கோப்பெருஞ்சோழன்
கோப்பெருஞ்சோழன்
(புறநனூற்றுப்
பாடல்களைத் தழுவி எழுதப்பட்ட நாடகம்)
முனைவர்
இர. பிரபாகரன்
அங்கம்
– 1
காட்சி
– 1
இடம்: பாண்டிய நாட்டில்
ஒரு குளக்கரை
பங்கு பெறுபவர்:
புலவர் பிசிராந்தையார், ஒரு வழிப்போக்கன்
பின்னணி:
அந்தக் குளத்தில் ஓர் ஆண் அன்னப்பறவையும் அதன் இணையாகிய பெண் அன்னப்பறவையும் அமைதியாக
சென்றுகொண்டிருக்கின்றன. அந்த ஆண் அன்னப்பறவையைப் பார்த்துப் புலவர் பிசிராந்தையார்
ஏதோ பாடிக்கொண்டிருக்கிறார்.
தொடர்புள்ள
புறநானூற்றுப் பாடல் எண்: 67
வழிப்போக்கன்: ஐயா! நீங்கள் ஒரு அன்னப்பறவைப் பார்த்து மிக
அருமையாகப் பாடினீர்கள். ”அந்த அன்னப்பறவை சோழநாட்டின் தலைநகராகிய உறையூருக்குப் போய்,
சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம், தான் பிசிராந்தையாரின் அடியேன் என்று சொன்னால், அவன்
அந்தப் பறவையின் பெட்டைக்கு சிறந்த அணிகலன்களைத் தருவான்.” என்று பாடினீர்கள். கேட்பதற்கு
மிகவும் இனிமையாக இருக்கிறதே! நீங்கள் யார்?
பிசிராந்தையார்: என் பெயர் ஆந்தையார். நான் பிசிர் என்னும்
இந்த ஊரைச் சார்ந்தவனாகையால் என்னை எல்லோரும் பிசிராந்தையார் என்று அழைக்கிறார்கள்.
வழிப்போக்கன்: பாண்டிய நாட்டில் உள்ள இந்த ஊரில் இருந்துகொண்டு
நீங்கள் சோழமன்னனைப் புகழ்ந்து பாடுகிறீர்களே! உங்கள் செயல் வியப்பாக உள்ளதே!
பிசிராந்தையார்: இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? கோப்பெருஞ்சோழன்தான்
என் மன்னன்.
வழிப்போக்கன்: ஐயா, நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்குப் புரியவில்லை.
நான் சென்று வருகிறேன்.
(வழிப்போக்கன் மிகுந்த
குழப்பத்தோடு, “இந்தப்
புலவருக்குப் பித்தம் தலைக்கேறிவிட்டது
போல இருக்கிறது. இவரிடம் அதிகம் பேசினால் நமக்கும் பைத்தியம் பிடித்துவிடும்” என்று
தனக்குத்தானே கூறிக்கொண்டு தலையை அசைத்துக்கொண்டு அங்கிருந்து விரைந்து செல்கிறான்.)
அங்கம்
– 1
காட்சி
– 2
இடம்: ஊர் நடுவே
உள்ள ஒரு மரத்தடி.
பங்கு பெறுபவர்கள்:
ஊர்ப் பொதுமக்களில் சிலர், பிசிராந்தையார்
பின்னணி:
“வாழ்க்கைக்குத் மிகவும் தேவையானது அன்பா? அறமா” என்ற தலைப்பில், பிசிராந்தையார் தலைமையில்
ஒரு பட்டிமன்றம் நடைபெறுகிறது. அன்பே மிகவும் தேவையானது என்று சிலரும், அறமே மிகவும்
தேவையானது என்று வேறு சிலரும் பேசி முடித்துவிட்டார்கள். பிசிராந்தையார் தன்னுடைய முடிவுரையை
ஆற்றிக்கொண்டிருக்கிறார்.)
தொடர்புள்ள
புறநானூற்றுப் பாடல் எண்கள்: 191, 212
பிசிராந்தையார்: சான்றோர் பெருமக்களே! வாழ்க்கைக்கு மிகவும்
தேவையானது அறம் என்று சிலரும், அன்பு என்று வேறு சிலரும் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்.
மனத்தில் மாசுகள் இல்லாமல் இருப்பதே அறம் என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். மனத்தில்
பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொற்கள் கூறுதல் போன்ற மாசுகள் இல்லாவிட்டால் மனிதன் அடக்கத்தோடும்
ஒழுக்கத்தோடும் வாழ்வான்; எவருக்கும் எந்தத் தீமையும் செய்ய மாட்டான். அதுமட்டுமல்ல;
உயிரோடு உள்ள மனிதர்கள் இயற்கையாகவே அன்பு உடையவர்கள்தான். மனத்தில் உள்ள மாசுக்களால்
மக்கள் தம் அன்பை வெளிப்படுத்த முடியாமல் இருக்கிறார்கள். மனத்தில் மாசுகள் இல்லாவிட்டல்
அன்பு வெளிப்படும். அன்பு வெளிப்பட்டால், இன்சொல்
பேசுவார்கள்; பிறருக்கு உதவுவார்கள்; பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புவார்கள். வாழ்க்கைக்கு அறமும் தேவை, அன்பும் தேவை. ”அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் உடைத்து” என்ற வள்ளுவப் பேராசானின் குறளைக்
கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். (அவையோர் கரவொலி எழுப்பி ஆரவாரிக்கிறார்கள்.)
அவையிலிருந்த
ஒருவர்: உங்கள் வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக உள்ளதா?
பிசிராந்தையார்:
என் மனைவியும் நானும் அன்போடும் அறத்தோடும் எங்கள் இல்வாழ்க்கையை நடத்துகிறோம். அதனால்
எங்கள் இல்வாழ்க்கை பண்பும் பயனும் உள்ளதாக இருக்கிறது.
அவையிலிருந்த
மற்றொருவர்: ஐயா, புலவர்
பிசிராந்தையரே! உங்களுக்கு வயதாகியும் இளமை குன்றாமல், நரையில்லாமல் இருக்கிறீர்களே!
அது எப்படி?
பிசிராந்தையார்:
சிறப்பான என் மனைவியோடு,
என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப்
பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என்
வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நல்லாட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில்,
நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் உடைய சன்றோர்கள்
பலர் உள்ளனர். அதனால், நான் வீட்டிலும்,
சமூகத்திலும், நாட்டிலும் கவலையின்றி வாழ்கிறேன். கவலை இல்லாத வாழ்க்கை வாழ்வதால்,
என் தலையில் நரை இல்லாமல் இருக்கிறேன்.
வழிப்போக்கன்:
அன்றொருநாள் நான் உங்களைக் குளத்தங்கரையில் சந்தித்தபொழுது, உங்கள் மன்னன் சோழன் கோப்பெருஞ்சோழன்
என்று சொன்னீர்கள். இன்று உங்கள் மன்னன் நல்லாட்சி செய்கிறான் என்கிறீர்களே? உண்மையில்
யார் உங்கள் மன்னன்?
பிசிராந்தையார்:
கோப்பெருஞ்சோழன் என்னுடைய நெருங்கிய நண்பன். நான் அவனை நினைத்துப் பாடிக்கொண்டிருந்தபொழுது,
நீங்கள் “உங்கள் மன்னன் யார்?” என்று கேட்டீர்கள். கோப்பெருஞ்சோழனைப் பற்றிய சிந்தனையில்
இருந்ததால் அவன்தான் என் மன்னன் என்று சொன்னேன். நான் எப்பொழுதுமே அவனை என் மன்னனாகவே
கருதுகிறேன்.
(”இவர் மிகவும் குழப்பமானவர். இவர் புலவரா
அல்லது பித்தரா? யாருக்குத் தெரியும்?” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு வழிப்போக்கன்
அங்கிருந்து செல்கிறான்.)
அங்கம்
– 2
காட்சி – 1
இடம்: சோழமன்னன் கோப்பெருஞ்சோழனின் உறையூரில் உள்ள அரண்மனை வளாகத்தில்
கோப்பெருஞ்சோழனின் இளைய மகன் இளங்கிள்ளியின் மாளிகை
பங்கு பெறுபவர்கள்: கோப்பெருஞ்சோழனின்
இளைய மகன் இளங்கிள்ளி, இளங்கிள்ளியின் மனைவி பூங்குழலி
இளங்கிள்ளி: பூங்குழலி! எப்பொழுதும் மகிழ்ச்சியாக
இருக்கும் உன் முகத்தில் இன்று மகிழ்ச்சி இல்லையே. சோகமா அல்லது என் மீது கோபமா?
பூங்குழலி: நான் எப்படி இங்கு மகிழ்ச்சியாக இருக்க
முடியும்? என்னை எவரும் மதிப்பதில்லை. எல்லாப் பணிவிடைகளும் உங்கள் அண்ணியாருக்குத்தான்
நடைபெறுகின்றன. நேற்று அரபு நாடுகளிலிருந்து வந்த எட்டுக் குதிரைகளும் ஒரு புதுத்தேரும்
உங்கள் அண்ணியாரின் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தன. எனக்கு இரட்டைக் குதிரை பூட்டிய
பழைய தேர். சில நாட்களுக்குமுன் நானும் உங்கள் அண்ணியும் ஒரு கோயிலுக்குக்குப் போனோம்.
அங்கு உங்கள் அண்ணிக்குத்தான் முதல் மரியாதை. மன்னருக்கு வயதாகிக்கொண்டே போகிறது. அவருக்குப்பின்
உங்கள் அண்ணன்தான் இந்தச் சோழநாட்டை ஆளப்போகிறார். நீங்கள் அவர் சொல்லைக்கேட்டு அவர்
கூறும் பணிகளைச் செய்யப்போகிறீர்கள். நாம் இருவரும் எப்பொழுதும் இப்படியே இங்கு இரண்டாந்தர
வாழ்க்கை வாழவேண்டியதுதான்.
என் தாயார் என்னைப் பாண்டிய நாட்டில் உள்ள மிழலை நாட்டு மன்னருக்குத்
திருமணம் செய்விக்க விரும்பினார். என் தந்தையார்தான் என்னை உங்களுக்குத் திருமணம் செய்துகொடுப்பதில்
உறுதியாக இருந்து நம் திருமணத்தைச் செய்துவைத்தார். மிழலை நாட்டு அரசியாக இருப்பதை
விட்டுவிட்டு, நான் இங்கு இப்படி அவமானப்படுத்தப்படுகிறேன். நான் எப்படி மகிழ்ச்சியாக
இருக்க முடியும்?
இளங்கிள்ளி: நீ எல்லாவற்றையும் தவறாகப் புரிந்துகொண்டு
இப்படிப் பேசுகிறாய். நமக்கென்று தனி மாளிகை, பணியாட்கள் மேலும் எல்லா வசதிகளும் இங்கே
உள்ளன. உன் மனத்தில் எதையோ கற்பனை செய்துகொண்டு நீயே உன்னை துன்புறுத்திக்கொள்கிறாய்.
நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். அதைச் சொல்.
பூங்குழலி: உங்கள் தந்தையாரிடம் போய், அவருக்குபின்
இந்தச் சோழநாட்டை ஆள்வதற்கான அரசுரிமையை உங்களுக்கு வழங்குமாறு கேளுங்கள்.
இளங்கிள்ளி: நீ என்ன சொல்கிறாய் என்று தெரிந்துதான்
பேசுகிறாயா? தந்தைக்குப் பின் மூத்த மகனுக்குத்தான் அரசுரிமை. அதுதான் சோழர்களின் மரபு.
குடும்பத்தில் குழப்பம் உண்டாக்குவதுதான் உன் நோக்கமா?
பூங்குழலி: நான் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை.
உங்கள் மூதாதையார் கரிகால் சோழன் இறந்த பிறகு, சோழ நாட்டை இரண்டாகப் பிரித்து, அவர்
மகன் மணக்கிள்ளி உறையூரைத் தலைநகராகவும், மற்றொரு மகன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகராகவும்
கொண்டு இருவரும் அரசர்களாகவில்லையா?
இளங்கிள்ளி: உண்மைதான். அவ்வாறு நாட்டைப் பிரித்து
ஆண்டதின் விளைவு, மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளியும் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியின்
மகன் நலங்கிள்ளியும் போரிட்டுக்கொண்டார்கள். அவ்வாறு நாட்டைப் பிரிப்பது தவறு. இந்த
நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு தந்தை ஒருபொழுதும் சம்மதிக்க மாட்டார். தந்தைக்குப்பின்
இந்த நாட்டின் அரசுரிமை என் அண்ணனுக்குத்தான். நான் அதில் தலையிட மாட்டேன்.
பூங்குழலி: நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்.
பிறகு உங்கள் விருப்பம். நான் என் பெற்றோர் வீட்டுக்குப் போகப்போகிறேன்.
(மறுநாள் பூங்குழலி தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றாள்)
அங்கம்
– 2
காட்சி
– 2
இடம்: கோப்பெருஞ்சோழனின்
உறையூரில் உள்ள அரண்மனை வளாகம்
பங்கு பெறுபவர்:
கோப்பெருஞ்சோழனின் மக்கள் முதுகிள்ளியும் இளங்கிள்ளியும்
பின்னணி:
பூங்குழலி தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டாள் என்பதைக் கேள்விப்பட்ட முதுகிள்ளி
அதுபற்றித் தன் இளவலிடம் கேட்கிறான்.
முதுகிள்ளி: நேற்று உன் மனைவி உன்னை விட்டுவிட்டுத் தன்
ஊருக்குச் சென்றுவிட்டாள் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா?
இளங்கிள்ளி: ஆம். நம் தந்தைக்குப் பிறகு சோழநாட்டை ஆளும்
உரிமையை எனக்கு அளிக்க வேண்டும் என்று தந்தையைக் கேட்கச் சொன்னாள். அண்ணன் நீங்கள்
இருக்கும்பொழுது நான் எப்படி தந்தைக்குப்பின் அரசனாக முடியும்? அவள் சொன்னதை நான் ஏற்கவில்லை.
அரசனாக முடியாவிட்டால், நாட்டைப் இரண்டாகப் பிரித்து ஒரு பகுதிக்கு நான் அரசனாக வேண்டும்
என்றாள். நான் அதையும் ஏற்கவில்லை. அதனால் அவள் கோபித்துக்கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்குச்
சென்றுவிட்டாள்.
முதுகிள்ளி: அப்படியா? சரி. தொல்லை விட்டது. அவள் அங்கேயே
இருக்கட்டும்; நான் உன் அண்ணி தேன்மொழியிடம் சொல்லி உனக்கு வேறு ஒரு திருமணத்திற்கு
ஏற்பாடு செய்யச் சொல்கிறேன்.
இளங்கிள்ளி: வேண்டாம். நான் பூங்குழலியை மிகவும் காதலிக்கிறேன்.
அவளும் என்னை மிகவும் காதலிக்கிறாள். அவளைத் தவிர வேறு ஒருத்தியை நான் ஒருநாளும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். அவள் முன்கோபக்காரி.
இதுபோல் ஏதாவது ஒருகாரணத்திற்காகக் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு அவள் செல்வது
இது முதன்முறை அன்று. இன்னும் சில நாட்களில் நான் அவள் வீட்டுக்குச் சென்று அவளைச்
சமதானம் செய்தால் திரும்பி வந்துவிடுவாள்.
முதுகிள்ளி: சரி. அது உன் விருப்பம். நான் உன்னிடத்தில்
ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். நம் தந்தைக்கு வயதாகிவிட்டது. அவர் சரியான முடிவெடுக்கும்
மனநிலையில் இல்லை. அவரைப் புகழ்ந்து பாடும் புலவர்களின் பேச்சைக் கேட்டுப் பல தவறுகளைச்
செய்கிறார். எப்பொழுது பார்த்தாலும் முன்பின் தெரியாத பிசிராந்தையாரைப் பற்றியே பேசிகொண்டிருக்கிறார்.
தந்தையின் நிலையை அறிந்த சேரனும் பாண்டியனும் நம்மோடு போரிட்டு நம் நாட்டைக் கைப்பற்றப்
படைதிரட்டிக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
இளங்கிள்ளி: இந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்வது?
முதுகிள்ளி: நம் நாட்டுக்கு நான்தான் படைத்தலைவன் அல்லவா?
அதனால், நானும் படை திரட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்கு உன் உதவி தேவை. நீ நம்முடைய
குதிரைப்படைக்குத் தலைவனாகப் பொறுப்பேற்றுக்கொள். சேரனும் பாண்டியனும் சேர்ந்து போருக்கு
வந்தால், நான் நம்முடைய மூதாதை கரிகால் சோழனைப்போல் சேரனையும் பாண்டியனையும் புறமுதுகிட்டு
ஓடச்செய்வோம்.
இளங்கிள்ளி: இதெல்லாம் தந்தைக்குத் தெரியுமா?
முதுகிள்ளி: நான் பல முறை மன்னரிடம் நாட்டின் நிலையைப்
பற்றியும், சேரனும் பாண்டியனும் போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதையும் கூறினேன்.
நான் சொல்வதை அவர் பொருட்படுத்துவதே கிடையாது.
நான் தந்தையை எதிர்த்துப் போரிடத் திட்டமிட்டுள்ளேன்.
இளங்கிள்ளி: தந்தையை எதிர்த்துப் போரா? தந்தையின் நிலையும்
நாட்டின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளனவே?
முதுகிள்ளி: நாட்டைக் காப்பாற்றுவதே நம் தலையாய கடமை.
இளங்கிள்ளி: நம் தந்தை நம்மை எதிர்த்துப் போரிட்டால்?
முதுகிள்ளி: தந்தையை எதிர்த்துப் போரிட்டு நாட்டைக் காப்பாற்ற
வேண்டியது நம் கடமை. நீ என்னோடு ஒத்துழைப்பாயா? என்னோடு நீ ஒத்துழைத்து, நாம் வெற்றிபெற்றால்,
இந்த நாட்டின் ஒரு பகுதியை நீ ஆட்சி செய். மற்றொரு பகுதியை நான் ஆட்சி செய்கிறேன்.
இளங்கிள்ளி: நாட்டின் நலமே என் நோக்கம். நான் எப்பொழுதும்
உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.
முதுகிள்ளி: தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! நாம் ஒன்றுபட்டால்
வெற்றி நமதே! நம்முடைய செயல் நாம் நம் தந்தைக்குச் செய்யும் துரோகம் அன்று. நாட்டைக் காப்பாற்றும்
நற்பணி.
அங்கம்
– 2
காட்சி
– 3
இடம்: சோழ நாட்டு
அரசவை
பங்கு பெறுபவர்கள்:
சோழநாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழன், ஒற்றர்களின் தலைவன் ஏனாதி வளவன்
பின்னணி:
முதுகிள்ளி படைதிரட்டுவதைப் பற்றிக் கோப்பெருஞ்சோழன்
அறிந்துகொண்டான். சேரனோ அல்லது பாண்டியனோ சோழநாட்டின்மீது போர் செய்யப்போகிறார்கள்
என்பதை மன்னன் நம்பவில்லை. தன்னிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு முதுகிள்ளி பலமுறை மன்னனைக்
கேட்டான். ஆனால், தான் உயிரோடு இருக்கும்வரை தானே சோழநாட்டை ஆட்சி செய்யப்போவதாகக்
கூறி முதுகிள்ளியின் வேண்டுகோளை மன்னன் மறுத்துவிட்டான். ஆகவே, முதுகிள்ளி படைதிரட்டுவது
தன்னிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகத்தான் என்று கோப்பெருஞ்சோழன் நினைக்கிறான்.
முதுகிள்ளி, இளங்கிள்ளி, சோழநாட்டு அமைச்சர்கள், சேர மன்னன், பாண்டிய மன்னன் ஆகியோரின்
நடவடிக்கைகளை கண்காணித்துத் தகவல் சேகரிப்பதற்காக ஒற்றர்களின் தலைவனாகிய ஏனாதி வளவனின்
உதவியை மன்னன் நாடுகிறான்.
ஏனாதி வளவன்: வணக்கம், மன்னா!
கோப்பெருஞ்சோழன்: வாருங்கள், ஏனாதி வளவன் அவர்களே! இப்போழுது
என் மகன் முதுகிள்ளி ஒரு படை திரட்டிக்கொண்டிருக்கிறான். அதைப் பற்றி எனக்குச் சில
தகவல்கள் தேவை.
அவன் ஏன் படை திரட்டுகிறான்?
அவனுடைய நோக்கம் என்ன? அவனோடு அவனுக்குத் துணையாக இருப்பவர்கள் யார்? என்னுடைய இளைய
மகன் மூத்தவனோடு சேர்ந்திருக்கிறானா? பாண்டியனும் சேரனும் நம்மை எதிர்த்துப் போர் புரியும்
நோக்கத்தில் இருக்கிறார்களா? இந்த வினாக்களுக்கு விடை வேண்டும்; விரைவில் வேண்டும்.
ஏனாதி வளவன்: மன்னா! தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன்.
இப்போழுதே ஒற்றர்களை அனுப்புகிறேன்.
கோப்பெருஞ்சோழன்: ஒற்றர்கள் வழியாகச் செய்திகளைக் கேட்டு முடிவெடுக்கும்பொழுது,
வள்ளுவர்,
ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்.
என்று கூறுகிறார். அதாவது, ஓர் ஒற்றனை
மற்றோர் ஒற்றன் அறியாதபடி மூன்று ஒற்றர்களைகொண்டு ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ள
வேண்டும். முவர் சொல்வதும் ஒத்திருக்குமானால் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்
என்பது வள்ளுவரின் கருத்து. இந்தக் கருத்து உங்களுக்குத் தெரியும் என்று
நினைக்கிறேன். நான் எடுக்க இருக்கும்
முடிவு மிகவும் முக்கியமான ஒன்று. ஆகவே, மூன்று ஒற்றர்களை அனுப்பித் தகவலைச்
சேகரிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
ஏனாதி வளவன்: அப்படியே செய்கிறேன், மன்னா!
(ஏனாதி வளவன் மன்னனிடமிருந்து
விடைபெற்றுக்கொண்டு செல்கிறான்.)
அங்கம்
– 2
காட்சி
– 4
இடம்: சோழ மன்னனின்
அரண்மனை
பங்கு பெறுபவர்கள்:
கோப்பெருஞ்சோழன், ஒற்றர்களின் தலைவன் ஏனாதி வளவன்
பின்னணி:
சில நாட்கள் கழிந்தன. மூன்று ஒற்றர்கள் சேகரித்த செய்திகளை ஏனாதி வளவன் மன்னிடம் கூறுகிறான்.
ஏனாதி வளவன்: வணக்கம், மன்னா!
கோப்பெருஞ்சோழன்: வாருங்கள், ஏனாதி வளவன் அவர்களே! ஒற்றர்கள்
திரும்பி வந்தார்களா? என்ன செய்தி?
ஏனாதி வளவன்: சொல்வதற்கே தயக்கமாக இருக்கிறது. இருந்தாலும்
சொல்கிறேன். மூன்று ஒற்றர்களும் சேகரித்த செய்திகளில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
சேரனோ அல்லது பாண்டியனோ நம்மோடு போர் புரியும் நிலையில் இல்லை. பாண்டிய நாட்டில் உள்ள
சில சிற்றரசர்களும் பாண்டிய மன்னனும் ஒன்று சேர்ந்து, சேரனோடு போர்புரியத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் அவர்களிடையே போர் தொடங்கலாம் என்று ஒற்ற்ர்கள் கூறுகிறார்கள். உங்கள் மகன்கள்
இருவரும் ஒன்று சேர்ந்து உங்களோடு போர்புரிந்து, சோழ நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி,
நாட்டை இரன்டாகப் பிரித்து ஆள்வதற்குத் திட்டமிட்டுப், படை திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் மகன் முதுகிள்ளி படைத்தலைவனாகையால், உங்கள் படைவீர்ர்கள் பலரும் அவனுக்குத்
துணையாக இருப்பதாகத் தோன்றுகிறது.
கோப்பெருஞ்சோழன்: அமைச்சர்களின் நிலை என்ன?
ஏனாதி வளவன்: அமைச்சர்கள் அனைவரும் உங்களை ஆதரிக்கிறார்கள்.
அவர்கள் உங்கள் மக்களிடம் பேசி இந்தப் போரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள்.
ஆனால், அவர்கள் முயற்சி பயனளிக்கவில்லை. இன்னும் ஏறத்தாழ ஒரு மாதத்தில் உங்கள் மக்கள்
உங்களை எதிர்த்துப் போரிடுவார்கள் என்று ஒற்றர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது போன்ற
துயரமான செய்தியைக் கூறுவதற்கு என்னை மன்னித்துவிடுங்கள், மன்னா!
கோப்பெருஞ்சோழன்: மூன்று ஒற்றர்களை அனுப்பி, முறையாகச் செய்திகளைச்
சேகரித்ததற்கு நன்றி. நான் எத்தனையோ போர்களைச் சந்தித்திருக்கிறேன். என் மகன்களோடு
போர் புரிந்து, அவர்களை அடக்குவது எனக்கு மிகவும் எளிது. நீங்கள் போய் அமைச்சர் செம்பியனை
வரச்சொல்லுங்கள்.
ஏனாதி வளவன்: இப்பொழுதே போய் அமைச்சரை வரச்சொல்கிறேன்.
வணக்கம் மன்னா!
அங்கம்
– 2
காட்சி
– 5
இடம்: சோழமன்னனின்
அரண்மனை
பங்கு பெறுபவர்கள்:
போப்பெருஞ்சோழன், அமைச்சர் செம்பியன்
பின்னணி:
நடைபெறப்போகும் போரைப்பற்றி மன்னன் அமைச்சர் செம்பியனோடு கலந்து ஆலோசிக்கிறான்.
கோப்பெருஞ்சோழன்: அமைச்சரே! என் மக்கள் இருவரும் என்னை எதிர்த்துப்
போரிடுவதற்குப் படை திரட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று
நினைக்கிறேன்.
அமைச்சர் செம்பியன்: ஆம் மன்னா, நான் அதைக் கேள்விப்பட்டேன். உங்கள்
மக்களிடம் பேசி, போரிட வேண்டாம் என்று கூறினேன்,
அவர்கள் உங்களோடு போரிட்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
கோப்பெருஞ்சோழன்: நமது படைகளின் நிலை என்ன?
அமைச்சர் செம்பியன்: படைவீரர்களில் பலரும் உங்கள் மகன்கள் பக்கம்தான்
இருக்கிறார்கள்.
கோப்பெருஞ்சோழன்: அப்படியா? சோழநாட்டில் உள்ள குறுநில மன்னர்களைச்
சந்தித்து, அவர்கள் நமக்கு ஆதரவாக இருப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அவர்களின் படைவீரர்கள்
அனைவரையும் உறையூருக்கு வரச்சொல்லுங்கள். குறுநில மன்னன் நெடியோன் தலைமையில் போருக்குத்
தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நமக்கு ஆதரவாக இருக்கும் குறுநில மன்னர்கள் அனைவரும்
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குக் கப்பம் கட்ட வேண்டாம் என்று நான் கூறியாதாகக் கூறுங்கள்.
அமைச்சர் செம்பியன்: இப்பொழுதே போகிறேன், மன்னா!
அங்கம்
– 2
காட்சி
– 6
இடம்: சோழமன்னனின்
அரண்மனை
பங்கு பெறுபவர்கள்:
அமைச்சர் செம்பியன்
பின்னணி:
அமைச்சர் செம்பியன் பல குறுநில மன்னர்களைச் சந்தித்து அவர்கள் அனைவரையும் மன்னனுக்குத்
துணையாகப் போர்புரிவதற்குச் சம்மதிக்க வைத்துவிட்டார். அதுபற்றிய செய்திகளை மன்னரோடு
பகிர்ந்துகொள்கிறார்.
அமைச்சர் செம்பியன்: மன்னா! வணக்கம்
கோப்பெருஞ்சோழன்: வாருங்கள் அமைச்சரே! போன காரியம் என்ன ஆயிற்று?
குறுநில மன்னர்கள் என்ன சொன்னார்கள்? எல்லாம் விவரமாகச் சொல்லுங்கள்.
அமைச்சர் செம்பியன்: மன்னா! நீங்கள் கூறியபடி, சோழ நாட்டுக் குறுநில
மன்னர்கள் அனைவரையும் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் தங்களுக்குத் துணையாகப் போர்புரிவதற்குத்
தயாராக உள்ளார்கள். அயல்நாட்டுக் குறுநில மன்னர்கள் சிலரும் நம்மோடு ஒத்துழைப்பதாகக்
கூறியுள்ளார்கள். அவர்கள் படை அனைத்தும் இன்னும் சில நாட்களுக்குள் உறையூருக்கு வந்து
சேரும். அது மட்டுமல்லாமல், நமது படைவீரர்கள் பலரும் நமக்குச் சாதகமாகப் போர்புரிவதாகக்
கூறியுள்ளார்கள்.
கோப்பெருஞ்சோழன்: அப்படியானால், அடுத்த மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை
அன்று போர் தொடங்கப் படும் என்று என் மக்களுக்கு உரிய காலத்தில் செய்தி அனுப்புங்கள்.
போர் ஆரம்பிப்பதற்குச் சில நாட்களுக்குமுன், ” உறையூரில் போர் நடைபெறப் போகிறது. ஆகவே,
பசுக்களையும், பெண்டிரையும், குழந்தைகளையும், பிணியுடையோரையும் பதுகாவலான இடத்திற்கு
அழைத்து செல்லுங்கள்.” என்று பறை அடித்து அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். வேறு
ஏதாவது செய்தி இருந்தால் எனக்கு உடனே தெரிவியுங்கள். உங்கள் உதவிக்கு நன்றி.
(மன்னனிடமிருந்து
அமைச்சர் விடைபெற்றுக்கொண்டு செல்கிறார்)
அங்கம்
– 2
காட்சி
– 7
இடம்: சோழ மன்னனின்
அரண்மனை
பங்கு பெறுபவர்:
கோப்பெருஞ்சோழன், புலாற்றூர் எயிற்றியனார்
பின்னணி:
இரு தரத்தாரும் போருக்குத் தயராக இருக்கிறார்கள். கோப்பெருஞ்சோழன் போருக்கான உடையணிந்து
போர்க்களத்திற்குச் செல்லத் தயராக இருக்கிறான். போரைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு
புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் வந்திருக்கிறார்.
தொடர்புள்ள
புறநானூற்றுப் பாடல் எண்:: 213
புல்லாற்றூர்
எயிற்றியனார்: மன்னா, வணங்குகிறேன்.
கோப்பெருஞ்சோழன்:
புலவரே, என்ன செய்தி? நான்
போர்க்களத்திற்குச் செல்வதற்காகப் புறப்பட்டுகொண்டிருக்கிறேன். ஏதாவது சொல்ல வேண்டியதாக
இருந்தால் விரைவாகச் சொல்லுங்கள்.
புல்லாற்றூர்
எயிற்றியனார்: மன்னா! உன்னை எதிர்த்துப்
போரிட வந்த இருவரையும் எண்ணிப்பார்த்தால்,
அவர்கள் நெடுங்காலமாக உன்னுடன் பகைகொண்ட
சேரனோ பாண்டியனோ அல்லர். போரில் வெற்றிபெறும் நோக்கத்தோடு உன்னை எதிர்த்து
வந்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால், நீ அவர்களுக்குப் பகைவன் அல்லன் என்பது அவர்களுக்குத்
தெரியும். நீ தேவருலகம் சென்ற பிறகு,
உன் நாட்டை ஆளும் அரசுரிமை அவர்களுக்கு
உரியதுதானே? அவ்வாறு ஆதல் நீ அறிவாய்.
நான் சொல்வதை நன்றாகக் கேள்.
உன்னோடு போர்செய்யப் புறப்பட்டு வந்திருக்கும் ஆராயும் திறனும் அறிவும்
இல்லாத உன் மக்கள் தோற்றால், உனக்குப் பிறகு, உன் பெருஞ்செல்வத்தை யாருக்குக் கொடுக்கப் போகிறாய்? நீ அவரிடம்
தோற்றால் உன் பகைவர்கள் அதைக்கண்டு மகிழ்வார்கள்.
மற்றும், பழிதான்
மிஞ்சும். அதனால்,
போரைத் தடுத்து நிறுத்து. விண்ணவர் உலகம் உன்னை விரும்பி வரவேற்று,
விருந்தினனாக ஏற்றுக்கொள்வதை நீ
விரும்பினால், நல்ல செயல்களைத்
தயங்காமல் செய்ய வேண்டும்.
(புல்லாற்றூர்
எயிற்றியனார் சொன்னதைக் கேட்ட பிறகு, கோப்பெருஞ்சோழன், ஆழ்ந்த சிந்தனையோடு,
அங்கும் இங்கும் நடந்துகொண்டிருக்கிறான். சிறிது நேரம் கழித்து, தான் அணிந்திருந்த
கவசம், வாள் ஆகியவற்றைக் கழற்றி வைக்கிறான்)
அங்கம்
– 3
காட்சி
– 1
இடம்: பாண்டிய மன்னன்
அறிவுடை நம்பியின் அரசவை
பங்கு பெறுபவர்:
பாண்டிய மன்னன் அறிவுடை நம்பி, புலவர் பிசிராந்தையார்
பின்னணி: பாண்டியன்
அறிவுடை நம்பி தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி திரட்டுகிறான்.
அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த எவரும் முன்வரவில்லை.
அந்நிலையில்,
அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு
அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு
இணங்கி,
அறிவுடை நம்பியிடம் சென்று ஓர் அரசன் எவ்வாறு வரியைத்
திரட்ட வேண்டும் என்பதைப் பற்றிக் கூறுகிறார்.
தொடர்புள்ள
புறநானூற்றுப் பாடல் எண்: 184
பிசிராந்தையார்: மன்னா, வணக்கம்.
மக்கட்பேற்றால் வரும் இன்பத்தை ஒரு செய்யுளில் நீ மிக அழகாகச் சித்திரித்திருப்பதைக்
கண்டு மகிழ்ந்தேன். உன் பெயருக்கேற்ப நீ அறிவுடையவன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நீ நீடூழி வாழ வேண்டும்.
பாண்டியன் அறிவுடை
நம்பி: நன்றி, புலவரே! என்னைப் புகழ்வதற்காகவா
இங்கு வந்தீர்கள்? வேறு ஏதாவது செய்தி இருந்தால் சொல்லுங்கள்.
பிசிராந்தையார்: உனக்குத் தெரியாதது
ஒன்றுமில்லை. உன் தந்தைக்குப் பிறகு நீ ஆட்சிக்கு வந்தவுடன், மக்களின் வரிச்சுமை அதிகமாகிவிட்டது.
அதைச் சமாளிக்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். விளைந்த நெல்லை
அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால்,
ஒரு சிறிய அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல் பல நாட்களுக்கு
யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால்,
யானை தின்பதைவிட யானையின் கால்களால்
மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து
மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களை அளித்துத்
தழைக்கும். அன்பு கெடுமாறு வரியைத் திரட்ட விரும்பினால்,
யானை புகுந்த நிலம் போலத் தானும்
பயனடையாமல் தன் நாடும் கெடும். மக்களைத் துன்புறுத்தாமல் வரிதிரட்டுங்கள்.
பாண்டியன் அறிவுடை
நம்பி: நான் அதை அறிவேன். புலவர்களுக்கும் பாணர்களுக்கும்
பொன்னும், பொருளும், யானைகளும், தேரும் என்
தந்தை குறையாது அளித்ததால், பாண்டிய நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை சரியில்லை.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிலைமை திருந்தும் என்று நினைக்கிறேன். நிலைமை திருந்தினால்,
வரிச்சுமை குறைக்கப்படும்.
பிசிராந்தையார்: புரிகிறது மன்னா!
பாண்டியன் அறிவுடை
நம்பி: கோப்பெருஞ்சோழன்தான் உங்களுடைய மன்னன் என்று
நீங்கள் கூறியதாகக் கேள்விபட்டேன். அது உண்மையா?
பிசிராந்தையார்: நான் பாண்டிய நாட்டில்
பிசிர் என்னும் ஊரில் வாழ்பவன். அதனால் நீதான் இந்த நாட்டுக்கு மன்னன் என்பதை நான்
நன்கு அறிவேன். ஆனால், நெடுநாட்களாகவே, கோப்பெருஞ்சோழனை உயிருக்கினிய நண்பனாகக் கருதுகிறேன்.
அவன் என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவன். அதனால், அவனை என் மன்னனாகவே கருதுகிறேன்.
பாண்டியன் அறிவுடை
நம்பி: தங்களுடைய உயிருக்கினிய நண்பனின் உயிருக்கு
இப்பொழுது ஆபத்து வந்திருக்கிறது. அது தெரியுமா, உங்களுக்கு?
பிசிராந்தையார்: கோப்பெருஞ்சோழனின்
உயிருக்கு ஆபத்தா?
பாண்டியன் அறிவுடை
நம்பி: ஆம். அவ்வாறுதான் ஒற்றரர்களின் மூலம் தெரிந்துகொண்டேன்.
கோப்பெருஞ்சோழனின் மனநிலை சரியில்லை என்று கூறி, அவனுடைய மக்கள் அவனிடம் இருந்து ஆட்சியைப்
பறிப்பதற்காக அவனோடு போரிடப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். தந்தைக்கும் மகன்களுக்கும்
இடையே போர்! இதுவரை நான் இதுபோன்ற போரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. (அறிவுடை நம்பி
ஏளனமாகச் சிரிக்கிறான்.)
பிசிராந்தையார்: நான் இப்பொழுதே
உறையூருக்குப் போய் என் மன்னனைக் பார்க்கப் போகிறேன். நான் விடைபெறுகிறேன், மன்னா!
பாண்டியன் அறிவுடை
நம்பி: சென்று வாருங்கள். போய் உங்கள் மன்னனைக்
காப்பாற்றுங்கள்! (மீண்டும் ஏளனமாகச் சிரிக்கிறான்)
அங்கம் – 4
காட்சி – 1
இடம்: கோப்பெருஞ்சோழனின் அரண்மனை
பங்கு பெறுபவர்கள்: புல்லாற்றூர் எயிற்றியனார்,
அமைச்சர் செம்பியன், அரண்மனைப் பணியாட்கள்
பின்னணி: அமைச்சர்
செம்பியனும் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனாரும் மன்னனைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.
ஆனால், மன்னனை அரண்மனையில் காணவில்லை.
அமைச்சர் செம்பியன்: வாருங்கள் புலவரே. மன்னனைப் பார்க்க வந்தீர்களா?
புல்லாற்றூர் எயிற்றியனார்: ஆம். அமைச்சரே! கொஞ்ச நேரமாகக் காத்திருக்கிறேன்.
அமைச்சர் செம்பியன்: நானும் காத்திருக்கிறேன். அதோ, பணியாட்கள் சிலர் வருகிறார்கள்,
அவர்களைக் கேட்போம்.
அமைச்சர் செம்பியன்: (பணியாட்களைப் பார்த்து) மன்னரைப் பார்க்க வந்திருக்கிறோம்.
மன்னர் இருகிறாரா?
பணியாள்: ஐயா! காலையிலிருந்து நாங்களும் மன்னரைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
அமைச்சர் செம்பியன்: மன்னரின் மெய்காப்பாளர்கள் எங்கே?
பணியாள்: அவர்களையும் காணவில்லை. மன்னருடைய குதிரையையும் பெய்காப்பாளர்களின்
குதிரைகளையும் காணவில்லை ஐயா.
அமைச்சர் செம்பியன்: அப்படியென்றால் மன்னரும் அவருடைய மெய்காப்பாளர்களும் எங்கோ
சென்றிருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் குதிரையில் செல்லுங்கள்; உறையூர் முழுதும் தேடுங்கள்;
சுற்றிலும் உள்ள இடங்களில் எல்லாம் தேடுங்கள். மன்னரைக் கண்டுபிடியுங்கள்! புலவரே,
நீங்கள் கடைசியாக எப்பொழுது மன்னரைச் சந்தித்தீர்கள்?
புல்லாற்றூர் எயிற்றியனார்: நான் ஒரு சில நாட்களுக்குமுன் மன்னரைச் சந்தித்தேன். ”இந்தப்
போர் வேண்டாம். இந்தப் போரில் யார் வெற்றிபெற்றாலும் அதனால் பயனில்லை. நீங்கள் வெற்றிபெற்று,
உங்கள் மக்கள் தோற்றால், உங்களுக்குப் பிறகு இந்த நாட்டை யார் ஆளப் போகிறார்கள். நீங்கள்
தோல்வி அடைந்தால், உங்களுக்கு அதனால் பழிதான் உண்டாகும்.” என்று மன்னரிடம் கூறினேன்.
நான் கூறியதைக் கேட்டவுடன், மறுமொழி எதுவும் கூறாமல், மன்னர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.
அமைச்சர் செம்பியன்: (புலவரை நோக்கி) பணியாட்கள் புறப்பட்டுவிட்டார்கள். நான் வேறு
சிலரையும் அனுப்புகிறேன். மன்னரை விரைவில் கண்டுபிடித்துவிடலாம். கண்டுபிடித்தவுடன்
நான் உங்களுக்குச் செய்தி அனுப்புகிறேன்.
அங்கம்
– 5
காட்சி – 1
இடம்: காவிரியாற்றங்கரையில் உள்ள ஒரு மண்டபம்
பங்கு பெறுபவர்கள்: கோப்பெருஞ்சோழன், அமைச்சர்
செம்பியன், புலவர் பொத்தியார், புலவர் புல்லாற்றூர் எயிற்றியார், மெய்காப்பாளர்கள்,
முதுகிள்ளி, இளங்கிள்ளி.
பின்னணி: கோப்பெருஞ்சோழன்
காவிரிக்கரையில் உள்ள மண்டபத்தில் வடக்கு நோக்கி உட்கார்ந்திருக்கிறான். அவனைச் சுற்றி
அமைச்சர் செம்பியன், புலவர் பொத்தியார், புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார், மெய்காப்பாளர்கள்,வேறு
சிலரும் இருக்கிறார்கள்.
தொடர்புள்ள
புறநானூற்றுப் பாடல் எண்: 214
புல்லாற்றூர் எயிற்றியனார்: மன்னா! இது என்ன கோலம்? ஏன் இங்கே இருக்கிறீர்கள்?
கோப்பெருஞ்சோழன்: சில நாட்களுக்குமுன் நீங்கள் என்னைச் சந்தித்தபொழுது, “விண்ணவர் உலகம் உன்னை விரும்பி வரவேற்று,
விருந்தினனாக ஏற்றுக்கொள்வதை நீ
விரும்பினால், நல்ல செயல்களைத்
தயங்காமல் செய்ய வேண்டும்.” என்று சொன்னீர்கள் அல்லவா?
புல்லாற்றூர்
எயிற்றியனார்: ஆம்.
சொன்னேன். போர் வேண்டாம் என்பதற்காகச் சொன்னேன். இப்படி வடக்கிருந்து உயிரைத்
துறக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லையே!
கோப்பெருஞ்சோழன்: நீங்கள் என்னை வடக்கிருக்கச் சொல்லவில்லை. நீங்கள்
கூறியதைக் கேட்ட பிறகு நீண்ட நேரம்
சிந்தித்தேன். வள்ளுவர், “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச்
செயல்.” என்றார். என் மக்கள் சான்றோர் அவையில் முந்தி இல்லை; எனக்கு எதிராகப் போர்க்ககளத்தில்
முந்தி இருக்கிறார்கள். இதற்குக் காரணம் நான் அவர்களைச் சரியாக வளர்க்கவில்லை. அவர்களை
எதிர்த்து நானும் போரிடத் துணிந்தேன். என் மக்களின் செயலும் என்னுடைய செயலும் எனக்கு
மிகுந்த அவமானத்தையும் வருத்தத்தையும் தருகின்றன. என் தவறுக்குப் பரிகாரமாக நான் வடக்கிருக்கிறேன்.
இது நான் செய்யும் நல்ல செயல் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.
பொத்தியார்: மன்னா! நீ வடக்கிருப்பதாக இருந்தால், நான் உன் அருகேயே ஒவ்வொரு
நாளும் இருக்கப் போகிறேன்.
கோப்பெருஞ்சோழன்: பொத்தியாரே! நீங்கள் என்னோடு ஒவ்வொரு நாளும் எனக்கு உறுதுணையாக
இருந்துவருகிறீர்கள். இப்பொழுது, உங்கள் மனைவி கருவுற்றிருக்கிறாள். இன்னும் ஒரு சில
நாட்களில் அவளுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. ஆகவே, நீங்கள் உங்கள் இல்லத்திற்குச்
செல்லுங்கள்; மனைவிக்கு உதவியாக இருங்கள்; அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு வாருங்கள்.
முதுகிள்ளி: தந்தையே! நீங்கள் ஏன் வடக்கிருக்க முடிவு செய்தீர்கள்? வடக்கிருந்து
உயிரைத் துறப்பது ஒரு தற்கொலை முயற்சி. நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே! நாங்கள்தான்
தவறு செய்தோம். எங்களை மன்னித்துவிடுங்கள். உங்கள் வாழ்நாள் முழுதும் இந்த நாட்டை நீங்கள்தான்
ஆளவேண்டும்.
இளங்கிள்ளி: ஆம். தந்தையே! நாங்கள் தவறு செய்துவிட்டோம். நாங்கள் செய்த
தவறுக்காக நீங்கள் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? எங்களை
மன்னித்துவிடுங்கள். எழுந்து வாருங்கள்; அரண்மனைக்குப் போகலாம்.
கோப்பெருஞ்சோழன்: என் ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. இனி இந்த நாட்டை நீங்களே
ஆளுங்கள். எனக்கு உங்கள்மீது கோபம் எதுவும் இல்லை. எனக்காக நீங்கள் ஒன்றே ஒன்று மட்டும்
செய்ய வேண்டும்.
முதுகிள்ளி, இளங்கிள்ளி: கூறுங்கள் தந்தையே! உங்கள் விருப்பப்படி நாங்கள் நடப்போம்.
நீங்கள் வடக்கிருக்க வேண்டாம். வாருங்கள் அரண்மனைக்குப் போகலாம்.
கோப்பெருஞ்சோழன்: இனி இந்த நாட்டை நீங்களே ஆளுங்கள். நம் நாட்டு மக்கள் பசியாலும் பிணிகளாலும் துன்பப்படாமல் காப்பாற்றுங்கள். பகைவர்களால்
நம் நாட்டு மக்களுக்கு எந்தத் துன்பமும் இல்லாதவாறு ஆட்சி செய்யுங்கள். நல்லாட்சி செய்து
நாட்டையும் மக்களையும் காப்பாற்றுங்கள். நான் மறுவுலக வாழ்க்கையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்.
நீங்கள் சென்று வாருங்கள்.
அங்கம்
– 5
காட்சி – 2
இடம்: உறையூர் அருகே, காவிரிக்கரையில் கோப்பெருஞ்சோழன்
வடக்கிருக்கும் மண்டபம்.
பங்கு பெறுபவர்கள்: கோப்பெருஞ்சோழன், அவனோடு
இருக்கும் சிலர்
பின்னணி: மன்னன்
வடக்கிருப்பது தேவையற்ற செயல் என்றும் அதனால் எந்தப் பயனும் இல்லை என்றும் சிலர் பேசி
கொள்கிறார்கள். வேறு சிலர், மன்னன் பிசிராந்தையாரைத் தன் உயிருக்கினிய நண்பராகக் கருதினாலும்,
அவர் இப்பொழுது மன்னனைக் காண வரமாட்டார் என்று போசிக்கொள்கிறார்கள். அவர்களின் பேச்சைக்
கேட்ட மன்னன் தன் கருத்தைக் கூறுகிறான்.
தொடர்புள்ள
புறநானூற்றுப் பாடல் எண்கள்: 215, 216
புலவர்களில் ஒருவர்: பாண்டிய நாட்டில் உள்ள பிசிராந்தையார் என்ற புலவர் தன்னுடைய
நெருங்கிய நண்பர் என்று மன்னன் பலமுறை கூறியதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்
அத்துணை நெருங்கிய நண்பராக இருந்தால், மன்னன் இந்த நிலையில் இருக்கும்பொழுது அவர் மன்னனைக்
காண வந்திருக்க மாட்டாரா? இந்தச் சூழ்நிலையில் இதுவரையிலும் அவர் வராதது பெரும் வியப்பாக
உள்ளது.
புலவர்களில் மற்றொருவர்: பிசிராந்தையார் இன்னும் வராதது எனக்கும் வியப்பாகத்தான் உள்ளது.
அவர் இருக்கும் இடம் இங்கிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அவர் வருவார் என்று எனக்குத்
தோன்றவில்லை.
கோப்பெருஞ்சோழன்: புலவர்களே! நீங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். பிசிராந்தையார்
என் உயிருக்கினிய நண்பர். நான் ஆட்சியிலிருந்த காலத்தில் அவர் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும்,
நான் துன்பத்தில் இருக்கும் இந்த நேரத்தில், அவர் என்னைப் பார்க்க வராமல் இருக்க மாட்டார்.
அவர் இப்பொழுதே வருவார். அவருக்கு ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள்.
அங்கம்
– 5
காட்சி – 3
இடம்: காவிரியாற்றங்கரை மண்டபம்.
பங்கு பெறுபவர்கள்: புலவர் பொத்தியார், புலவர்
கண்ணாகனார், கோப்பெருஞ்சோழன், புலவர் பிசிராந்தையார்
பின்னணி: கோப்பெருஞ்சோழன்
இறக்கும் தருவாயில் இருக்கிறான்.
தொடர்புள்ள
புறநானூற்றுப் பாடல் எண்: 220
பிசிராந்தையார்: மன்னா! என் நண்பா! நாம் இருவரும் இதுவரை சந்தித்தில்லை. ஒருவரை
ஒருவர் பார்த்துப், பழகாமலேயே, வள்ளுவர் கூறுவதைப் போல உணர்ச்சியால் ஒன்றுபட்டு, உயிருக்கினிய
நண்பர்களாக இருந்தோம். இப்பொழுது உன்னைப் பார்க்க நான் வந்திருக்கிறேன். என்னைப் பார்!
என்னோடு பேசு! என்னை விட்டுப் போகாதே! நீ என்னைவிட்டுப் போக நினைத்தால் நான் உன்னை
விட மாட்டேன். நானும் உன்னோடு வருகிறேன். என்னையும் அழைத்துக்கொண்டு போ! (மன்னன் இறக்கிறான்.
பிசிரந்தையார் அந்த இடத்திலேயே நிலைகுலைந்து, கீழே விழுந்து இறக்கிறார்.)
புலவர் ஒருவர்: ஐயோ! மன்னா! இது என்ன
கொடுமை? எங்களைவிட்டுப் போய்விட்டயே! நீ இல்லாமல் நாங்கள் எப்படி இனி வாழ்வோம்? நீ
இல்லாமல் இந்த நாடு என்ன ஆகப் போகிறதோ!
பொத்தியார்: மன்னா! என் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு என்னை வரச்சொன்னாயே!
அவளுக்கு குழந்தை பிறந்துவிட்டது. உன்னோடு நானும் வடக்கிருக்கலாம் என்று வந்திருக்கிறேன்.
அதற்குள் நீ இறந்துவிட்டாயே! பலகாலமாகப் பழகிய யானையை இழந்த பாகனைப் போல நான் வருந்துகிறேன்.
மன்னனின் உயிரைக் கொண்டுசென்ற அந்தக் கூற்றுவன் மிகவும் கொடியவன். வாருங்கள், புலவர்களே!
நாம் அனைவரும் கூடி அந்தக் கொடிய கூற்றுவனைத் திட்டுவோம்!
அங்கம்
– 5
காட்சி – 4
இடம்: கோப்பெருஞ்சோழனுக்கும், பிசிராந்தையாருக்கும்
நடுகல் வைக்கப்பட்டிருக்கும் இடம்.
பங்கு பெறுபவர்கள்: புலவர்கள், பொத்தியார்,
கண்ணாகனார், கோப்பெருஞ்சோழனின் மகன்கள் முதுகிள்ளி, இளங்கிள்ளி
பின்னணி: நடுகற்களுக்கு
வழிபாடு நடைபெறுகிறது.
தொடர்புள்ள
புறநானூற்றுப் பாடல் எண்கள்: 217, 218
பொத்தியார்: இத்துணைச் சிறப்புடைய
மன்னன் இவ்வாறு வடக்கிருப்பது என்று முடிவெடுத்ததை நினைத்தால் வியப்பாக உள்ளது. வேற்று
நாட்டில் உள்ள சான்றோனும் மன்னனும் நண்பர்களாக இருந்ததும், “என் நண்பன் பிசிராந்தையார்
என்னைப் பார்க்க வருவான்.” என்று மன்னன் உறுதியாகக் கூறியதும், மன்னன் கூறியதைப் போலவே
அந்த சான்றோன் வந்ததும் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு வியப்பாக உள்ளது.
புலவர் கண்ணாகனார்: மன்னன் இறந்ததையும், அவனோடு பிசிராந்தையாரும் இறந்ததையும் நினைத்தால்
மிகுந்த வருத்தமாகத்தான் இருக்கிறது. நிலத்திலே உள்ள பொன்னும், கடலிலே உள்ள முத்தும்
பவளமும், மலையிலே உள்ள மாணிக்கமும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், அணிகலன்கள் செய்யும்பொழுது
அவை அனைத்தும் ஒன்று சேர்வதைப்போல, சான்றோர்களாகிய மன்னனும் பிசிராந்தையாரும் இப்பொழுது
ஒன்று சேர்ந்துவிட்டார்கள்!
(அனைவரும் நடுகற்களை வழிபடுகிறார்கள்)
Comments
Post a Comment