பாண்டியன் நெடுஞ்செழியன்
பாண்டியன் நெடுஞ்செழியன் அங்கம் – 1, காட்சி – 1 இடம்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் அரண்மனை பங்குபெறுவோர்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (சேரன்) , அமைச்சர் ஆதன், படைத்தளபதி பொறையன் பின்னணி: பல ஆண்டுகளுக்குமுன், நிலந்தரு திருவிற் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த கடல்கோளால் பாண்டிய நாடு அந்த நாட்டின் ஒரு பகுதியை இழந்தது. தன் நாட்டின் ஒரு பகுதியைக் கடல் கொண்டதால், பாண்டிய மன்னன், சேர நாட்டிலிருந்து நிலங்களைக் கைப்பற்றித் தன் நாட்டோடு இணைத்துக்கொண்டான். பா ண்டிய மன்னனோடு போரிட்டுத் தன் முன்னோர்கள் இழந்த தன் நாட்டின் பகுதியை சேரன் மீட்க விரும்புகிறான். சேரன்: அமைச்சரே! பல ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த கடல்கோளால், பாண்டிய நாட்டின் ஒரு பகுதி கடலுக்குள் சென்றது. அமைச்சர் ஆதன்: அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், மன்னா. சேரன்: அப்பொழுது பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பவன், தான் இழந்த நிலத்திற்கு ஈடாக நம் நாட்டின்மீது படையெடுத்து, நம் நாட்டின் ஒரு பகுதியைத் தன் நாட்டோடு இணைத்துக்கொண்டான். அமைச்சர் ஆதன...