை அவன் ஊரில் உங்களால் வெல்ல முடியாது. அவன் ஊரில் மட்டுமல்ல; உங்களால் அவனை எங்கும்
வெல்ல முடியாது. அதியமானோடு போரிடும் எண்ணத்தைத் தவிர்ப்பதுதான் சிறந்தது என்பது என்
கருத்து. நான் கூறவந்ததைக் கூறிவிட்டேன். நான் சென்றுவருகிறேன்.
அங்கம் – 3, காட்சி – 1
இடம்: அதியமானின் அரண்மனை
பங்குபெறுவோர்: ஒளவையார், அதியமான், படைத்தளபதி
பின்னணி: ஒளவையார் பகைமன்னர்களிடம் பேசிய பிறகு திரும்பி வருகிறார். அதியமான்
வேட்டையாடச் சென்ற இடத்தில் ஓர் அரிய நெல்லிக்கனி ஒன்றைக் கொண்டுவந்து ஒளவையாருக்குக்
கொடுக்கிறான்.
தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்கள்: 91,92
அதியமான்: வாருங்கள், ஒளவையார் அவர்களே! உங்கள் சொல்லைக் கேட்டுப் பகைவர்கள்
போர்செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்று ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்டேன்
ஒளவையார்: அப்படியா? மகிழ்ச்சி. இவ்வளவு விரைவில் அவர்கள் போர் செய்யும்
எண்ணத்தைக் கைவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அதியமான்: உங்கள் சொல்லாற்றலால் நீங்கள் அவர்களை அச்சுறுத்திவிட்டீர்கள்.
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நான் படைத்தளபதியோடு வேட்டையாடச் சென்ற இடத்தில் ஒரு
நெல்லிக்கனி கிடைத்தது. அதை நீங்கள் உண்ண வேண்டும் என்பது என் விருப்பம். (அதியமான்
நெல்லிக்கனியைக் கொடுக்கிறான். ஒளவையார் அதை உண்கிறார்.)
படைத்தளபதி: (ஒளவையாரை நோக்கி) அம்மா! அந்த நெல்லிக்கனியைப் பற்றி மன்னர்
உங்களிடம் எதுவும் கூறவில்லை. நாங்கள் வேட்டையாடச் சென்ற இடத்தில் ஒரே ஒரு நெல்லிமரம்
மட்டுமே இருந்தது. அந்த மரத்தில் உள்ள நெல்லிக்கனியை உண்பவர்கள் இறக்க மாட்டார்கள்
என்று அங்குள்ளவர்கள் கூறினார்கள். ஆனால், அந்த மரத்தில் ஒரே ஒரு நெல்லிக்கனி மட்டுமே
இருந்தது. அந்த அரிய நெல்லிக்கனியைத்தான் நீங்கள் இப்பொழுது உண்டீர்கள். வாழ்த்துகள்!
நீங்கள் என்றென்றும் வாழப்போகிறீர்கள்.
ஒளவையார்: (குழறும் வாயோடு) நீ உணாம அந்த கல்லி நெனியை எனக்கு ஏன் கொட்டுத்தா?
(தான் வாய் குழறி உளருவதை உணர்ந்த ஒளவையார், சற்று நேரம் பேசாமல் இருந்து, பிறகு பேசுகிறார்.)
குழந்தைகளின் மழலை யாழோடும் ஒத்து வராது; தாளத்தோடும் பொருந்தாது. ஆனால், அந்த மழலைச்
சொற்கள் தந்தையர்க்கு அன்பை வரவழைக்கின்றன. நான் வாய் குழறி உளறினாலும், அதைக் கண்டு,
ஒரு தந்தையைப்போல் நீ என்மீது அன்பு காட்டுகின்றாய். சிவபெருமான்போல் நீ என்றென்றும்
வாழ்க!
அதியமான்: அம்மா, நீங்கள் எனக்கு இன்னும் ஓர் உதவி செய்யவேண்டும். தொண்டைமான்
என்று ஒரு மன்னன் இருக்கிறான். அவன் என்னோடு போர்புரியத் திட்டமிட்டுக்கொண்டிருப்பதாக
ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்டேன். அவனை வெல்வது எளிது. ஆனால், நான் போரை விரும்பவில்லை.
நீங்கள் அவனிடம் சென்று, போரைத் தவிர்க்குமாறு அவனுக்கு அறிவுரை கூற முடியுமா?
ஒளவையார்: உன் விருப்பப்படிப் போரைத் தவிர்ப்பதற்கு என்னால் முடிந்ததைச்
செய்கிறேன்.
அங்கம் 4 – காட்சி – 1
இடம்: தொண்டைமான் நாட்டுக்குச் செல்லும் வழி
பங்குபெறுவோர்: ஒளவையார், ஒரு பாணன், விறலி (பாணனின் மனைவி)
பின்னணி: தொண்டைமானுடைய நாட்டுக்குச் செல்லும் வழியில்
ஒளவையார் ஒரு பாணனும் அவன் மனைவியும் வருவதைப் பார்க்கிறார். அவர்களை ஒளவையார் அதியமானிடம்
ஆற்றுப்படுத்துகிறார்.
தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: 103
ஒளவையார்: (பாணனைப் பார்த்து) உங்களைப் பார்த்தால் பாணரைப்போல் தோன்றுகிறது.
உங்களோடு இருப்பவர் உங்கள் மனைவி என்று நினைக்கிறேன். அவரைப் பார்த்தால் ஒரு விறலிபோல்
தோன்றுகிறது. நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?
பாணன்: எங்கே போவது என்று தெரியுமால், கால்போன இடமெல்லாம் போய்க்கொண்டிருக்கிறோம்.
பசியால் வருந்துகிறோம். எவராவது உணவு அளிப்பார்களா என்று தேடி அலைந்துகொண்டிருக்கிறோம்.
ஒளவையார்: இங்கிருந்து அருகில் அதியமான் என்று ஒரு மன்னன் இருக்கிறான்.
நீங்கள் அவனிடம் சென்றால் அவன் உங்களுக்கு உணவளிப்பான்.
பாணன்: அவரிடம் சென்றால் உணவு கிடைக்கும் என்றால் நாங்கள் அங்கே செல்கிறோம்.
ஒளவையார்: மென்மையான அடைபோன்ற கொழுத்த புலால் உணவை உங்கள் பசி தீருமளவுக்கு
அவன் தவறாமல் அளிப்பான்.
அங்கம் – 5, காட்சி – 1
இடம்: தொண்டைமானின் அரண்மனை
பங்குபெறுவோர்: ஒளவையார், தொண்டைமான்
பின்னணி: ஒளவையாரைத் தன்னுடைய படைக்கலக் கொட்டிலுக்குத் தொண்டைமான் அழைத்துக்கொண்டு
போகிறான். அங்குள்ள போர்க்கருவிகளைப் பெருமையுடன் ஒளவையாருக்குக் காட்டுகிறான்.
தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: 95
தொண்டைமான்: ஒளவையார் அவர்களே வாருங்கள்! அறிவிலும் புலமையிலும் சிறந்த புகழ்பெற்ற
கவிஞராகிய நீங்கள் இங்கு வந்ததை நினைத்து நான் பெருமை அடைகிறேன்.
ஒளவையார்: வணக்கம், மன்னா. நான் தகடூரிலிருந்து வருகிறேன். நீ அதியமானோடு
போர்புரியத் திட்டமிடுவதாக அதியமான் கேள்விப்பட்டான். அவன் உன்னோடு போர் செய்வதை விரும்பவில்லை.
தொண்டைமான்: என்னுடைய படைக்கலங்களைப் பற்றியும் எங்கள் வீரர்களின் ஆற்றலைப்
பற்றியும் கேள்விப்பட்டவுடன் அவன் என்னோடு போரிடுவதற்கு அஞ்சுகிறான் போலும். என்னோடு வாருங்கள். என் படைக்கலங்களைப் பாருங்கள்.
(தொண்டைமானும் ஒளவையாரும் படைக்கலங்கள் உள்ள கொட்டிலுக்குச் செல்கிறார்கள். இருவரும்
படைக்கலங்களைப் பார்வையிடுகிறார்கள்.)
ஒளவையார்: உன் படைக்கருவிகளான இவை, மயில் தோகை அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு,
வலிய திரண்ட
பிடிகளை உடையதாய், நெய் பூசப்பட்டு, அழகு செய்யப்பட்டுக் காவல் மிக்க பெரிய இடத்தில் உள்ளன.
ஆனால், அதியமானின் கூர்மையான வேல்கள், பல போர்களில் பகைவரைத் தாக்கியதால் பக்கமும் நுனியும் முறிந்து கொல்லர்களின்
சிறிய உலைக்களத்தில் எந்நாளும் உள்ளன.
தொண்டைமான்: அதியமான் என்னோடு போர்புரிவதற்கு ஏன் அஞ்சுகிறான் என்று இப்பொழுது
உங்களுக்குப் புரிகிறதா? அதியமானுக்குப் போரிட விருப்பம் இல்லையென்றால் எனக்குக் கப்பம்
கட்டச் சொல்லுங்கள்.
ஒளவையார்: உன் படைக்கருவிகளின் அழகும் அவற்றை நீ பாதுகாத்து வைத்திருப்பதும்
புரிகிறது. அதியமான் போருக்கு அஞ்சவில்லை. போரின் விளைவுகளை நினைத்து வருந்துகிறான்.
அதியமான் ஒருநாளும் எவருக்கும் கப்பம் கட்ட மாட்டான். போரிடுவதுதான் உன் விருப்பம்
என்றால் அதியமான் உன்னைப் போர்க்களத்தில் சந்திப்பான்.
தொண்டைமான்: (தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறான்) அதியமானின் வேல்களும் வாள்களும்
மற்ற படைக்கருவிகளும் பல போர்களில் பயன்படுத்தப்பட்டுப் பழுதடைந்தன போலும். இப்பொழுது
அதியமான் அவற்றைச் செம்மைப்படுத்துகிறான். அவன் பல போர்களில் வெற்றிபெற்றவன். என்னுடைய படைக்கருவிகள் போரில் பயன்படுத்தப்படாதவை
என்று மறைமுகாமக ஒளவையார் கூறியது முதலில்
எனக்குப் புரியவில்லை. அவருடைய புகழ்ச்சி வஞ்சப் புகழ்ச்சி. அதை நம்பி ஏமாந்து, இறுமாப்போடு
அதியமானோடு போருக்குச் சென்றால் நமக்குத் தோல்வி உறுதி. எனவே, இந்தப் போரைத் தவிர்ப்பதே
சாலச் சிறந்தது.
அங்கம் – 6, கட்சி - 1
இடம்: அதியமானின் அரண்மனை
பங்குபெறுவோர்: அதியமான், ஒளவையார்
பின்னணி: தொண்டைமானைச் சந்தித்த பிறகு ஒளவையார் அதியமானின்
அரண்மனைக்குத் திரும்பிவருகிறார்.
அதியமான்: வாருங்கள் ஒளவையார் அவர்களே! தொண்டைமான் போரிடும் எண்ணத்தைக்
கைவிட்டுவிட்டதாக ஒற்றர்கள் கூறுகிறார்கள். ”அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி அமையாத மூன்று.” என்ற கருத்துக்கு நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. போரிட வேண்டும்
என்று உறுதியாக இருந்த தொண்டைமான், உங்கள் சொற்களைக் கேட்டவுடன் அந்த எண்ணத்தை விட்டுவிட்டான்.
உங்கள் செயலால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் தவிர்க்கப்பட்டன. உங்களுக்கு என் பாராட்டுகள்;
வாழ்த்துகள்.
ஒளவையார்: நன்றி மன்னா. என்னால் இயன்றதை நான் செய்தேன். போர் தவிர்க்கப்பட்டது
என்பதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி. மன்னா, சேர, சோழ, பாண்டிய மன்னர் மூவரும் ஓரிடத்தில்
கூடுவதாகக் கேள்விப்பட்டேன். நீண்ட காலமாகவே, தமிழகத்து மன்னர்கள் போரிடுவதைப் பொழுதுபோக்காகக்கொண்டு
தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருங்கேடு விளைவித்து வருகிறார்கள். நான் மூன்று
அரசர்களையும் சந்தித்து, இனியாவது அவர்கள் போரிடாமல் இருக்க வேண்டும் என்ற என்னுடைய
வேண்டுகளை அவர்களிடம் எடுத்துரைக்க விரும்புகிறேன். ஆகவே, நான் சென்று அவர்களைச் சந்தித்துவருகிறேன்.
இன்னும் சில நாட்களில் திரும்பிவந்துவிடுவேன்.
அதியமான்: மகிழ்ச்சி ஒளவையார் அவர்களே! நீங்கள் என்னுடைய தேரில் செல்லுங்கள்.
மூவேந்தர்களையும் சந்தித்து, அவர்கள் போரிடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுங்கள்;
போரில்லாத தமிழகத்துக்கு வழிகாட்டுங்கள். விரைவில் திரும்பி வாருங்கள்.
அங்கம் – 7, காட்சி – 1
இடம்: மூவேந்தர்களும் கூடியிருக்கும் இடம்
பங்குபெறுவோர்: சேரமான் மாவண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேர்
தந்த உக்கிரப் பெருவழுதி
பின்னணி: ஒளவையார் மூவேந்தர்களையும் சந்திக்கிறார்.
தொடர்புடைய புறநானூற்றூப் பாடல்: 367
சேரமான் மாவண்கோ: வாருங்கள்
ஒளவையார் அவர்களே!
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி: உங்கள்
கவிதையைக் கேட்க நாங்கள் ஆவலாக உள்ளோம்.
பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்
பெருவழுதி: வாருங்கள் ஒளவையார் அவர்களே! உங்கள் கவிதையைக் கேட்டு, உங்களுக்குப் பரிசளிக்க
நாங்கள் ஆவலாக உள்ளோம்.
ஒளவையார்: நான் கவிதை பாடவோ, பரிசுபெறவோ இங்கு
வரவில்லை. உங்களுக்கு ஓர் அறிவுரை
கூறத்தான் வந்திருக்கிறேன்.
மூவேந்தர்கள்: அது என்ன அறிவுரை? கூறுங்கள்.
ஒளவையார்: இல்லையென்று வந்து இரப்போர்க்குப் பொன்னும்
பொருளும் அளியுங்கள். போரிடாமல் ஒற்றுமையாக இருங்கள். குடிமக்களைக்
காப்பாற்றுங்கள். நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத்
துணையாக வருவது வேறொன்றுமில்லை. இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட
நாட்கள் முழுதும், நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர்
பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும்,
நாரால்
வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை அருந்தி,
மகிழ்ச்சியோடு
வாழுங்கள். வானத்தில் விளங்கும் விண்மீன்களைப்போல் உங்கள் வாழ்நாட்கள் மேம்பட்டு விளங்கட்டும்! (ஒளவையார்
அங்கிருந்து புறப்படுகிறார்.)
அங்கம் – 8, காட்சி – 1
இடம்: அதியமானின் அரண்மனை
பங்குபெறுவோர்: ஒளவையார், அமைச்சர், படைத்தளபதி, மற்றும் பலர்
பின்னணி: சேரமான் பெருஞ்சேரலிரும்பொறை
என்ற சேரமன்னன் தகடூரை முற்றுகையிட்டு, அதியமானோடு போர்புரிந்தான். அப்போரில் அதியமான்
கொல்லப்பட்டான். ஒளவையார் தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்.
தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: 235
ஒளவையார்: சிறிதளவு கள் இருந்தால் அதியமான் அதை எங்களுக்குக் கொடுப்பான்.
பெருமளவு கள் இருந்தால் எங்களுக்கு அளித்து, நாங்கள் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பலரோடும் பகிர்ந்து
உண்பான். பெருமளவு சோறு இருந்தால்,
அதையும் மிகப்
பலரோடு கலந்து உண்பான். எலும்போடு கூடிய தசை கிடைத்தால் அதை எமக்கு அளிப்பான்.
ஆனால், அம்புடன் வேல் தைக்கும் போர்க்களமானால் தானே சென்று நிற்பான். இவையெல்லாம் முடிந்துவிட்டன.
அவன் மார்பைத் துளைத்த வேல் பாணர்களின்
பாத்திரங்களை ஊடுருவிச் சென்று, இரப்போர்
கைகளையும் துளைத்துப் புலவர்களின்
நாவிலும் சென்று வீழ்ந்தது. எமக்குப்
பற்றுக்கோடாக இருந்தவன் இப்பொழுது எங்குள்ளானோ? இனிப் பாடுவோரும் இல்லை;
பாடுவோருக்கு
ஒன்று ஈவோரும் இல்லை. ஐயகோ! என் நண்பன், என் மன்னன் மறைந்தானே! இனி நான் என்
செய்வேன்? (ஒளவையார் மயங்கி விழுகிறார்)
Comments
Post a Comment